புதன், 31 ஜனவரி, 2024

 

ஸ்ரீமத் பகவத் கீதை

 

பதின்மூன்றாவது  அத்தியாயம்

 

க்ஷேத்ர க்ஷேத்ரஞ விபாக யோகம்

 

களங்களும் அவற்றை அறிபவனும்

 

 (இந்த அத்தியாயத்தில், க்ஷேத்ரன் என்பது யாது என்பதையும், அதன் இயல்பு எப்படிப்பட்டது என்பதையும், க்ஷேத்ரக்ஞன் என்பவன் யார் என்பதையும், உண்மையான ஞானம் என்பது எது என்பதையும் பற்றி விளக்கமாகக் கூறப்பட்டுள்ளது.)

 

1.     அர்ஜுனன் கூறினான்: “கேசவா! ‘ப்ரகிருதி’ என்பது எது? ‘புருஷன்’ என்பவன் யார்? ‘க்ஷேத்ரம்’ என்றால் என்ன? ‘க்ஷேத்ரக்ஞன்’ என்பவன் யார்? உண்மையான ஞானம் என்பது யாது? அந்த ஞானத்தால் அடையத்தக்க லட்சியம் யாது? இவற்றை நான் அறிய விரும்புகிறேன்.”

 

2.     ஸ்ரீ பகவான் கூறினார்: “குந்தியின் புதல்வனே! இந்த உடலை‘க்ஷேத்ரம்’ ( செயல்கள் நடக்கும் களம் ) என்றும், இதை முழுமையாக அறிந்தவனை ‘க்ஷேத்ரக்ஞன்’ ( செயல்கள் நடக்கும் களத்தை அறிந்தவன்) என்றும், உண்மையை ஆராய்ந்து உணர்ந்த அறிஞர்கள் அழைக்கிறார்கள்.

 

3.     பரத குலத் தோன்றலே! இந்த செயல்கள் நடக்கும் களங்களை அறிந்த ‘க்ஷேத்ரக்ஞன்’ நான் தான். இந்த உடலைச் செயல்கள் நடக்கும் களம் என்றும், நம்முள் உள்ள, இறைவனே இந்தக் களங்களை அறிந்த க்ஷேத்ரஞன் என்பதையும், அறிவது தான் உண்மையான அறிவு.

 

4.     இப்போது ‘க்ஷேத்ரம்’ என்றால் என்ன, அதனுடைய இயல்பு எப்படிப்பட்டது, அது படைக்கப்பட்டதில் இருந்து, அதற்குள் நிகழும் மாற்றங்கள் யாவை,  இந்தச்  செயல்கள் அனைத்திற்கும் அதிகாரி யார்,  அவரது சக்தி எத்தகையது என்பவைகளைப் பற்றிச் சுருக்கமாகச் சொல்கிறேன், கேள்!

 

5.     பெரிய முனிவர்கள் எல்லாம், இந்த க்ஷேத்ரத்தைப் பற்றியும், க்ஷேத்ரக்ஞரைப் பற்றியும், பலவிதமாகப் பாடியுள்ளார்கள். வேத மந்திரங்களிலும், ப்ரம்ம சூத்திரத்திலும், சரியான காரணங்களுடனும், உறுதியான சாட்சியங்களுடனும், இதைப் பற்றிச் சொல்லப் பட்டிருக்கிறது.

 

6.     இந்த க்ஷேத்ரமானது, ஐம்பூதங்கள், தான் என்னும் தன்முனைப்பு, புத்தி, உருவமற்ற ஆதி பொருள், ஐந்து ஞானேந்திரியங்கள் (கண், காது, மூக்கு, வாய், தோல்), ஐந்து கர்மேந்திரியங்கள்( குரல், கைகள், கால்கள், பிறப்புறுப்பு, ஆசனவாய்), மனம், மற்றும் புலன்கள் தேடிப்போகும் பொருட்கள் ஆகியவற்றால் ஆனது.

 

7.     விருப்பு-வெறுப்பு, இன்பம்-துன்பம், உடலைப் பற்றிய உணர்வு,  ஒரு செயலைச் செய்ய வேண்டும் என்ற எண்ணம், ஆகியவை சேர்ந்தது தான் இந்த க்ஷேத்திரமும் அதில் உண்டாகும் மாற்றங்களும்.

 

8.     பணிவு, பாசாங்குத்தனம் இல்லாமை, அஹிம்சை, மன்னிப்பு, எளிமை, குருவுக்குச் சேவை செய்தல், உடல் மற்றும் மனத்தூய்மை, உறுதி, மனக்கட்டுப்பாடு,

 

9.     உலகப்பொருட்களின் மேல் ஆசையில்லாமை, தான் என்ற அகங்காரம் இல்லாமல் இருத்தல், பிறப்பு, நோய், முதுமை,இறப்பு ஆகியவை பற்றிய நினைப்புடன் இருத்தல்,

 

10.பற்றற்றிருத்தல், மனைவி, மக்கள், வீடு முதலியவற்றின் மேல் அதீதப் பற்று இல்லாமை, மனதுக்குப் பிடித்த நிகழ்வு நடந்தாலும், மனதுக்குப் பிடிக்காத நிகழ்வு நடந்தாலும், ஒரே மாதிரி மன நிலையில் இருத்தல்,

 

11.தொடர்ந்து, வேறெதைப்பற்றியும் நினையாமல் என் மேல் வைக்கும் பக்தி, தனிமையில் விருப்பம், மக்கள் கூட்டத்தில் சேர்ந்திருப்பதில் நாட்டமின்மை,

 

12.       ஆன்மீக ஞானத்தில் நிலையான ஈடுபாடு, பரம்பொருளின் மேல் நாட்டம், இவையனைத்தும் தான் ஞானம்  என்று நான் உரைக்கிறேன். இவை தவிர மற்ற எல்லாம் அஞ்ஞானம் தான்.

 

13.        நான் இப்போது உனக்கு , எதை நிச்சயம் தெரிந்து கொள்ள வேண்டுமோ, எதைத் தெரிந்து கொண்டால், ஒருவன் நிச்சயம் மோக்ஷம் அடைவானோ, அதைத் தெரிவிக்கிறேன். அது தான் இருப்புக்கும், இல்லாமல் இருப்பதற்கும் அப்பாற்பட்ட, தொடக்கம் என்ற ஒன்றில்லாத முழு முதற் பொருளாகிய ப்ரம்மம்.

 

14.        அவருடைய கைகளும், பாதங்களும், கண்களும், தலைகளும், முகங்களும், காதுகளும், எல்லா இடங்களிலும் இருக்கின்றன ஏனெனில் அவர் அனைத்திற்குள்ளும் பரவி இருக்கிறார்.

 

15.        அனைத்துப் பொருட்களையும் அவர் உணர்கிறார்; ஆயினும் அவருக்கென்று புலன்கள் இல்லை. அவர் எதனோடும் இணைந்து இருக்கவில்லை; ஆயினும், எல்லாவற்றையும் தாங்குபவர் அவர் தான். அவருக்கென்று குணங்கள் இல்லை; ஆயினும் மூவகை குணங்களின் இயல்பை அனுபவிப்பவர் அவரே.

 

16.        அசைபவை, அசையாதவை ஆகிய உயிர்களுக்கு உள்ளேயும், வெளியேயும் அவர் இருக்கிறார். அவர் நுண்மையானவர்; எனவே புரிந்து கொள்ள முடியாதவர். அவர் வெகு தொலைவில் இருக்கிறார்; ஆனாலும் மிக அருகிலும் இருக்கிறார்.

 

17.        அவர் பிரிக்க முடியாதவர்; ஆனாலும் உயிர்களிடையே, பிரிந்து இருப்பது போல் காணப்படுகிறார்.  இந்தப் பரம்பொருள் தான் அனைத்தையும் படைப்பதும், காப்பதும், அழிப்பதும் ஆகிய முத்தொழிலைச் செய்கிறார் என்பதை அறிவாயாக!

 

18.        ஒளி வீசும் பொருள்களுக்கெல்லாம் ஒளியின் ஆதாரம் அவர் தான். அவர் அறியாமை என்னும் இருளுக்கு முற்றிலும் அப்பாற்பட்டவர். அவரே அறிவு, அறியப்படும் பொருள், மற்றும் அறிவின் குறிக்கோள். அவர் வாழும் உயிர்களின் உள்மனத்தில் வசிக்கிறார்.

 

19.        இதுவரை, நான் க்ஷேத்திரத்தின் இயல்பு பற்றியும், அறிவு என்றால் என்ன என்பது பற்றியும், அறிவின் குறிக்கோள் என்ன என்பது பற்றியும் உனக்கு சுருக்கமாகச் சொல்லியிருக்கிறேன். என் பக்தர்கள் இதைச் சரியாகப் புரிந்து கொண்டு, என் தெய்வீக நிலையை அடைகிறார்கள்.

 

20.        பிரக்ருதி ( இயற்கை), புருஷன்(உள் உறையும் ஆத்மா) இவையிரண்டுமே, தொடக்கம் என்பதே இல்லாது, எப்போதும் இருப்பவை என்று தெரிந்து கொள். மேலும், உடலில் உண்டாகும் அனைத்து மாற்றங்களும், மூவகை குணங்களும், இந்த இயற்கையின்  சக்தியாலேயே உண்டாகின்றன என்பதையும் தெரிந்து கொள்.

 

21.        இவ்வுலகில் உண்டாகும் காரிய காரணங்களுக்கு, பிரக்ருதி என்னும் இயற்கையின் ஆற்றல் தான் பொறுப்பு. ஆனால், இன்பத்தையும், துன்பத்தையும், ஒருவரின் உள் உறையும் ஆத்மாவே (புருஷன்)  அனுபவிக்கிறது என்று சொல்லபடுகிறது.

 

22.        ஆத்மாவானது (புருஷன்) இயற்கையின் ஆற்றலுக்குட்பட்டு, (பிரக்ருதி) மூவகை குணங்களையும் அனுபவிக்க விரும்பும் போது, அவைகள் மீது உண்டாகும் பற்றினால், உயர்ந்த அல்லது தாழ்ந்த கருவறைகளில் பிறப்பு எடுக்கிறது.

 

23.        இந்த உடலுக்குள்ளேயே இறைவனும் வசிக்கிறார். அவர் தான் எல்லாவற்றுக்கும், சாட்சியாகவும், எல்லாவற்றையும் அனுமதிப்பவராகவும், தாங்குபவராகவும், அனுபவிப்பவராகவும், கட்டுப்படுத்துபவராகவும் விளங்கும் பரமாத்மா.

 

24.       பரமாத்மாவைப் பற்றியும், ஜீவாத்மா, இயற்கையின் இயல்பு, மூவகை குணங்களுடன் அதன் தொடர்பு ஆகியவற்றையும் புரிந்து கொண்டவர்கள் இப்போது எந்த நிலைமையில் இருந்தாலும், மீண்டும் இவ்வுலகில் பிறக்க மாட்டார்கள்.

 

25.       சிலர் இந்தப் பரம்பொருளை தியானத்தின் மூலம் தங்கள் இதயத்தில் தரிசிக்க முயல்கிறார்கள். வேறு சிலர் தங்கள் மனத்திலும், சிலர் ஞானத்தின் மூலமாகவும், மற்றும் சிலர் கர்ம யோகத்தின்( செயல்கள் மூலம்) மூலமாகவும் தரிசிக்க முயல்கிறார்கள்.

 

26.       இவர்கள் போல அன்றி, இத்தகைய ஆன்மீக வழிகளைப்பற்றி சிறிதும் அறியாதவர்கள் கூட, சாதுக்கள் இறைவனைப்பற்றியும், அவனை வழிபடும் முறைகள் பற்றியும் கூறக் கேட்டு, அதன் படி வழிபடுகிறார்கள். அவர்களும், தங்கள் பக்தியால் கொஞ்சம் கொஞ்சமாக இந்தப் பிறவிக்கடலைக் கடந்து விடுதலை பெறுகிறார்கள்.

 

27.       பரத வம்சத்தினருள் சிறந்தவனே! இந்த உலகில் காணப்படும் அசையும் பொருள், அசையாப் பொருள் அனைத்துமே, செயல் நடக்கும் இந்த க்ஷேத்திரமும், அவையனைத்தையும் அறிந்த க்ஷேத்ரஞனும் இணைந்து செயல் படுவதால் தான் உண்டாகின்றன.

 

28.       அனைத்து உயிர்களிலும், சமமாகக் காணப்படும் பரமேஸ்வரன் தான், அழியக்கூடிய இந்த உலக உயிர்கள் அனைத்திலும், அழியாப் பொருளாக இருக்கிறார் என்பதை அறிந்தவன் தான் உண்மையான அறிஞன்.

 

29.       எல்லா இடங்களிலும், எல்லா உயிர்களிலும், சமமாகப் பரவி இருப்பவர் பரமாத்மா தான் என்பதை உணர்ந்தவர்கள், பிறரைக் கீழாக நினைத்துத் தங்கள் மனத்தைத் தாழ்த்திக் கொள்வதில்லை. அத்தகையவர்கள் தான் பரம பதத்தை அடைகிறார்கள்.

 

30.       இயற்கையின் ஆற்றலால் தான் அனைத்துச் செயல்களும் நடைபெறுகின்றன என்றும், எந்தச் செயலையும் தான் செய்வதில்லை என்பதையும் உணர்ந்தவன் தான் உண்மையான அறிஞன்.

 

31.       பல வேறு விதமான உயிர்கள் அனைத்தும், இயற்கையின் இயல்பிலே தான் அமைந்திருக்கின்றன என்றும், இயற்கையில் இருந்து தான் அனைத்துமே உண்டாகின்றன என்றும், உணர்ந்தவர்கள் பிரம்மஞானத்தை அடைகிறார்கள்.

 

32.       குந்தியின் மகனே! தொடக்கமும், அழிவும், குணங்களும் அற்ற இந்தப்பரம்பொருள், இந்த உடலில் இருந்தாலும், அது எதையும் செய்வதில்லை; எதனாலும் பந்தப்படுவதில்லை.

 

33.       அனைத்தையும் தன்னுள் தாங்கியிருந்த போதும், தான் சுமந்து கொண்டிருக்கும் பொருட்களால் நுண்மையான ஆகாயம் மாசடைவதில்லை. அதே போல, அனைத்து உயிர்களிலும், அவற்றின் உடல்களிலும் பரவி இருந்தாலும், அந்த உடல்களின் குணங்களாலோ, செயல்களாலோ, பரமாத்மா பந்தப்படுவதில்லை.

 

34.       ஒரே ஒரு சூரியன் சூரிய குடும்பம் அனைத்துக்கும் ஒளியை வழங்குவதைப்போல, இந்த உடலுக்குள் இருக்கும் ஆத்மா, இந்த உடலுக்கு உணர்வை அளித்து அதை விளங்கச் செய்கிறது.

 

35.       இந்த உடலுக்கும் அதை அறிந்தவனான இறைவனுக்கும் உள்ள வேறுபாடுகள் பற்றியும்,  இந்த உயிரானது இயற்கையின் செயல்பாடுகளில் இருந்து விடுபடும் வழிமுறைகளையும், அறிவுக்கண்களால் கண்டு, புரிந்து கொள்பவன் பரம பதத்தை அடைகிறான்.

 

சுபம்

 

https://www.blogger.com/blog/post/edit/8301939112718011873/1206652939047101039

https://www.blogger.com/blog/posts/8301939112718011873


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக