புதன், 31 ஜனவரி, 2024

                                                         ஸ்ரீமத் பகவத் கீதை

 

பதினான்காவது அத்தியாயம்

 குணத்ரய விபாக யோகம்

 மூவகை குணங்களைப் பற்றிய விளக்கம்

 (இந்த அத்தியாயத்தில் ஸத்வம், ரஜஸ், தமஸ் ஆகிய மூன்று வகை குணங்களின் இயல்பைப்பற்றியும், அவை மேலோங்கி இருக்கும் போது மனிதன் எவ்வாறு நடந்து கொள்கிறான் என்பதையும், இந்த மூன்று குணங்களையும் கடந்து அவற்றுக்கு அப்பால் இருப்பதால் மட்டுமே, இறைவனை அடைய முடியும் என்பதையும் ஸ்ரீ கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு விளக்குகிறார்.)


1.     ஸ்ரீ பகவான் கூறினார்: "ஞானத்திலேயே, மிக உயர்ந்த ஞானத்தை மீண்டும் உனக்கு உபதேசிக்கிறேன். அதை அறிந்ததால் சிறந்த முனிவர்கள் யாவரும் சித்தி அடைந்திருக்கிறார்கள்.

 

2.     இந்த ஞானத்தை அடைந்தவர்கள் என்னுடன் இணைந்து விடுகிறார்கள். படைப்பு நடைபெறும் பொழுது அவர்கள் பிறப்பதில்லை. பிரளயம் வந்து அனைத்தும் அழிந்து, இல்லாமல் போகும் போதும், அவர்கள் அழிவதில்லை.

 

3.     இயற்கை தான் அனைத்துக்குமான கருவறை. நான் தான் அந்த பிரம்மாண்டமான கருவறையில் தனித் தனியாக ஆத்மாக்களை வைத்துக் கருவடையச் செய்கிறேன்.

 

4.      குந்தியின் புதல்வனே! உலகில் படைக்கப்பட்ட அத்தனை உயிர்களுக்கும், இந்த இயற்கை தான் பிரம்மாண்டமான கருவறை. விதையை அளித்து, அதில் உயிர்களை உற்பத்தி செய்யும் தந்தை நான்.

 

5.     வலிமையான தோள்களை உடைய அர்ஜுனா! இயற்கையின் சக்தியானது, ஸத்வம்( நல்ல குணம்), ரஜஸ் ( தீவிரமான உணர்ச்சிகள்), தமஸ்( அறியாமை) என்ற மூன்று வகை குணங்களால் ஆனது. இந்த மூன்று குணங்கள் அழிவற்ற ஆத்மாவை, அழியக்கூடிய உடலில் பிணைக்கின்றன.

 

6.     இவைகளுள், ஸத்வ குணமானது நன்மைகளின் வழி செல்லும். இது பிற குணங்களைக் காட்டிலும் தூய்மையானது; பிரகாசமானது; நல்வாழ்வு தருவது. பாவமற்றவனே! இந்த குணம், மகிழ்ச்சியாக இருப்பதிலும், அறிவைத் தேடுவதிலும் ஈடுபாடு உண்டாக்கி, ஆத்மாவைப் பிணைக்கிறது.

 

7.     குந்தியின் புதல்வனே! ரஜோ குணம் என்பது தீவிரமான உணர்ச்சிகளால் ஆனது. இந்த குணம், உலகப்பொருட்களின் மீதும், பலன் தரக்கூடிய செயல்களின் மீதும் பற்றை உண்டாக்கி, ஆத்மாவைப் பிணைக்கிறது.

 

8.     பரத வம்சத்தவனே! அறியாமையில் பிறக்கும் தமோ குணமானது உயிர்களின் மோகத்துக்குக் காரணமாக அமைகிறது. அது, அலட்சியம், சோம்பேறித்தனம் மற்றும் தூக்கத்தின் மூலம் உயிர்கள் அனைத்தையும் ஏமாற்றுகிறது.

 

9.     பரத குலத்தோன்றலே! ஸத்வ குணமானது ஒருவனை மகிழ்ச்சியுடன் இணைக்கிறது. ரஜோ குணம் ஒருவனை ஏதாவது செயல் செய்யத் தூண்டுகிறது. தமோ குணமோ, ஒருவனின் அறிவைத் திரையிட்டு மறைத்து, அவனை மோகத்தில் கட்டுண்டு கிடக்கச் செய்கிறது.

 

10.அர்ஜுனா! சில சமயங்களில் ஸத்வ குணம், ரஜோ குணத்தின் மீதும், தமோ குணத்தின் மீதும் ஆதிக்கம் செலுத்தித் தன்னை நிலை நிறுத்திக்கொள்கிறது. பிற சமயங்களில், ரஜோ குணம், ஸத்வ குணத்தின் மீதும், தமோ குணத்தின் மீதும் ஆதிக்கம் செலுத்தித் தன்னை நிலை நிறுத்திக்கொள்கிறது. மற்றும் பிற சமயங்களில், தமோ குணம், ஸத்வ குணத்தின் மீதும், ரஜோ குணத்தின் மீதும் ஆதிக்கம் செலுத்தித் தன்னை நிலை நிறுத்திக்கொள்கிறது.

 

11.உடலின் எல்லாத் துவாரங்களும் அறிவால் ஒளிரும் போது, ஸத்வ குணம் வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதைத் தெரிந்து கொள். 

 

12.அர்ஜுனா! ரஜோ குணம் ஆதிக்கம் செலுத்தும் போது பேராசை, உலக லாபங்களுக்காக உழைப்பதில் விருப்பம், அமைதியின்மை, ஏக்கம் ஆகியவை உண்டாகின்றன.

 

13.பரத வம்சத்தவருள் சிறந்தவனே! அறியாமை, சோம்பல், அலட்சியம், மோகம் ஆகியவை தான் தமோ குணத்தின் முக்கியமான லட்சணங்கள்.

 

14.ஸத்வ குணம் மேலோங்கி இருக்கும் போது மரணம் எய்துபவர்கள், உன்னதமான, தூய (ரஜோ குணம், தமோ குணம் ஆகியவை இல்லாத) உலகங்களை அடைகிறார்கள்.

 

15.ரஜோ குணம் மேலோங்கி இருக்கும் போது மரணம் எய்துபவர்கள், எப்போதும் வேலையில் ஈடுபடும் மக்களிடையே பிறக்கிறார்கள். அறியாமை நிறைந்த தமோ குணம் மேலோங்கி இருக்கும் போது மரணம் எய்துபவர்கள், விலங்குகளாகப் பிறக்கிறார்கள்.

 

16.ஸத்வகுணம் மேலிட்டிருக்கும் போது செய்யப்படும் செயல்கள், தூய்மையான பலன்களைக் கொடுக்கின்றன. ரஜோகுணம் மேலிட்டிருக்கும் போது செய்யப்படும் செயல்கள் துன்பத்துக்கு வழிவகுக்கின்றன. தமோகுணம் மேலிட்டிருக்கும் போது செய்யப்படும் செயல்கள்,மேலும் மேலும், அறியாமை என்னும் இருளில் தள்ளுகின்றன.

 

17.ஸத்வகுணத்திலிருந்து ஞானம் எழுகிறது. ரஜோகுணத்தில் இருந்து பேராசை உண்டாகிறது. தமோ குணத்திலிருந்து அலட்சியமும், மோகமும், அறியாமையுமே விளைகின்றன.

 

18.ஸத்வகுணம் நிறைந்திருப்பவர்கள் மேலெழுந்து உயர்கிறார்கள். ரஜோகுணம் நிறைந்திருப்பவர்கள், உயர்வும் இல்லாத, தாழ்வும் இல்லாத நடுநிலையை அடைகிறார்கள். தமோகுணம் நிறைந்திருப்பவர்கள் கீழ் நிலைக்குச் சென்று விடுகிறார்கள்.

 

19.எல்லாச் செயல்களையும் செய்வது இந்த ஸத்வம், ரஜஸ், தமஸ் என்ற மூன்று குணங்களே அன்றி வேறல்ல என்றும், நான் இந்த மூன்று குணங்களுக்கு அப்பாற்பட்டவன் என்றும் அறியும் ஞானிகள், என்னுடைய தெய்வீகமான இயல்பைப் பெறுகிறார்கள்.

 

20.உடலுடன் சம்பந்தப்பட்ட இந்த மூன்று குணங்களையும் தாண்டிச் செல்லும் ஒருவன், பிறப்பு, இறப்பு, முதுமை, துன்பம் ஆகியவற்றிலிருந்து விடுபட்டு, அமரத்வம் எய்துகிறான். “

 

21.அர்ஜுனன் கேட்டான்: ”ப்ரபோ! இந்த மூன்று குணங்களையும் தாண்டிச் செல்பவர்களின் அடையாளங்கள் யாவை? அவர்கள் எப்படி நடந்து கொள்வார்கள்? அவர்கள் எவ்வாறு இந்த மூன்று குணங்களையும் தாண்டிச் செல்கிறார்கள்?”

 

22.ஸ்ரீ பகவான் கூறினார்: “இந்த மூன்று குணங்களுக்கும் அப்பாற்பட்டவர்கள், ஒளி மயமான ஸத்வகுணமோ, செயல்களில் ஈடுபட்டிருக்கும் ரஜோ குணமோ, அறியாமை நிறந்த தமோ குணமோ மேலிட்டுள்ள போது, அவைகளை வெறுப்பதும் இல்லை; அந்த குணங்கள் இல்லாத போது, அவற்றுக்காக ஏங்குவதும் இல்லை.

 

23.இந்த குணங்களின் இயல்பைப் புரிந்து கொண்டு அவர்கள் நடு நிலையில் இருக்கிறார்கள்; இவற்றால் சலனமடைவதில்லை. எல்லாச் செயல்களையும், உண்மையில் செய்பவை இந்த குணங்களே என்பதை உணர்ந்ததனால், அவர்கள் எந்தச் சலனமும் இன்றித் தனக்குள்ளே ஆழ்ந்து இருக்கிறார்கள்.

 

24.இன்பத்திலும் துன்பத்திலும், ஒரே மாதிரி நடந்து கொள்பவர்கள், தனக்குள்ளே ஆழ்ந்திருப்பவர்கள், மண் கட்டியையும், கல்லையும் பொன்னையும் ஒன்றே போல் பார்ப்பவர்கள், நன்மை வந்தாலும், கெடுதல் வந்தாலும் ஒரே மாதிரி இருப்பவர்கள், அறிவாளிகள், புகழ்ச்சியையும், இகழ்ச்சியையும் சமமாக எடுத்துக் கொள்பவர்கள்,

 

25.கௌரவம் வந்தாலும் அவமானம் வந்தாலும், தன் நிலை மாறாதவர்கள், நண்பனையும், பகைவனையும் ஒன்றே போல் நடத்துபவர்கள், எல்லாவிதமான செயல்களையும் கை விட்டவர்கள்–– இவர்கள் தான் இந்த மூன்று குணங்களைத் தாண்டி மேலெழுந்தவர்கள்.

 

26.கலப்படமில்லாத தூய்மையான பக்தியுடன் எனக்கு சேவை செய்பவர்கள், இந்த மூன்று குணங்களின் இயல்பையும் கடந்து பிரம்மத்துக்கு இணையாக ஆகிறார்கள்.

 

27.அமரத்துவம் நிறைந்த, அழிவற்ற, நிரந்தரமான, முடிவில்லாத தெய்வீக ஆனந்தத்தின் வடிவான, உருவமற்ற பிரம்மத்துக்கு நான் தான் ஆதாரம்.

 

சுபம்

 

 

https://www.blogger.com/blog/post/edit/8301939112718011873/252992829035037064

https://www.blogger.com/blog/posts/8301939112718011873

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக