ஸ்ரீமத் பகவத் கீதை
பன்னிரண்டாவது அத்தியாயம்
(அர்ஜுனன் ஸ்ரீக்ருஷ்ணரிடம், ‘உன்னை உருவமுள்ள பரம்பொருளாகப்
பூஜிப்பது சிறந்ததா அல்லது உருவமற்ற பரம்பொருளாகத் தியானிப்பது சிறந்ததா?’ என்று கேட்கிறான்.
ஸ்ரீ க்ருஷ்ணர், ‘இரண்டுமே சிறப்பு வாய்ந்த வழிகள் என்றாலும், இறைவனிடம் சரணடைந்து
அவன் மேல் பக்தி செலுத்துபவர்கள் இறைவனை எளிதில் அடைகிறார்கள்’ என்று பதில் கூறுகிறார்.
செய்யும் செயல்களின் பலன்களையெல்லாம் இறைவனுக்கு அர்ப்பணித்து விட்டாலே போதும், என்கிறார்.
மேலும், தூய்மையான பக்தர்கள் எப்படி இருப்பார்கள் என்றும் விரிவாக விளக்குகிறார்.)
1.
அர்ஜுனன் கேட்டான்: “உன்னுடைய உருவத்தின்
மேல் நிலையான பக்தி கொண்டவர்கள், உன்னை உருவமற்ற பரம்பொருளாக எண்ணி வழிபடுபவர்கள்––இந்த
இரண்டு வகை மனிதர்களில், யார் யோகத்தில் சிறந்தவர்கள் என்று நீ நினைக்கிறாய்?”
2.
ஸ்ரீ பகவான் கூறினார்: “என் மேல் மனத்தைச்
செலுத்தி, எப்போதும் என் பக்தியில் நிலையாக இருப்பவர்களைத் தான் மிகச் சிறந்த யோகிகள்
என்று நான் நினைக்கிறேன்.
3.
ஆயினும், அழிவற்ற, வரையறைக்குட்படாத, உருவமற்ற, எல்லா இடங்களிலும்
பரவியுள்ள, நினைத்துப்பார்க்க முடியாத, மாற்றமே இல்லாத, அசைக்க முடியாத, நிரந்தரமான
பரம்பொருளைத்
4.
தங்கள் புலன்களைக் கட்டுப்படுத்தி, எல்லா
இடத்திலும் ஒரே மாதிரியான மன நிலையுடன், வழிபடுபவர்களும், எல்லா உயிர்களுக்கும் நன்மையே
செய்பவர்களும், என்னை அடைகிறார்கள்.
5.
இறைவனை, உருவமற்ற பரம்பொருளாக மனதில்
நினைத்துக் கொண்டு, அந்த வழியில் ஞானம் பெற
முயல்பவர்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகிறார்கள். அது மிகவும் கடினமான வழி.
6.
ஆனால், தங்கள் செயல்களையெல்லாம் எனக்கு அர்ப்பணித்து விட்டு, என்னையே மகத்தான லட்சியமாகக்கொண்டு,
என்னையே வழிபட்டு,
7.
என்னையே தியானித்திருப்பவர்களை, பிறப்பு,
இறப்பு என்னும் பெருங்கடலில் இருந்து மேலெழுப்பிக் காப்பாற்றுகிறேன்.
8.
என் மேல் மனத்தைச் செலுத்தி, உன் புத்தியை
எனக்கு அர்ப்பணித்து விடு. அப்படிச் செய்தாயானால், நீ எப்போதும் என்னுள்ளே இருப்பாய்.
இதில் யாதொரு ஐயமும் இல்லை.
9.
தனஞ்சயனே! உன்னால் என் மேல் மனத்தைத்
தொடர்ந்து செலுத்த முடியாவிட்டால், உலக விஷயங்களில் இருந்து மனதை விலக்கி, என்னையே
பக்தியுடன் நினைத்துக் கொண்டிருக்கும் பயிற்சி செய்!
10.அப்படி
என்னை நினைத்துக் கொண்டு பயிற்சி செய்வதும் உன்னால் முடியவில்லை என்றால், நீ செய்யும்
வேலைகளை எல்லாம் எனக்காகச் செய். அவ்வாறு, எனக்காக பக்தியுடன் நீ செயலாற்றி வந்தாலே
முழுமையடைந்து விடுவாய்.
11.பக்தியுடன்
எனக்காக வேலை செய்வதும் உன்னால் முடியாதென்றால், என் மேல் மனத்தை வைத்து, உன் செயல்களுக்கான
பலன்களைத் துறந்து விடு.
12.வெறும்
பயிற்சியைக்காட்டிலும், ஞானம் உயர்ந்தது. ஞானத்தைக்காட்டிலும் உயர்ந்தது தியானம். தியானத்தைக்காட்டிலும்
உயர்ந்தது செயல்களின் பலன்களைத் துறந்து விடுவது. ஏனென்றால், அவ்வாறு பலன்களைத் துறப்பதால்
உடனடியாக அமைதி கிட்டுகிறது.
13.எவர்
மீதும் வெறுப்பு இன்றி, எல்லாரிடமும் நட்புடனும், கருணையுடனும் பழகி, ‘நான்’, ‘எனது’
என்னும் எண்ணங்களை விடுத்து, இன்பத்தையும், துன்பத்தையும் ஒரே மாதிரி எடுத்துக் கொண்டு,
எப்போதும் மன்னிக்கத் தயாராக இருப்பவர்களும்,
14.எப்போதும்
திருப்தியுடன் இருப்பவர்களும், என் மேல் பக்தியுடன் தொடர்ந்து இணைந்திருப்பவர்களும்,
தன்னை அடக்கியவர்களும், உறுதியான தீர்மானம் உடையவர்களும், தங்கள் மனதையும் , புத்தியையும்
எனக்கு அர்ப்பணித்தவர்களும், எனக்கு மிகவும் பிரியமானவர்கள்.
15.தங்கள்
செயல்களால் பிறருக்கு எரிச்சல் ஏற்படுத்தாத, பிறருடைய செயல்களால் எரிச்சல் அடையாத,
இன்பத்திலும், துன்பத்திலும் ஒரே மாதிரி நடந்து கொள்கின்ற, பயம், கவலை ஆகியவை இல்லாத
என் பக்தர்கள் எனக்கு மிகவும் பிரியமானவர்கள்.
16.உலக
லாபங்களின் மேல் அக்கறையில்லாத, உள்ளும், புறமும் தூய்மையான, திறமைசாலிகளான, கவலையில்லாத,
எதற்கும் சங்கடப்படாத, எந்தப் பொறுப்பேற்றாலும், அதைச் சுய நலம் இல்லாமல் செய்து முடிக்கக்கூடிய
எனது பக்தர்கள் எனக்கு மிகவும் பிரியமானவர்கள்.
17.உலக
இன்பங்கள் கிடைக்கும் போது அளவுக்கதிகமாக மகிழ்ச்சி கொள்ளாத,
துன்பங்கள் வரும் போது ஒரேயடியாக சோர்ந்து போகாத, எதையும் இழந்து
விட்டால் புலம்பி அழாத, எப்போதும், ஏதாவது வேண்டும் என்று ஏங்கித் தவிக்காத, நல்ல மற்றும்
கெட்ட செயல்களை விட்டு விட்ட, என் பக்தர்கள் எனக்கு மிகவும் பிரியமானவர்கள்.
18.நண்பனையும்,
பகைவனையும் ஒன்றே போல் பார்க்கின்ற, கௌரவம் கிடைத்தாலும் அவமதிக்கப் பட்டாலும் சம நிலையில் இருக்கின்ற, குளிர்ச்சி,
வெப்பம், இன்பம், துன்பம் போன்ற எந்த நிலையிலும் சலனப் படாத,
19.புகழ்ச்சியையும்,
இகழ்ச்சியையும் ஒரே மாதிரி எடுத்துக் கொள்கின்ற, அதிகம் பேசாமல் மௌனமாக இருக்கின்ற,
எது கிடைத்தாலும் அதைக் கொண்டு திருப்தி அடைகின்ற, தங்கள் இருப்பிடத்தின் மீது பற்றுக்கொள்ளாத,
என் மேல் தொடர்ந்து புத்தியைச் செலுத்துகின்ற என் பக்தர்கள் எனக்கு மிகவும் பிரியமானவர்கள்.
20.இங்கே
கொடுக்கப்பட்ட தர்மமாகிய அமுதத்தை மதிப்பவர்களும், என் மேல் நம்பிக்கை உடையவர்களும்,
என் மேல் பக்தி வைத்து, என்னை அடைவதையே தங்களுடைய உன்னத குறிக்கோளாகக் கொண்டவர்களுமான
எனது பக்தர்கள் எனக்கு மிகவும் பிரியமானவர்கள்.
சுபம்
https://www.blogger.com/blog/post/edit/8301939112718011873/3397059299329670561
https://www.blogger.com/blog/posts/8301939112718011873
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக