திங்கள், 27 நவம்பர், 2023

 

ஸ்ரீமத் பகவத் கீதை

 

ஏழாவது  அத்தியாயம்

 

ஞான விஞ்ஞான யோகம்

 

(இறைவனைப்பற்றிய உண்மையான அறிவு)


 (ஸ்ரீ பகவான் அர்ஜுனனுக்கு இவ்வாறு உபதேசிக்கிறார்: ‘ பக்தி யோகத்தின் மூலம் இறைவனைச் சரணடைவது தான் இறைவனை உணர்வதற்கான  ஒரே வழி. இந்த உயிர்கள் ஐம்பூதங்களும், மனம், புத்தி, அஹங்காரம் ஆகியவற்றால் ஆகியவை, அவைகளுக்குள் இருக்கும் ஆத்ம சக்தி தான் அவைகளை இயக்குகிறது. எல்லாப் பொருட்களிலும், அவற்றின் சாரமாக இறைவன் இருக்கிறார். இறைவனுடைய மாய சக்தி தான் சத்வம், ரஜஸ், தமஸ் என்ற முக்குணங்களாக வெளிப்படுகிறது. அந்த மாயசக்தியை வெல்வது மிகவும் கடினம். ஆனால், பக்தி பூர்வமாக செயல்கள் செய்வதால் இந்த மாயையின் விளைவுகளில் இருந்து ஒருவர் விடுபடலாம்.)

1.     ஸ்ரீ கிருஷ்ணர் கூறினார்: “ அர்ஜுனா! நான் சொல்வதைக் கேள்! என் மேலே பற்று வைத்து, பக்தி யோகத்தின் மூலம் என்னையே சரணடைவதன் மூலம் என்னை முழுமையாக உணர்வாய். இதில் சந்தேகமேயில்லை.

 

2.     இப்பொழுது நான் உனக்கு இந்த ஞானத்தை முழுமையாக அளிக்கிறேன். இதை அறிந்த பின்னர், இந்த உலகத்தில் அறியத்தக்கது என்று எதுவும் இல்லை.

 

3.     ஆயிரக்கணக்கான மனிதர்களில் வெகு சிலரே முழுமை அடைய முயற்சிக்கிறார்கள். அப்படி முழுமையடைந்த ஒரு சிலருக்குள்ளும் என்னை உள்ளபடி உணர்ந்தவர் அபூர்வமே!

 

4.     பூமி, தண்ணீர், நெருப்பு, காற்று, ஆகாயம், மனம், புத்தி, தன்முனைப்பு இந்த எட்டும் என்னுடைய இயற்கையான இயல்புகள்.

 

5.     தோள் வலிமையுடைய அர்ஜுனா! இதைத் தாண்டி எனக்கு வேறொரு உன்னதமான ஆற்றல் உண்டு. அது தான் இந்த உலகம் இயங்குவதற்கு ஆதாரமாக இருக்கும், உயிர்களின் உள்ளே இருக்கும் ஆத்ம சக்தி.

 

6.     என்னுடைய இந்த இரண்டு வகையான ஆற்றல்களில் இருந்து தான் அனைத்து உயிரினங்களும் வெளிப்படுகின்றன. இந்தப் படைப்பனைத்தும் என்னில் இருந்து உருவாகி, மீண்டும் என்னுள்ளே ஒடுங்குகிறது.

 

7.     தனஞ்சயனே! என்னைக்காட்டிலும் உயர்ந்த வஸ்து எதுவும் இல்லை.  மணிகள் கயிற்றில் கோர்க்கப் பட்டிருப்பது போல, அனைத்தும் என்னில் கோர்க்கப் பட்டிருக்கின்றன.

 

8.     குந்தியின் புதல்வனே! நீரில் சுவையாகவும், சூரிய சந்திரர்களில் ஒளியாகவும், வேத மந்திரங்களில் ப்ரணவமாகவும் (ஓம்), ஆகாயத்தில் ஒலியாகவும், மனிதர்களில் அவர்களுடைய திறமையாகவும் நான் இருக்கிறேன்.

 

9.     பூமியின் தூய்மையான மணமாகவும், நெருப்பின் பிரகாசமாகவும், அனைத்து உயிர்களின் உயிர்ச்சக்தியாகவும், தவசிகளின் தவமாகவும் இருப்பது நான் தான்.

 

10.பார்த்தனே! எல்லாக் காலங்களிலும், அனைத்து உயிர்களுக்கும் நான் தான் விதை என்பதை அறிந்து கொள்! புத்திசாலிகளில் புத்தியாகவும், தேஜஸ் உடையவர்களின் தேஜஸாகவும் இருப்பதுவும் நான் தான்.

 

11.பரதவம்சத்தவருள் சிறந்தவனே! பலமுடையவர்களில் நான் பலமாக இருக்கிறேன். தர்மத்துக்குட்பட்ட புலனின்பமாக இருப்பதுவும் நான் தான்.

 

12.என் சக்தி தான், சத்வம், ரஜஸ், தமஸ் என்ற மூன்று குணங்களாக வெளிப்படுகிறது. அந்தக் குணங்கள் என்னில் இருக்கின்றன. ஆனால், நான் அந்த குணங்களுக்கு அப்பாற்பட்டவன்.

 

13.இவ்வாறு மூன்று விதமாகச் செயல்படும் இந்த மாயை மனிதர்களை ஏமாற்றுவதால், அவர்களால், அழியாமல், நிரந்தரமாய் இருக்கும் என்னை அறிய முடிவதில்லை.

 

14.இவ்வாறு, முக்குணங்களாக வெளிப்படுகின்ற என்னுடைய தெய்வீக சக்தியான மாயையை வெல்வது மிகவும் கடினம். ஆனால், என்னைச் சரணடைந்தவர்கள் இதை எளிதில் கடந்து விடுவார்கள்.

 

15.அறியாமை நிறைந்தவர்கள், என்னை உணரும் திறமை இருந்தும்,  தனது கீழான இயல்புகள் வழியே செல்பவர்கள், மாயைக்குட்பட்டுத் தன் அறிவை இழந்தவர்கள், அரக்க குணம் படைத்தவர்கள்–– இந்த நான்கு வகை மனிதர்களும் என்னைச் சரணடைவதில்லை.

 

16.அர்ஜுனா! பரத வம்சத்தவருள் சிறந்தவனே! துன்பத்தில் இருப்பவர்கள், ஞானத்தை நாடுபவர்கள், உலகப்பொருட்களை விரும்புபவர்கள், உண்மையான ஞானிகள்––இந்த நான்கு விதமான மனிதர்கள் என்னை பக்தியுடன் நாடுகிறார்கள்.

 

17.இவர்களுக்குள், என்மேல் மட்டுமே பக்தி வைத்து, அறிவு பூர்வமாகவும், தீவிரமாகவும் வழிபடுபவர்களை மிக உயர்வாக நான் கருதுகிறேன். நான் அவர்களுக்கு மிகவும் பிரியமானவன்; அவர்களும் எனக்கு மிகவும் பிரியமானவர்கள்.

 

18.என்னிடம் பக்தி கொண்டவர்கள் அனைவரும் சிறந்தவர்கள் தாம். ஆயினும், தங்கள் அறிவை என்னுள்ளே கலந்து, என்னை மட்டுமே அவர்களுடைய மேலான இலட்சியமாகக்கருதி, என்னைத் தீவிரமாக வழிபடுபவர்களை, நானாகவே கருதுகிறேன். (நானே அவர்கள், அவர்களே நான்.)

 

19.பல பிறவிகளில் ஆன்மீகப் பயிற்சி மேற்கொண்டு, ஞானம் பெற்றவர்கள், என்னையே எல்லாமாகக் கருதி, என்னைச் சரணடைகிறார்கள். அத்தகைய மகாத்மாக்கள் மிகவும் அரிதானவர்கள்.

 

20.உலகப்பொருட்களின் மீது நாட்டம் கொள்பவர்கள் பிற தேவதைகளைச் சரணடைகிறார்கள். அவரவருடைய இயல்புக்கேற்றபடி, அந்தத் தேவதைகளை மகிழ்விக்க வேண்டிச் சடங்குகள் மூலம் வழிபடுகிறார்கள்.

 

21.எந்த எந்த தேவதைகளை வழிபடுவதில் நாட்டம் கொள்கிறார்களோ, அந்த அந்த உருவத்தில் உள்ள தேவதைகளின் மீது, அவர்களுக்கு நிலையான பக்தி உண்டாகுமாறு நான் செய்கிறேன்.

 

22.நம்பிக்கையுடன் அந்த தேவதைகளை வழிபடுபவர்கள் அவர்கள் விரும்பிய பொருட்களையோ, பயனையோ அடைகிறார்கள். ஆனால், உண்மையில், அந்தப்பலன்கள் அவர்களுக்குக் கிடைக்குமாறு செய்வது நான் தான்.

 

23.ஆனால், உண்மையான ஞானமற்றவர்கள் வேண்டிப்பெறும் இந்தப் பலன்கள் அழியக்கூடியவை. பலன்களுக்காக, தேவதைகளை வழிபடுபவர்கள், அந்த அந்த தேவதையின் இடத்துக்குச் செல்கிறார்கள். ஆனால், என்னுடைய பக்தர்கள் என்னிடமே வந்து சேருகிறார்கள்.

 

 

24.சரியான ஞானமற்றவர்கள், பரம்பொருளாகிய நான், முன்னம் உருவம் இன்றி இருந்தேன் என்றும், இப்போது தான் உருவத்துடன் ஸ்ரீ கிருஷ்ணனாக வந்திருக்கிறேன் என்றும் கருதுகிறார்கள். அவர்கள் என்னுடைய நிரந்தரமான, அழிவற்ற, மகோன்னதமான இருப்பை அறிய மாட்டார்கள்.

 

25.நான் யோகமாயை என்னும் என்னுடைய ஆற்றலால் என்னை மறைத்துக் கொண்டிருப்பதால், எல்லாருக்கும் என்னை வெளிப்படுத்திக் கொள்வதில்லை. ஆகவே ஞானமற்றவர்கள்  நான் பிறப்போ, மாற்றங்களோ அற்றவன் என்பதைப் புரிந்து கொள்வதில்லை.

 

26.அர்ஜுனா! நான் கடந்த காலத்தையும், நிகழ்காலத்தையும், எதிர்காலத்தையும், இங்கு வாழும் உயிர்களனைத்தையும் நன்கறிவேன். ஆனால், என்னை அறிந்தவர் யாருமில்லை.

 

27.பரதவம்சத்தவனே! அர்ஜுனா! விருப்பு, வெறுப்பு என்ற இரண்டு உணர்வுகளும் மாயையினால் உண்டாகின்றன. இந்த உலகிலுள்ள உயிர்கள் அனைத்தும் இந்த மாயை ஏற்படுத்தும் மயக்கத்தால்  ஏமாற்றப்படுகின்றன.

 

28.ஆனால், பக்தி பூர்வமாக செயல்கள் செய்ததனால், தங்கள் பாவங்களை அழித்து விட்டவர்கள், இந்த மாயையின் தாக்கத்திலிருந்து விடுபட்டு, விருப்பு வெறுப்பின்றி வாழ்கிறார்கள். அத்தகையோர், திடமான தீர்மானத்துடன் என்னை வழிபடுகிறார்கள்.

 

29.என்னைப்புகலடைந்தோர் மூப்பு, மரணம் ஆகியவற்றிலிருந்து விடுதலை பெற்று, பரம்பொருளையும், தன் ஆத்மாவையும் மட்டுமல்லாது, இங்கு நடக்கும் அனைத்து செயல்பாடுகளையும் அறிகிறார்கள்.

 

30.நான் தான், உலகப்பொருட்களுக்கும், தேவதைகளுக்கும், வேள்விகளுக்கும் அதி தேவதை ( அனைத்தையும் ஆட்டுவிக்கும் சக்தி) என்பதை அறிந்த ஞானிகள், மரணத் தருவாயில் கூட என்னைப்பற்றிய முழு உணர்வுடன் இருப்பார்கள்.

 

சுபம்

 

https://draft.blogger.com/blog/post/edit/8301939112718011873/997938619641662296

https://draft.blogger.com/blog/posts/8301939112718011873

 

 

ஸ்ரீமத் பகவத் கீதை

 

ஸ்ரீமத் பகவத் கீதை

 

ஆறாவது  அத்தியாயம்

 தியான யோகம்

 (தியானம் செய்யும் முறை மற்றும் அதன் சிறப்பு)

 

( யோகம் செய்வது எப்படி என்றும், யோகிகளின் சிறப்பைப்பற்றியும், புலனடக்கத்தின் அவசியம் பற்றியும், எல்லாவற்றையும் விட, இறைவன் மேல் முழு மனதுடன் பக்தி செலுத்துவதன் மேன்மையைப் பற்றியும் ஸ்ரீ கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு விளக்குகிறார்.)

 

1.  ஸ்ரீ பகவான் கூறினார்: “தாங்கள் செய்ய வேண்டிய அக்னி வேள்வியைச் செய்யாமல் விட்டு விட்டவர்களும், உடல் மூலமாக ஆற்ற வேண்டிய கடமையை ஆற்றாமல் இருப்பவர்களும், சந்நியாசிகளாகி விட மாட்டார்கள். தங்களுக்கு விதிக்கப்பட்ட செயல்களை, அவைகளால் ஏற்படப்போகும் பலன்களின் மேல் பற்று வைக்காமல், மனமாரச்செய்பவர்களே, உண்மையான சந்நியாசிகள் ஆவார்கள்.

 

2.  சந்நியாசம் வேறு, யோகம் வேறு அல்ல. உலகப்பற்றைத் துறக்காத எவரும் யோகிகளாக ஆக முடியாது.

 

3.  யோகத்தில் முழுமையடைய விரும்புபவர்களுக்கு, பற்றில்லாமல் செயல் புரிவதே வழி என்று சொல்லப்படுகிறது. ஏற்கனவே யோகத்தில் உன்னத நிலை அடைந்தவர்களுக்கு, தியானத்தில் ஈடுபட்டு, மனதை நிச்சலனமாக வைத்துக்கொள்வதே வழி என்று சொல்லப்படுகிறது.

 

4.  உலகப்பொருட்களின் மீதும் பற்று வைக்காமல், செயல்கள் மீதும் பற்று வைக்காமல், தாங்கள் செய்யும் செயல்கள் இத்தகைய நன்மைகளைத் தர வேண்டும் என்ற ஆசையும் இல்லாமல் கடமையைச் செய்பவர்கள், யோக விஞ்ஞானத்தில் உன்னத நிலையை அடைகிறார்கள்.

 

5.     உன்னுடைய மனத்தின் ஆற்றலைக்கொண்டு உன்னை உயர்த்திக்கொள்; ஆனால் தாழ்த்திக் கொண்டு விடாதே. ஏனென்றால், நம்முடைய நண்பனும் இந்த மனம் தான்; நம்முடைய எதிரியும் இந்த மனம் தான்.

 

6.     தன்னுடைய மனதை வெற்றி கொண்டவனுக்கு அவனுடைய மனம் அவனுக்கு நண்பனாக ஆகிறது. ஆனால், தன் மனதுக்கு அடிமையாக இருப்பவனுக்கு அவனுடைய மனமே அவனுடைய எதிரியாகி விடுகிறது.

 

7.     தங்கள் மனதை வெற்றி கொண்ட யோகிகள், குளிர்-வெப்பம், இன்பம்-துன்பம், மரியாதை – அவமானம் போன்ற இரட்டை நிலைகளில் இருந்து மேலே சென்று விடுகிறார்கள். அத்தகையவர்கள் மன அமைதியுடன், இறைவன் மீதுள்ள  தங்கள் பக்தியில் நிலையாக இருக்கிறார்கள்.

 

8.     தங்களுடைய ஞானத்தினாலும், பகுத்தறிவினாலும் திருப்தியடைந்து, தங்கள் புலன்களை வென்று, எல்லா சூழ்நிலைகளிலும், சிறிதும் சலனமடையாமல் இருக்கும் யோகிகள், கூழாங்கல்லையும், தங்கத்தையும் ஒன்றே போல் பார்க்கிறார்கள்.

 

9.     அவர்களைப் பொருத்த மட்டில், நலம் விரும்பிகளோ, நண்பர்களோ, எதிரிகளோ, பக்தர்களோ,  எல்லாருமே ஒன்றுதான். யோகிகள் தங்களை வெறுப்பவர்களிடத்தும், தங்கள் உறவினர்களிடத்தும், விருப்பு வெறுப்பு இன்றியும், அற வழியில் நடப்பவர்களிடத்தும், பாவிகளிடத்தும் பாரபட்சமின்றியும் நடந்து கொள்கிறார்கள்.

 

10.   யோக நிலையை அடைய விரும்புபவர், தனிமையில் இருந்து, எப்போதும் தியானத்தில் ஈடுபட்டு, உடலையும், உள்ளத்தையும் கட்டுக்குள் வைத்து இருப்பதுடன், பொருட்கள் மேல் உள்ள விருப்பத்தையும், அவற்றைத் தனதாக்கிக் கொள்ள வேண்டும் என்ற ஆசையையும், துறந்து விட வேண்டும்.

 

11.அவர், தூய்மையான ஒரு இடத்தில், அதிக உயரமாகவும், தாழ்வாகவும் இல்லாதபடி,  சிறிது புல்லைப்பரப்பி, அதன் மேல் ஒரு மான் தோலை வைத்து, அதன் மேல் ஒரு துணியை விரித்து, தியானம் செய்யும் ஆசனத்தைத் தயாரித்துக் கொள்ள வேண்டும்.

 

12.ஆசனத்தில் அசையாமல் அமர்ந்து கொண்டு, மனதை ஒருமுகப்படுத்தி, எண்ணங்களையும் செயல்களையும் கட்டுப்படுத்தி, தியானத்திலேயே கவனத்தைச் செலுத்த   வேண்டும்.

 

13.தன்னுடைய ஆசனத்தில் அசையாமல் அமர்ந்து, தன்னுடைய உடல், கழுத்து, தலை இவை மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் இருக்குமாறு வைத்துக்கொண்டு, கவனத்தை மூக்கின் முனை மேல் வைத்துக் கண்களை அலைய விடாமல் நிறுத்தி, எண்ணங்களையும், செயல்களையும் தவிர்த்து, ஒருமுகமாகக் கவனத்தைக் குவித்து, தியானத்தில் ஈடுபட  வேண்டும்.

 

14.இவ்வாறு, அமைதியுடனும், அச்சமில்லாமலும், அங்கும் இங்கும் அலை பாயாத மனத்துடனும், திடமான பிரம்மச்சரிய விரதத்தை மேற்கொண்டு, என்னை மட்டுமே உன்னதமான குறிக்கோளாகக்கொண்டு, யோகியானவன் தியானிக்க வேண்டும்.

 

15.இவ்வாறு என்னில் மனத்தை ஈடுபடுத்தி, கட்டுப்பாட்டுடன் தியானம் செய்பவன் நிர்வாண நிலையை அடைந்து, மகத்தான அமைதியுடன், என்னுள்ளே நிரந்தரமாக இருக்கிறான்.

 

16.அர்ஜுனா!  அதிகமாக உண்பவர்களோ, மிகவும் குறைவாக உண்பவர்களோ, அதிகம் உறங்குபவர்களோ, மிகக்குறைவாக உறங்குபவர்களோ, யோகத்தில் வெற்றி அடைய முடியாது.

 

17.மிதமான உணவு உண்டு, மிதமாக வாழ்க்கையை அனுபவித்து,  மிதமாகச் செயலாற்றி, மிதமாக உறங்குபவர்களால் , யோகத்தின் மூலம் எல்லாத் துன்பங்களையும் களைந்து விட முடியும்.

 

18.யோகிகள், முழுமையான கட்டுப்பாட்டுடன், பொருட்கள் மேல் ஆசைப்படுவதை விடுத்துத் தன், ஆத்மாவின் மேலேயே கவனம் செலுத்துகிறார்கள். புலன்களின் ஆசைக்கு அடிமையாகாத அப்படிப்பட்ட மனிதர்களே உண்மையான யோகிகள்.

 

19.காற்றில்லாத இடத்தில் உள்ள தீபம் எவ்வாறு அசையாமல் எரிகிறதோ, அவ்வாறே, ஒரு யோகியின் கட்டுப்பாடுள்ள மனமும், பரம்பொருள் மீதே  நிலை பெற்று விளங்குகிறது.

 

20.உலகச் செயல்பாடுகளில் இருந்து விலகிவிட்ட மனத்துடன், யோகப்பயிற்சியின் மூலம் அசையாத நிலை அடைந்துள்ள யோகி, தனது தூய்மையான மனதின் மூலம் தன் ஆத்மாவைத் தரிசித்து அந்த ஆனந்தத்தில் திளைத்திருக்கிறான்.

 

21.புலன்களுக்கெட்டாத, புத்திக்கு மட்டுமே எட்டக்கூடிய, அந்த எல்லையற்ற ஆனந்த நிலையில், அவன் பரம்பொருளின் நினைவிலிருந்து ஒரு நொடியும் விலகுவதில்லை.

 

22.இந்த நிலையை அடைந்த ஒருவன், வேறு எதையும் இதை விடச் சிறந்ததாகக் கருதுவதில்லை. இவ்வாறு, ஆனந்தத்தில் நிலை பெற்றுள்ள அவன் எத்தனை பெரிய துன்பம் வந்தாலும் அதனால் சலனப்படுவதில்லை.

 

23.துன்பத்துடன் சேராமல், விடுபட்டு நிற்கும் நிலையே யோகம் எனப்படுகிறது. ஒருவன் மனதை அலைய விடாமல், திடமாக இந்த யோகப் பயிற்சியை மேற்கொள்ள வேண்டும்.

 

24.யோகியானவன், உலகப்பொருட்களின் மீதான ஆசையை, முற்றிலும் துறந்து, மனம் போன வழி போகும் புலன்களை அடக்க வேண்டும்.

 

25.நிதானமாகவும், சீராகவும், வேறு எதைப்பற்றியும் எண்ணாமலும், உள்ளத்தில் உறுதியோடு, தியானிக்கும் போது, எண்ணம் இறைவன் மேல் மட்டுமே, நிலை பெறுகிறது.

 

26.எப்பொழுதெல்லாம், இந்த நிலையில்லாத மனம் அங்குமிங்கும் அலைகிறதோ, அப்பொழுதெல்லாம் அதைத் திரும்ப இழுத்து, மீண்டும், மீண்டும் இறைவன் மீதே ஒரு நிலைப்படுத்த வேண்டும்.

 

27.மனதை அமைதிப்படுத்தி, ஆசைகளை அடக்கி, பாவமற்ற புனிதனாய், எல்லாப்பொருட்களிலும் இறைவனின் தொடர்பைக் காணும் யோகியானவன், அனைத்தையும் கடந்த பேரின்ப நிலையை எய்துகிறான்.

 

28.தன்னை அடக்கிய யோகி, இறைவனுடன் ஒன்றி, உலகப்பொருட்களால் மாசு படாமல் இருப்பதால், மகோன்னதமான பரமானந்த நிலையை அடைகிறான்.

 

29.இறைவனுடன் உணர்வால் ஒன்றி விட்ட உண்மையான யோகிகள், எல்லாவற்றையும் சமமாகப்பார்ப்பதுடன், இறைவனில் எல்லா உயிர்களையும், எல்லா உயிர்களிலும் இறைவனையும் காண்கிறார்கள். 

 

30.என்னை எல்லா இடத்திலும் பார்ப்பவர்களும், எல்லாவற்றையும் என்னில் பார்ப்பவர்களும், என்னை ஒருபோதும் இழப்பதில்லை. நானும் அவர்களை ஒருபோதும் இழப்பதில்லை.

 

31.என்னுடன் உணர்வால் ஒன்றி, என்னையே எல்லா உயிர்களிலும் இருக்கும் பரம்பொருள் என்று வழிபடுகின்ற யோகியானவன், பல விதமான தொழில்களில் ஈடுபட்டிருந்தாலும், என்னுள்ளே வாழ்கிறான்.

 

32.அர்ஜுனா! அனத்து உயிர்களும் சமம் என்றே கண்டு, பிறருடைய   இன்ப துன்பங்களைத், தனதே போல் பாவிப்பவரைத்தான் நான் முழுமையான யோகி என்று கருதுகிறேன். “

 

33.அர்ஜுனன் கூறினான்: “மது சூதனா! நீ விளக்கிய யோக முறை என்னால் பின்பற்ற முடியாததாக இருக்கிறது. ஏனென்றால், என் மனது ஒரு நிலையில் இல்லாமல் அலை பாய்ந்து கொண்டே இருக்கிறது.

 

34.கிருஷ்ணா! வலிமையும், பிடிவாதமும் உள்ள இந்த மனமானது கொந்தளித்துக்கொண்டே இருக்கிறது. காற்றைக் கட்டுப்படுத்துவதை விட, இந்த மனதைக்கட்டுப்படுத்துவது தான் கஷ்டம் என்று தோன்றுகிறது.”

 

35.ஸ்ரீ பகவான் கூறினார்: குந்தியின் மகனே! வலிமையான தோள்களை உடையவனே! நீ சொல்வது சரி தான். இந்த மனதைக் கட்டுப்படுத்துவது மிகவும் கடினம் தான். ஆனால், தொடர்ந்து பயிற்சி செய்வதாலும், பற்றை விலக்குவதாலும், மனதைக் கட்டுப்படுத்தலாம்.

 

36.கடிவாளம் இல்லாத மனமுடையவனால் யோக நிலையை அடைய முடியாது. ஆனால், தன் மனதை அடக்கக் கற்றவர்களாலும், சரியான வழியில் தீவிரமாக முயற்சி செய்பவர்களாலும் நிச்சயம் யோக நிலையை அடைய முடியும் என்று நான் கருதுகிறேன்.”

 

37.அர்ஜுனன் கேட்டான்: “நம்பிக்கையுடன் யோகவழியில் பயணப்பட்ட ஒருவன், மனம் ஒரு நிலையில் நில்லாததால், யோக நிலையை அடைய வேண்டும் என்ற தன் குறிக்கோளில், இப்பிறவியில் தோல்வி அடைந்து விட்டால், அவன் கதி என்னாகும்?

 

38.வலிமையான தோள்களை உடையவனே!  யோக வழியில் இருந்து விலகிச் செல்பவன் இந்த உலக இன்பங்களையும் இழந்து, ஆன்மீக வெற்றியும் கிட்டாமல், எங்கும் நிலை பெறாமல், தன் உருவம் சிதைந்து போகும் மேகத்தைப்போல வீணாகி விடுவான் அல்லவா?

 

39.கிருஷ்ணா! தயவு செய்து, என்னுடைய இந்த சந்தேகத்தைப் போக்கு! உன்னைத்தவிர வேறு யாரால் இதைச் செய்யமுடியும்?”

 

40.ஸ்ரீ பகவான் கூறினார்: “பார்த்தனே! ஆன்மீக வழியில் ஈடுபடுபவன் இப்பிறவியிலோ, வரும் பிறவிகளிலோ, அழிவைச் சந்திப்பதில்லையப்பா! இறைவனை உணரும் நோக்கத்துடன் முயற்சி செய்பவர்களைத் தீமை ஒருக்காலும் வெற்றி கொள்ள முடியாது.

 

41.இவ்வாறு முயன்றும், தன் குறிக்கோளில் வெற்றி பெறாத யோகிகள், தன் உடலை உகுத்த பின்னர் நல்லோர் சென்றடையும் உலகங்களுக்குச் சென்று, அங்கு பல காலம் வசித்த பின்னர் , நல்லொழுக்கமும், செல்வச்செழிப்பும் நிறைந்த குடும்பங்களில் பிறக்கிறார்கள்.

 

42.தாங்கள் வாழும் போதே, பற்றை நீக்கியவர்கள், ஞானிகள் நிறைந்த குடும்பங்களில் பிறக்கிறார்கள். ஆனால், இத்தகைய பிறப்பை இந்த உலகத்தில் அடைவது மிக மிகக்கடினம்.

 

43.குரு வம்சத்தோன்றலே! ஒருவேளை அப்படிப்பட்ட பிறவி அவர்களுக்குக் கிடைத்தால், தங்கள் முற்பிறவியில் பெற்ற ஞானத்துடன், மேலும் கடினமாக முயற்சி செய்து, யோகத்தில் முழுமை பெறுகிறார்கள்.

 

44.தங்கள் முற்பிறவியின் தவப்பயனாய்த், தங்களை அறியாமலேயே அவர்கள் இறைவனை நோக்கிக் கவரப்படுகிறார்கள். அத்தகைய தேடுதல் உடையவர்கள் சாஸ்திரங்களில்  கூறப்பட்டுள்ள சடங்குகளினின்றும் மேலே எழும்பி விடுகிறார்கள்.

 

45.இந்த யோகிகள், மேலும் தங்கள் குறிக்கோளில் முன்னேற முயற்சிக்கும் போது, பல பிறவிகளில் சேர்த்த புண்ணியங்களின் பலனாக, உலக ஆசைகள் என்னும் மாசில் இருந்து தூய்மைப் படுத்தப்பட்டு, இப்பிறவியிலேயே உன்னத நிலையை அடைகிறார்கள்.

 

46.யோகியானவன் தவம் செய்பவனைக் காட்டிலும் , ஞானியைக்காட்டிலும், சடங்குகளை ஒழுங்காகச் செய்பவனைக் காட்டிலும் உயர்ந்தவன். ஆகவே, அர்ஜுனா! நீ ஒரு யோகியாக முயற்சி செய்!

 

47.அத்தகைய யோகியருக்குள்ளும், என்னைப்பொருத்த மட்டில், யார் என்னில் தங்கள் மனத்தைச் செலுத்தி, மிகுந்த சிரத்தையுடன் என்னை பஜிக்கிறார்களோ, அவர்களே எல்லாரைக் காட்டிலும் சிறந்த யோகிகள்.

 

 

சுபம்

https://www.blogger.com/blog/post/edit/8301939112718011873/5418925478021061341

https://www.blogger.com/blog/posts/8301939112718011873


 

ஸ்ரீமத் பகவத் கீதை

 

ஐந்தாவது  அத்தியாயம்

 

கர்ம சன்யாஸ யோகம்

(பற்றற்று செயல் புரிதல்)

 

 

(கிருஷ்ணனின் விளக்கத்தைக் கேட்ட பின்னர், அர்ஜுனனுக்கு செயல்களைத் துறப்பது சிறந்ததா அல்லது கர்மயோகத்தில் ஈடுபடுவது சிறந்ததா என்ற சந்தேகம் வருகிறது. கிருஷ்ணர் இரண்டுமே சிறந்ததாயினும், கர்மத்தில் ஈடுபடுவது மிகவும் சிறந்தது என்று கூறுகிறார். உண்மையான கர்ம யோகிகள் எந்த ஒரு செயலைச் செய்தாலும், இதைச் செய்பவன் நான் அல்லன் என்ற உணர்வுடன் செயலாற்றுவதால், அந்தச் செயல்களினால் உண்டாகும் விளைவுகள் அவர்களைப் பாதிப்பதில்லை. தாங்கள் செய்யும் செயல் அனைத்தையும் அவர்கள் இறைவனுக்கு அர்ப்பணித்து விடுவதால், தாமரை இலையின் மேல் இருக்கும் தண்ணீர் போல எதிலும் ஒட்டாமல் இருக்கிறார்கள் என்று கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு விளக்குகிறார்.) 

1.     அர்ஜுனன் கேட்டான்: “ கிருஷ்ணா! செயலைத் துறப்பதை நீ புகழ்ந்து பேசினாய். அதே சமயம் கர்ம யோகத்தில் ஈடுபட வேண்டும் என்றும் உபதேசித்தாய். எனக்கு நன்மை பயக்கும் ஏதாவது ஒன்றைத் தீர்மானமாகக் கூறு.”

 

2.     ஸ்ரீ பகவான் கூறினார்: செயல்களைத் துறப்பது மேலான நன்மையைத் தருவது போலவே, பக்தியுடன் செயலாற்றுவதும் மேலான நன்மையைத் தரும்.  ஆயினும், செயலைத்துறப்பதைக் காட்டிலும் (கர்ம சன்யாஸம்), பக்தியுடன் செயல்படுவது( கர்ம யோகம்) மிகவும் உயர்ந்தது.

 

3.     தோள்வலி உடையவனே! எதன் மீதும் விருப்பமோ வெறுப்போ இல்லாத கர்ம யோகிகளை, அனைத்தையும் துறந்தவர்களாகவே கருத வேண்டும். எல்லா வித இரட்டை விளைவுகளில் இருந்தும் விடுபட்ட அவர்கள், எளிதில் பந்தங்களைக் களைந்து விடுகிறார்கள்.

 

4.     அறியாதவர்கள் தான் கர்ம சன்யாஸமும் , கர்மயோகமும் வேறு வேறு என்று பேசுகிறார்கள். கற்றறிந்த ஞானிகள் இந்த இரண்டு வழிகளில், எந்த வழியைப் பின்பற்றினாலும், இரண்டு வழிகளினாலும் கிடைக்கும் நன்மையை அடையலாம் என்று கூறுகிறார்கள்.

 

5.     கர்ம சன்யாஸத்தால் எந்த ஒரு உன்னத நிலையை அடைய முடியுமோ, அதே உன்னத நிலையைக் கர்ம யோகத்தினாலும் அடைய முடியும். ஆகவே, கர்ம சன்யாஸமும், கர்ம யோகமும் ஒன்றே தான் என்று யார் உணர்கிறார்களோ, அவர்கள் தான் உண்மையை உணர்ந்தவர்கள்.

 

6.     பக்தி சிரத்தையுடன் செயல் செய்யாமல், செயல்களைத் துறக்க முடியாது. வலிமை நிறைந்த தோள்களை உடையவனே! கர்மயோகத்தில் தேர்ந்தவர்கள் விரைவில் இறைவனை அடைகிறார்கள்.

 

7.     தூய்மைப்படுத்தப்பட்ட அறிவுடன், தங்கள் மனத்தையும் புலன்களையும் கட்டுக்குள் வைத்து, அனைத்து உயிர்களிலும் அந்தப் பரமாத்மாவையே காணும் கர்மயோகிகள், எல்லாவித செயல்களையும் செய்தாலும் அவர்கள் மேல் ஒருபொழுதும் பந்தங்கள் ஒட்டிக் கொள்வதில்லை.

 

8.     கர்ம யோகத்தில் நிலைபெற்றிருப்பவர்கள், பார்க்கும் போதும், கேட்கும் போதும், எதையாவது தொடும் போதும், நுகரும் போதும், நகரும் போதும், உறங்கும் போதும், மூச்சு விடும் போதும்,

 

9.     பேசும் போதும், கழிவுகளை வெளியேற்றும் போதும், எதையாவது பிடித்துக் கொள்ளும் போதும், விட்டு விடும் போதும், கண்களைத் திறந்து மூடும் போதும், ‘இந்தச்செயல்களைச் செய்பவன் நான் அல்லன்’ என்று நினைக்கிறார்கள். தங்களுடைய புலன்கள் தான் பொருட்களுக்கிடையே செயலாற்றிக் கொண்டிருக்கின்றன என்று அவர்கள் திடமாக நம்புகிறார்கள். 

 

10.தாங்கள் செய்யும் செயல்கள் மீது பற்று வைக்காமல், அவையனைத்தையும் இறைவனுக்கு அர்ப்பணிப்பவர்கள், தாமரை இலையானது தண்ணீரில் நனையாமல் இருப்பதைப்போல, பாவங்களால் தொடப்படாமல் இருக்கிறார்கள்.

 

11.யோகிகள் பற்று ஏதும் இன்றித் தங்களைத் தூய்மைப்படுத்திக் கொள்வதற்காகவே தங்கள் உடலாலும், புலன்களாலும், மனத்தாலும் அறிவாலும் செயல் புரிகிறார்கள்.

 

12.தங்கள் செயல்களின் பலன்களை இறைவனுக்கே அர்ப்பித்து விடுவதால், கர்ம யோகிகள் நிரந்தரமான அமைதி பெறுகிறார்கள். ஆனால், தங்கள் விருப்பம் நிறைவேறுவதற்காக, சுய நல நோக்கத்துடன் செயலாற்றுபவர்கள், தங்கள் செயல்கள் கொடுக்கும் பலன்கள் மீது பற்றுக் கொண்டிருப்பதால், பந்தங்களில் சிக்கிக்கொள்கிறார்கள்.

 

13.சுய கட்டுப்பாட்டுடனும், பற்றின்றியும் இருக்கும் மனிதர்கள் இந்த நவத்வாரபுரியில் ( நம் உடலுக்குத்தான் அந்தப்பெயர். ஏனெனில் நம் உடலில் ஒன்பது துவாரங்கள் இருக்கின்றன.) தாங்கள் செயலாற்றுகிறோம் என்றோ, தாங்கள் தான் எதற்காவது காரணமாயிருக்கிறோம் என்றோ எண்ணிக்கொள்ளாமல் மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள்.

 

14.‘நான் தான் செய்கிறேன்’ என்ற எண்ணத்தையும், எந்த எந்த செயல்களைச் செய்ய வேண்டும் என்ற கட்டளையையும், இறைவன் யாருக்கும் கொடுப்பதில்லை. செயல்களின் பலன்களையும் அவர் உண்டாக்குவதில்லை. இவையனைத்தும் ‘சத்வம், ரஜஸ், தமஸ்’ என்ற மூன்று குணங்களால் ஏற்படுகின்றன.

 

15.எங்கும் இருக்கும் இறைவன் யார் செய்யும் எந்த ஒரு பாவ காரியத்திலோ, புண்ணிய காரியத்திலோ, தன்னை ஈடுபடுத்திக் கொள்வதில்லை. சாதாரண மனிதர்களுடைய அறிவை, அறியாமை என்னும் திரை மூடியிருப்பதால், அவர்கள் இவ்வாறு எண்ணிக் குழம்புகிறார்கள்.

 

16.ஆனால், எவருடைய அறியாமை, தெய்வீக ஞானத்தால் அழிக்கப்படுகிறதோ, அவர்களுக்கு, சூரியன் தோன்றியதும் அனைத்துப்பொருட்களும் புலப்படுவது போல, பரம்பொருள் புலப்படுகிறது.

 

17.எவருடைய மனமானது இறைவன் மீதே பொருந்தி, நிலைத்திருக்கிறதோ, எவர் இறைவனை அடைவதையே தமது மகத்தான லட்சியமாகக் கொண்டிருக்கிறார்களோ, அவர்களுடைய  பாவங்கள் எல்லாம் ஞானத்தின் ஒளியால் விலகி, அவர்கள் திரும்பவும் கீழே வர முடியாத மேல்நிலையை விரைவில் அடைகிறார்கள்.

 

18.உண்மையான கல்வியும், பணிவும் உடையவர்கள், படைப்பனைத்தையும் இறைவனின் உருவமாகப் பார்க்கும் தங்கள் அறிவுக்கண்களால், அந்தணனையோ, பசுவையோ, யானையையோ, நாயையோ, அல்லது நாயை உண்பவனையோ, ஒன்றே போல் பார்க்கிறார்கள்.

 

19.உயிர்கள் அனைத்தையும் சமமாகப் பார்ப்பவர்கள் இந்தப் பிறவியிலேயே, பிறப்பு-இறப்புச் சுழற்சியை வெற்றி கொள்கிறார்கள். இறைவனைப்போலவே குற்றமற்ற குணங்களைப் பெற்று, அந்த இறைவனிலேயே நிலை பெற்று அமர்ந்திருக்கிறார்கள்.

 

20.இவ்வாறு இறையுணர்வில் நிலை பெற்ற, தெய்வீக அறிவை உடையவர்கள் மனதுக்குப் பிடித்த அனுபவம் வந்தால் ஒரேயடியாக மகிழ்ச்சி அடையாமலும், துன்பம் தரக்கூடிய அனுபவங்கள் வந்தால், ஒரேயடியாக வருத்தப்படாமலும் இருப்பார்கள்.

 

21.வெளிப் பொருட்களினால் கிடைக்கும் இன்பத்தின் மேல் பற்று இல்லாதவர்கள், தனக்குள்ளே தெய்வீக ஆனந்தத்தை அனுபவிக்கிறார்கள். இவ்வாறு யோகத்தின் மூலம் இறைவனிடம் ஒன்றிய அவர்கள், முடிவில்லாத ஆனந்தம் அடைகிறார்கள்.

 

22.பொருட்களின் தொடர்பினால் கிடைக்கும் இன்பங்கள் உலகப்பற்று உள்ளவர்களுக்கு மகிழ்ச்சியைத் தரக்கூடியதாகத் தோன்றினாலும், உண்மையில் அவைகளால் துன்பம் தான் உண்டாகிறது. குந்தியின் புதல்வனே! அத்தகைய இன்பங்களுக்குத் தொடக்கமும், முடிவும் உண்டு; ஆகவே, அறிவாளிகள் அவைகளால் மகிழ்வதில்லை.

 

23.இந்த உடலைத் துறப்பதற்கு முன்னரே, விருப்பம், கோபம் ஆகிய வலிய சக்திகளைக் கட்டுப் படுத்துபவர்கள் தான் யோகிகள். அவர்கள் மட்டுமே எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பவர்கள்.

 

24.தங்களுக்குள்ளே மகிழ்ச்சியாக இருந்து கொண்டு,  தங்களுக்குள்ளே இறையானந்தத்தை அனுபவித்துக் கொண்டு, உள் ஒளியினால், பிரகாசிக்கும் யோகிகள் பரம்பொருளுடன் ஒன்றி, இந்த உலக அனுபவங்களில் இருந்து விடுதலை பெற்றவராகின்றார்கள்.

 

25.தங்கள் பாவங்கள் நீங்கப்பெற்று, தங்கள் சந்தேகங்கள் நிவர்த்தி செய்யப்பட்டு, தங்கள் மனத்தைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்து, அனைத்து உயிர்களின் நன்மைக்காகவே தங்களை அர்ப்பணித்துக்கொண்டுள்ள அந்தப்புனிதமான மனிதர்கள்,  இறைவனை அடைந்து, இந்த உலக வாழ்க்கையில் உழல்வதில் இருந்து விடுபடுகிறார்கள்.

 

26.தொடர்ந்து முயற்சி செய்து, ஆசையையும், கோபத்தையும் துறந்த, தங்கள் மனத்தை அடக்கிய, தங்கள் ஆத்மாவை உணர்ந்த சன்னியாசிகளுக்கு, இந்தப் பிறவியில் மட்டுமல்லாது, இனி வரும் பிறவிகளிலும் விடுதலை கிடைக்கும்.

 

27.வெளி உலக இன்பத்தைப்பற்றிய எண்ணங்களைத் துறந்து, புருவங்களுக்கு இடையே கவனத்தைக்குவித்து, உள்ளே இழுக்கும் மூச்சையும், வெளியே விடும் மூச்சையும் சமப்படுத்தி,

 

28.தங்கள் புலன்கள், மனம், புத்தி ஆகியவற்றை அடக்கி, ஆசையையும், அச்சத்தையும் விட்டு விட்ட முனிவர்கள் எப்போதும் சுதந்திரமாக இருக்கிறார்கள்.

 

29.மனிதர் செய்யும் வேள்விகள், தவம் அனைத்தையும் அனுபவிப்பவன் நான் தான் என்பதை உணர்ந்து, என்னை எல்லா உலகத்துக்கும் தலைவன் என்றும், எல்லா உயிர்களுக்கும் நான் உண்மையான நண்பன் என்றும் அறிந்து கொள்ளும் என் பக்தன் நிம்மதி பெறுகிறான்.”

 

 

சுபம்