திங்கள், 27 நவம்பர், 2023

 

ஸ்ரீமத் பகவத் கீதை

 

ஐந்தாவது  அத்தியாயம்

 

கர்ம சன்யாஸ யோகம்

(பற்றற்று செயல் புரிதல்)

 

 

(கிருஷ்ணனின் விளக்கத்தைக் கேட்ட பின்னர், அர்ஜுனனுக்கு செயல்களைத் துறப்பது சிறந்ததா அல்லது கர்மயோகத்தில் ஈடுபடுவது சிறந்ததா என்ற சந்தேகம் வருகிறது. கிருஷ்ணர் இரண்டுமே சிறந்ததாயினும், கர்மத்தில் ஈடுபடுவது மிகவும் சிறந்தது என்று கூறுகிறார். உண்மையான கர்ம யோகிகள் எந்த ஒரு செயலைச் செய்தாலும், இதைச் செய்பவன் நான் அல்லன் என்ற உணர்வுடன் செயலாற்றுவதால், அந்தச் செயல்களினால் உண்டாகும் விளைவுகள் அவர்களைப் பாதிப்பதில்லை. தாங்கள் செய்யும் செயல் அனைத்தையும் அவர்கள் இறைவனுக்கு அர்ப்பணித்து விடுவதால், தாமரை இலையின் மேல் இருக்கும் தண்ணீர் போல எதிலும் ஒட்டாமல் இருக்கிறார்கள் என்று கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு விளக்குகிறார்.) 

1.     அர்ஜுனன் கேட்டான்: “ கிருஷ்ணா! செயலைத் துறப்பதை நீ புகழ்ந்து பேசினாய். அதே சமயம் கர்ம யோகத்தில் ஈடுபட வேண்டும் என்றும் உபதேசித்தாய். எனக்கு நன்மை பயக்கும் ஏதாவது ஒன்றைத் தீர்மானமாகக் கூறு.”

 

2.     ஸ்ரீ பகவான் கூறினார்: செயல்களைத் துறப்பது மேலான நன்மையைத் தருவது போலவே, பக்தியுடன் செயலாற்றுவதும் மேலான நன்மையைத் தரும்.  ஆயினும், செயலைத்துறப்பதைக் காட்டிலும் (கர்ம சன்யாஸம்), பக்தியுடன் செயல்படுவது( கர்ம யோகம்) மிகவும் உயர்ந்தது.

 

3.     தோள்வலி உடையவனே! எதன் மீதும் விருப்பமோ வெறுப்போ இல்லாத கர்ம யோகிகளை, அனைத்தையும் துறந்தவர்களாகவே கருத வேண்டும். எல்லா வித இரட்டை விளைவுகளில் இருந்தும் விடுபட்ட அவர்கள், எளிதில் பந்தங்களைக் களைந்து விடுகிறார்கள்.

 

4.     அறியாதவர்கள் தான் கர்ம சன்யாஸமும் , கர்மயோகமும் வேறு வேறு என்று பேசுகிறார்கள். கற்றறிந்த ஞானிகள் இந்த இரண்டு வழிகளில், எந்த வழியைப் பின்பற்றினாலும், இரண்டு வழிகளினாலும் கிடைக்கும் நன்மையை அடையலாம் என்று கூறுகிறார்கள்.

 

5.     கர்ம சன்யாஸத்தால் எந்த ஒரு உன்னத நிலையை அடைய முடியுமோ, அதே உன்னத நிலையைக் கர்ம யோகத்தினாலும் அடைய முடியும். ஆகவே, கர்ம சன்யாஸமும், கர்ம யோகமும் ஒன்றே தான் என்று யார் உணர்கிறார்களோ, அவர்கள் தான் உண்மையை உணர்ந்தவர்கள்.

 

6.     பக்தி சிரத்தையுடன் செயல் செய்யாமல், செயல்களைத் துறக்க முடியாது. வலிமை நிறைந்த தோள்களை உடையவனே! கர்மயோகத்தில் தேர்ந்தவர்கள் விரைவில் இறைவனை அடைகிறார்கள்.

 

7.     தூய்மைப்படுத்தப்பட்ட அறிவுடன், தங்கள் மனத்தையும் புலன்களையும் கட்டுக்குள் வைத்து, அனைத்து உயிர்களிலும் அந்தப் பரமாத்மாவையே காணும் கர்மயோகிகள், எல்லாவித செயல்களையும் செய்தாலும் அவர்கள் மேல் ஒருபொழுதும் பந்தங்கள் ஒட்டிக் கொள்வதில்லை.

 

8.     கர்ம யோகத்தில் நிலைபெற்றிருப்பவர்கள், பார்க்கும் போதும், கேட்கும் போதும், எதையாவது தொடும் போதும், நுகரும் போதும், நகரும் போதும், உறங்கும் போதும், மூச்சு விடும் போதும்,

 

9.     பேசும் போதும், கழிவுகளை வெளியேற்றும் போதும், எதையாவது பிடித்துக் கொள்ளும் போதும், விட்டு விடும் போதும், கண்களைத் திறந்து மூடும் போதும், ‘இந்தச்செயல்களைச் செய்பவன் நான் அல்லன்’ என்று நினைக்கிறார்கள். தங்களுடைய புலன்கள் தான் பொருட்களுக்கிடையே செயலாற்றிக் கொண்டிருக்கின்றன என்று அவர்கள் திடமாக நம்புகிறார்கள். 

 

10.தாங்கள் செய்யும் செயல்கள் மீது பற்று வைக்காமல், அவையனைத்தையும் இறைவனுக்கு அர்ப்பணிப்பவர்கள், தாமரை இலையானது தண்ணீரில் நனையாமல் இருப்பதைப்போல, பாவங்களால் தொடப்படாமல் இருக்கிறார்கள்.

 

11.யோகிகள் பற்று ஏதும் இன்றித் தங்களைத் தூய்மைப்படுத்திக் கொள்வதற்காகவே தங்கள் உடலாலும், புலன்களாலும், மனத்தாலும் அறிவாலும் செயல் புரிகிறார்கள்.

 

12.தங்கள் செயல்களின் பலன்களை இறைவனுக்கே அர்ப்பித்து விடுவதால், கர்ம யோகிகள் நிரந்தரமான அமைதி பெறுகிறார்கள். ஆனால், தங்கள் விருப்பம் நிறைவேறுவதற்காக, சுய நல நோக்கத்துடன் செயலாற்றுபவர்கள், தங்கள் செயல்கள் கொடுக்கும் பலன்கள் மீது பற்றுக் கொண்டிருப்பதால், பந்தங்களில் சிக்கிக்கொள்கிறார்கள்.

 

13.சுய கட்டுப்பாட்டுடனும், பற்றின்றியும் இருக்கும் மனிதர்கள் இந்த நவத்வாரபுரியில் ( நம் உடலுக்குத்தான் அந்தப்பெயர். ஏனெனில் நம் உடலில் ஒன்பது துவாரங்கள் இருக்கின்றன.) தாங்கள் செயலாற்றுகிறோம் என்றோ, தாங்கள் தான் எதற்காவது காரணமாயிருக்கிறோம் என்றோ எண்ணிக்கொள்ளாமல் மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள்.

 

14.‘நான் தான் செய்கிறேன்’ என்ற எண்ணத்தையும், எந்த எந்த செயல்களைச் செய்ய வேண்டும் என்ற கட்டளையையும், இறைவன் யாருக்கும் கொடுப்பதில்லை. செயல்களின் பலன்களையும் அவர் உண்டாக்குவதில்லை. இவையனைத்தும் ‘சத்வம், ரஜஸ், தமஸ்’ என்ற மூன்று குணங்களால் ஏற்படுகின்றன.

 

15.எங்கும் இருக்கும் இறைவன் யார் செய்யும் எந்த ஒரு பாவ காரியத்திலோ, புண்ணிய காரியத்திலோ, தன்னை ஈடுபடுத்திக் கொள்வதில்லை. சாதாரண மனிதர்களுடைய அறிவை, அறியாமை என்னும் திரை மூடியிருப்பதால், அவர்கள் இவ்வாறு எண்ணிக் குழம்புகிறார்கள்.

 

16.ஆனால், எவருடைய அறியாமை, தெய்வீக ஞானத்தால் அழிக்கப்படுகிறதோ, அவர்களுக்கு, சூரியன் தோன்றியதும் அனைத்துப்பொருட்களும் புலப்படுவது போல, பரம்பொருள் புலப்படுகிறது.

 

17.எவருடைய மனமானது இறைவன் மீதே பொருந்தி, நிலைத்திருக்கிறதோ, எவர் இறைவனை அடைவதையே தமது மகத்தான லட்சியமாகக் கொண்டிருக்கிறார்களோ, அவர்களுடைய  பாவங்கள் எல்லாம் ஞானத்தின் ஒளியால் விலகி, அவர்கள் திரும்பவும் கீழே வர முடியாத மேல்நிலையை விரைவில் அடைகிறார்கள்.

 

18.உண்மையான கல்வியும், பணிவும் உடையவர்கள், படைப்பனைத்தையும் இறைவனின் உருவமாகப் பார்க்கும் தங்கள் அறிவுக்கண்களால், அந்தணனையோ, பசுவையோ, யானையையோ, நாயையோ, அல்லது நாயை உண்பவனையோ, ஒன்றே போல் பார்க்கிறார்கள்.

 

19.உயிர்கள் அனைத்தையும் சமமாகப் பார்ப்பவர்கள் இந்தப் பிறவியிலேயே, பிறப்பு-இறப்புச் சுழற்சியை வெற்றி கொள்கிறார்கள். இறைவனைப்போலவே குற்றமற்ற குணங்களைப் பெற்று, அந்த இறைவனிலேயே நிலை பெற்று அமர்ந்திருக்கிறார்கள்.

 

20.இவ்வாறு இறையுணர்வில் நிலை பெற்ற, தெய்வீக அறிவை உடையவர்கள் மனதுக்குப் பிடித்த அனுபவம் வந்தால் ஒரேயடியாக மகிழ்ச்சி அடையாமலும், துன்பம் தரக்கூடிய அனுபவங்கள் வந்தால், ஒரேயடியாக வருத்தப்படாமலும் இருப்பார்கள்.

 

21.வெளிப் பொருட்களினால் கிடைக்கும் இன்பத்தின் மேல் பற்று இல்லாதவர்கள், தனக்குள்ளே தெய்வீக ஆனந்தத்தை அனுபவிக்கிறார்கள். இவ்வாறு யோகத்தின் மூலம் இறைவனிடம் ஒன்றிய அவர்கள், முடிவில்லாத ஆனந்தம் அடைகிறார்கள்.

 

22.பொருட்களின் தொடர்பினால் கிடைக்கும் இன்பங்கள் உலகப்பற்று உள்ளவர்களுக்கு மகிழ்ச்சியைத் தரக்கூடியதாகத் தோன்றினாலும், உண்மையில் அவைகளால் துன்பம் தான் உண்டாகிறது. குந்தியின் புதல்வனே! அத்தகைய இன்பங்களுக்குத் தொடக்கமும், முடிவும் உண்டு; ஆகவே, அறிவாளிகள் அவைகளால் மகிழ்வதில்லை.

 

23.இந்த உடலைத் துறப்பதற்கு முன்னரே, விருப்பம், கோபம் ஆகிய வலிய சக்திகளைக் கட்டுப் படுத்துபவர்கள் தான் யோகிகள். அவர்கள் மட்டுமே எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பவர்கள்.

 

24.தங்களுக்குள்ளே மகிழ்ச்சியாக இருந்து கொண்டு,  தங்களுக்குள்ளே இறையானந்தத்தை அனுபவித்துக் கொண்டு, உள் ஒளியினால், பிரகாசிக்கும் யோகிகள் பரம்பொருளுடன் ஒன்றி, இந்த உலக அனுபவங்களில் இருந்து விடுதலை பெற்றவராகின்றார்கள்.

 

25.தங்கள் பாவங்கள் நீங்கப்பெற்று, தங்கள் சந்தேகங்கள் நிவர்த்தி செய்யப்பட்டு, தங்கள் மனத்தைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்து, அனைத்து உயிர்களின் நன்மைக்காகவே தங்களை அர்ப்பணித்துக்கொண்டுள்ள அந்தப்புனிதமான மனிதர்கள்,  இறைவனை அடைந்து, இந்த உலக வாழ்க்கையில் உழல்வதில் இருந்து விடுபடுகிறார்கள்.

 

26.தொடர்ந்து முயற்சி செய்து, ஆசையையும், கோபத்தையும் துறந்த, தங்கள் மனத்தை அடக்கிய, தங்கள் ஆத்மாவை உணர்ந்த சன்னியாசிகளுக்கு, இந்தப் பிறவியில் மட்டுமல்லாது, இனி வரும் பிறவிகளிலும் விடுதலை கிடைக்கும்.

 

27.வெளி உலக இன்பத்தைப்பற்றிய எண்ணங்களைத் துறந்து, புருவங்களுக்கு இடையே கவனத்தைக்குவித்து, உள்ளே இழுக்கும் மூச்சையும், வெளியே விடும் மூச்சையும் சமப்படுத்தி,

 

28.தங்கள் புலன்கள், மனம், புத்தி ஆகியவற்றை அடக்கி, ஆசையையும், அச்சத்தையும் விட்டு விட்ட முனிவர்கள் எப்போதும் சுதந்திரமாக இருக்கிறார்கள்.

 

29.மனிதர் செய்யும் வேள்விகள், தவம் அனைத்தையும் அனுபவிப்பவன் நான் தான் என்பதை உணர்ந்து, என்னை எல்லா உலகத்துக்கும் தலைவன் என்றும், எல்லா உயிர்களுக்கும் நான் உண்மையான நண்பன் என்றும் அறிந்து கொள்ளும் என் பக்தன் நிம்மதி பெறுகிறான்.”

 

 

சுபம்

 

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக