திங்கள், 27 நவம்பர், 2023

 

ஸ்ரீமத் பகவத் கீதை

 

ஏழாவது  அத்தியாயம்

 

ஞான விஞ்ஞான யோகம்

 

(இறைவனைப்பற்றிய உண்மையான அறிவு)


 (ஸ்ரீ பகவான் அர்ஜுனனுக்கு இவ்வாறு உபதேசிக்கிறார்: ‘ பக்தி யோகத்தின் மூலம் இறைவனைச் சரணடைவது தான் இறைவனை உணர்வதற்கான  ஒரே வழி. இந்த உயிர்கள் ஐம்பூதங்களும், மனம், புத்தி, அஹங்காரம் ஆகியவற்றால் ஆகியவை, அவைகளுக்குள் இருக்கும் ஆத்ம சக்தி தான் அவைகளை இயக்குகிறது. எல்லாப் பொருட்களிலும், அவற்றின் சாரமாக இறைவன் இருக்கிறார். இறைவனுடைய மாய சக்தி தான் சத்வம், ரஜஸ், தமஸ் என்ற முக்குணங்களாக வெளிப்படுகிறது. அந்த மாயசக்தியை வெல்வது மிகவும் கடினம். ஆனால், பக்தி பூர்வமாக செயல்கள் செய்வதால் இந்த மாயையின் விளைவுகளில் இருந்து ஒருவர் விடுபடலாம்.)

1.     ஸ்ரீ கிருஷ்ணர் கூறினார்: “ அர்ஜுனா! நான் சொல்வதைக் கேள்! என் மேலே பற்று வைத்து, பக்தி யோகத்தின் மூலம் என்னையே சரணடைவதன் மூலம் என்னை முழுமையாக உணர்வாய். இதில் சந்தேகமேயில்லை.

 

2.     இப்பொழுது நான் உனக்கு இந்த ஞானத்தை முழுமையாக அளிக்கிறேன். இதை அறிந்த பின்னர், இந்த உலகத்தில் அறியத்தக்கது என்று எதுவும் இல்லை.

 

3.     ஆயிரக்கணக்கான மனிதர்களில் வெகு சிலரே முழுமை அடைய முயற்சிக்கிறார்கள். அப்படி முழுமையடைந்த ஒரு சிலருக்குள்ளும் என்னை உள்ளபடி உணர்ந்தவர் அபூர்வமே!

 

4.     பூமி, தண்ணீர், நெருப்பு, காற்று, ஆகாயம், மனம், புத்தி, தன்முனைப்பு இந்த எட்டும் என்னுடைய இயற்கையான இயல்புகள்.

 

5.     தோள் வலிமையுடைய அர்ஜுனா! இதைத் தாண்டி எனக்கு வேறொரு உன்னதமான ஆற்றல் உண்டு. அது தான் இந்த உலகம் இயங்குவதற்கு ஆதாரமாக இருக்கும், உயிர்களின் உள்ளே இருக்கும் ஆத்ம சக்தி.

 

6.     என்னுடைய இந்த இரண்டு வகையான ஆற்றல்களில் இருந்து தான் அனைத்து உயிரினங்களும் வெளிப்படுகின்றன. இந்தப் படைப்பனைத்தும் என்னில் இருந்து உருவாகி, மீண்டும் என்னுள்ளே ஒடுங்குகிறது.

 

7.     தனஞ்சயனே! என்னைக்காட்டிலும் உயர்ந்த வஸ்து எதுவும் இல்லை.  மணிகள் கயிற்றில் கோர்க்கப் பட்டிருப்பது போல, அனைத்தும் என்னில் கோர்க்கப் பட்டிருக்கின்றன.

 

8.     குந்தியின் புதல்வனே! நீரில் சுவையாகவும், சூரிய சந்திரர்களில் ஒளியாகவும், வேத மந்திரங்களில் ப்ரணவமாகவும் (ஓம்), ஆகாயத்தில் ஒலியாகவும், மனிதர்களில் அவர்களுடைய திறமையாகவும் நான் இருக்கிறேன்.

 

9.     பூமியின் தூய்மையான மணமாகவும், நெருப்பின் பிரகாசமாகவும், அனைத்து உயிர்களின் உயிர்ச்சக்தியாகவும், தவசிகளின் தவமாகவும் இருப்பது நான் தான்.

 

10.பார்த்தனே! எல்லாக் காலங்களிலும், அனைத்து உயிர்களுக்கும் நான் தான் விதை என்பதை அறிந்து கொள்! புத்திசாலிகளில் புத்தியாகவும், தேஜஸ் உடையவர்களின் தேஜஸாகவும் இருப்பதுவும் நான் தான்.

 

11.பரதவம்சத்தவருள் சிறந்தவனே! பலமுடையவர்களில் நான் பலமாக இருக்கிறேன். தர்மத்துக்குட்பட்ட புலனின்பமாக இருப்பதுவும் நான் தான்.

 

12.என் சக்தி தான், சத்வம், ரஜஸ், தமஸ் என்ற மூன்று குணங்களாக வெளிப்படுகிறது. அந்தக் குணங்கள் என்னில் இருக்கின்றன. ஆனால், நான் அந்த குணங்களுக்கு அப்பாற்பட்டவன்.

 

13.இவ்வாறு மூன்று விதமாகச் செயல்படும் இந்த மாயை மனிதர்களை ஏமாற்றுவதால், அவர்களால், அழியாமல், நிரந்தரமாய் இருக்கும் என்னை அறிய முடிவதில்லை.

 

14.இவ்வாறு, முக்குணங்களாக வெளிப்படுகின்ற என்னுடைய தெய்வீக சக்தியான மாயையை வெல்வது மிகவும் கடினம். ஆனால், என்னைச் சரணடைந்தவர்கள் இதை எளிதில் கடந்து விடுவார்கள்.

 

15.அறியாமை நிறைந்தவர்கள், என்னை உணரும் திறமை இருந்தும்,  தனது கீழான இயல்புகள் வழியே செல்பவர்கள், மாயைக்குட்பட்டுத் தன் அறிவை இழந்தவர்கள், அரக்க குணம் படைத்தவர்கள்–– இந்த நான்கு வகை மனிதர்களும் என்னைச் சரணடைவதில்லை.

 

16.அர்ஜுனா! பரத வம்சத்தவருள் சிறந்தவனே! துன்பத்தில் இருப்பவர்கள், ஞானத்தை நாடுபவர்கள், உலகப்பொருட்களை விரும்புபவர்கள், உண்மையான ஞானிகள்––இந்த நான்கு விதமான மனிதர்கள் என்னை பக்தியுடன் நாடுகிறார்கள்.

 

17.இவர்களுக்குள், என்மேல் மட்டுமே பக்தி வைத்து, அறிவு பூர்வமாகவும், தீவிரமாகவும் வழிபடுபவர்களை மிக உயர்வாக நான் கருதுகிறேன். நான் அவர்களுக்கு மிகவும் பிரியமானவன்; அவர்களும் எனக்கு மிகவும் பிரியமானவர்கள்.

 

18.என்னிடம் பக்தி கொண்டவர்கள் அனைவரும் சிறந்தவர்கள் தாம். ஆயினும், தங்கள் அறிவை என்னுள்ளே கலந்து, என்னை மட்டுமே அவர்களுடைய மேலான இலட்சியமாகக்கருதி, என்னைத் தீவிரமாக வழிபடுபவர்களை, நானாகவே கருதுகிறேன். (நானே அவர்கள், அவர்களே நான்.)

 

19.பல பிறவிகளில் ஆன்மீகப் பயிற்சி மேற்கொண்டு, ஞானம் பெற்றவர்கள், என்னையே எல்லாமாகக் கருதி, என்னைச் சரணடைகிறார்கள். அத்தகைய மகாத்மாக்கள் மிகவும் அரிதானவர்கள்.

 

20.உலகப்பொருட்களின் மீது நாட்டம் கொள்பவர்கள் பிற தேவதைகளைச் சரணடைகிறார்கள். அவரவருடைய இயல்புக்கேற்றபடி, அந்தத் தேவதைகளை மகிழ்விக்க வேண்டிச் சடங்குகள் மூலம் வழிபடுகிறார்கள்.

 

21.எந்த எந்த தேவதைகளை வழிபடுவதில் நாட்டம் கொள்கிறார்களோ, அந்த அந்த உருவத்தில் உள்ள தேவதைகளின் மீது, அவர்களுக்கு நிலையான பக்தி உண்டாகுமாறு நான் செய்கிறேன்.

 

22.நம்பிக்கையுடன் அந்த தேவதைகளை வழிபடுபவர்கள் அவர்கள் விரும்பிய பொருட்களையோ, பயனையோ அடைகிறார்கள். ஆனால், உண்மையில், அந்தப்பலன்கள் அவர்களுக்குக் கிடைக்குமாறு செய்வது நான் தான்.

 

23.ஆனால், உண்மையான ஞானமற்றவர்கள் வேண்டிப்பெறும் இந்தப் பலன்கள் அழியக்கூடியவை. பலன்களுக்காக, தேவதைகளை வழிபடுபவர்கள், அந்த அந்த தேவதையின் இடத்துக்குச் செல்கிறார்கள். ஆனால், என்னுடைய பக்தர்கள் என்னிடமே வந்து சேருகிறார்கள்.

 

 

24.சரியான ஞானமற்றவர்கள், பரம்பொருளாகிய நான், முன்னம் உருவம் இன்றி இருந்தேன் என்றும், இப்போது தான் உருவத்துடன் ஸ்ரீ கிருஷ்ணனாக வந்திருக்கிறேன் என்றும் கருதுகிறார்கள். அவர்கள் என்னுடைய நிரந்தரமான, அழிவற்ற, மகோன்னதமான இருப்பை அறிய மாட்டார்கள்.

 

25.நான் யோகமாயை என்னும் என்னுடைய ஆற்றலால் என்னை மறைத்துக் கொண்டிருப்பதால், எல்லாருக்கும் என்னை வெளிப்படுத்திக் கொள்வதில்லை. ஆகவே ஞானமற்றவர்கள்  நான் பிறப்போ, மாற்றங்களோ அற்றவன் என்பதைப் புரிந்து கொள்வதில்லை.

 

26.அர்ஜுனா! நான் கடந்த காலத்தையும், நிகழ்காலத்தையும், எதிர்காலத்தையும், இங்கு வாழும் உயிர்களனைத்தையும் நன்கறிவேன். ஆனால், என்னை அறிந்தவர் யாருமில்லை.

 

27.பரதவம்சத்தவனே! அர்ஜுனா! விருப்பு, வெறுப்பு என்ற இரண்டு உணர்வுகளும் மாயையினால் உண்டாகின்றன. இந்த உலகிலுள்ள உயிர்கள் அனைத்தும் இந்த மாயை ஏற்படுத்தும் மயக்கத்தால்  ஏமாற்றப்படுகின்றன.

 

28.ஆனால், பக்தி பூர்வமாக செயல்கள் செய்ததனால், தங்கள் பாவங்களை அழித்து விட்டவர்கள், இந்த மாயையின் தாக்கத்திலிருந்து விடுபட்டு, விருப்பு வெறுப்பின்றி வாழ்கிறார்கள். அத்தகையோர், திடமான தீர்மானத்துடன் என்னை வழிபடுகிறார்கள்.

 

29.என்னைப்புகலடைந்தோர் மூப்பு, மரணம் ஆகியவற்றிலிருந்து விடுதலை பெற்று, பரம்பொருளையும், தன் ஆத்மாவையும் மட்டுமல்லாது, இங்கு நடக்கும் அனைத்து செயல்பாடுகளையும் அறிகிறார்கள்.

 

30.நான் தான், உலகப்பொருட்களுக்கும், தேவதைகளுக்கும், வேள்விகளுக்கும் அதி தேவதை ( அனைத்தையும் ஆட்டுவிக்கும் சக்தி) என்பதை அறிந்த ஞானிகள், மரணத் தருவாயில் கூட என்னைப்பற்றிய முழு உணர்வுடன் இருப்பார்கள்.

 

சுபம்

 

https://draft.blogger.com/blog/post/edit/8301939112718011873/997938619641662296

https://draft.blogger.com/blog/posts/8301939112718011873

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக