ஸ்ரீமத் பகவத் கீதை
மூன்றாவது அத்தியாயம்
செயல் ஆற்றுதல் ( கர்ம யோகம்)
(செயல் உயர்ந்ததா, ஞானம் உயர்ந்ததா என்று
குழம்பி, ஏதாவது ஒன்றைத் தெளிவாகக் கூறுமாறு அர்ஜுனன் கேட்க, கிருஷ்ணர் இரண்டுமே அதனதன்
வகையில் சிறந்தது என்று கூறி, அவரவர் கடமைகளை, அவாற்றால் விளையும் பயனை எதிர் பார்க்காமல்
செய்வது தான் மிகவும் சிறந்தது என்று விளக்குகிறார். மேலும், புலன்களைக் கட்டுப்பாட்டுக்குள்
வைத்திருக்க வேண்டிய அவசியத்தையும் உறுதிப் படுத்துகிறார்.)
1.
அர்ஜுனன் கேட்டான்: ஜனார்த்தனா! செயலைக்காட்டிலும் ஞானமே உயர்ந்தது
என்று நீ நினைக்கிறாய் என்றால், என்னை ஏன் இந்த பயங்கரமான போரில் ஈடுபடச் சொல்கிறாய்?
2.
உன்னுடைய இந்தத் தெளிவற்ற உபதேசம் என்
அறிவைத் திகைக்கச் செய்கிறது. எனக்கு மேலான நன்மையைப் பெற்றுத் தரக்கூடிய ஒரு வழியைத்
தெளிவாகத் தீர்மானமாகக் கூறுவாயாக!
3.
ஸ்ரீ பகவான் கூறினார்: ஞான ஒளி பெறுவதற்கான
இரண்டு வழிகளைப்பற்றி முன்னமே நான் கூறியிருக்கிறேன். தியானத்தில் ஈடுபடுபவர்கள் புத்தியின்
வழியையும், செயல் புரிவதில் நாட்டம் கொண்டவர்கள் செயல்வழியையும் பின்பற்ற வேண்டும்.
4.
ஞான வழியைப்பின்பற்றுபவன், செயல்களில்
ஈடுபடாமல் இருப்பதனாலேயே, அவற்றின் விளைவுகளில் இருந்து தப்பித்து விட முடியாது. அதே
போலச் செயல்களைத் துறந்து விடுவதால் மட்டும், முழுமையான ஞானத்தை ஒருவன் பெற்று விட
முடியாது.
5.
செயலில் ஈடுபடாமல் யாராலும் ஒரு கணம்
கூட இருக்க முடியாது. அனைத்து உயிர்களும், தங்களுக்கு இயற்கையாக அமைந்துள்ள முக்குணங்களின்
( சத்வம், ரஜஸ், தமஸ்) சேர்க்கையால் அதற்கேற்ற படி செயல் செய்து தான் ஆக வேண்டும்.
6.
தங்கள் புலன்களைக் கட்டுப்படுத்தி, வெளிப்படையாகச்
செயலில் ஈடுபடாதவர்கள் கூட, அந்தப் புலன்களுடன் தொடர்புள்ள பொருட்களைப்பற்றி, மனதில்
நினைத்துக்கொண்டு தான் இருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்கள் தங்களைத் தாங்களே ஏமாற்றிக்கொள்ளும்
பாசாங்குக்காரர்கள் ஆவார்கள்.
7.
அர்ஜுனா! ஆனால், தங்கள் அறிவுப் புலன்களை
மனத்தினால் கட்டுப்படுத்தி, பற்றில்லாமல் செயல் புரிபவர்கள் நிச்சயம் உயர்ந்தவர்கள்.
8.
உனக்கு விதிக்கப்பட்ட கடமைகளை நீ செய்து
தான் ஆக வேண்டும். ஏனென்றால், செயல் புரிவது செயல் புரியாதிருப்பதை விட உயர்ந்தது.
செயல்களை நிறுத்தி விட்டால், உன்னால் உன் உடலைக் கூடப் பராமரிக்க இயலாது.
9.
செயல்களை இறைவனுக்குச் செய்யும் வேள்வியாகக்
கருத வேண்டும். இல்லாவிட்டால், செயல் இந்த உலகத்துடன் பந்தத்தை உண்டாக்கி விடும். ஆகவே,
குந்தியின் புதல்வனே! உனக்கு விதிக்கப்பட்ட கடமைகளை, அவற்றின் விளைவுகளின் மீது பற்று
வைக்காமல், இறைவனுக்கு வேண்டி, நிறைவேற்றுவாயாக!
10.பிரம்மா மனிதர்களைப் படைக்கும் போதே, , அவர்களுக்குரிய கடமைகளுடனேயே
படைத்து, அவர்களிடம் கூறினார், “இந்த வேள்விகளைச்செய்து செழிப்புடன் வாழுங்கள்! இந்த
வேள்விகள் ( செயல்கள்) நீங்கள் அடைய விரும்பும் அனைத்தையும் உங்களுக்கு அளிக்கும்.
“
11.உங்கள் வேள்விகள், தேவர்களை மகிழ்விக்கும். மனிதர்களும் தேவர்களும்
பரஸ்பரம் ஒத்துழைப்பதன் மூலம், அனைவருக்கும் வளமான வாழ்வு கிடைக்கும்.
12.வேள்விகளால் மகிழ்ந்த தேவர்கள் நீங்கள் விரும்பிய அனைத்தையும்
உங்களுக்கு அளிப்பார்கள். ஆனால், தங்களுக்குக் கிடைத்தவற்றை எல்லாம் அனுபவித்துக்கொண்டு,
தேவர்களை வேள்விகள் மூலம் திருப்தி அடையச் செய்யாதவர்கள், உண்மையில் திருடர்களுக்கு
நிகராவார்கள்.
13.வேள்வியில் நிவேதனம் செய்யப்பட்ட உணவை மட்டுமே உண்ணும் ஆன்மீகவாதிகள்
அனைத்து விதமான பாவங்களில் இருந்தும் விடுவிக்கப் படுகிறார்கள். அப்படியல்லாமல், தங்களுடைய
மகிழ்ச்சிக்காகவே சமைத்து உண்பவர்கள் பாவத்தையே உண்கிறார்கள்.
14.அனைத்து உயிர்களும் உணவினால் உயிர் வாழ்கின்றன. உணவு, மழையால்
விளைகிறது. மழை வேள்விகள் செய்வதால் வருகிறது. வேள்வி என்பது அவரவர்க்கு விதிக்கப்பட்ட
கடமைகளை ஒழுங்காகச்செய்வது ஆகும்.
15.மனிதர்களின் கடமைகள் வேதங்களில் வரையறுக்கப்பட்டுள்ளன. வேதங்கள்
இறைவனால் வெளிப்படுத்தப்பட்டவை. ஆகவே எங்கும் நிறைந்திருக்கும் இறைவன் எல்லாச் செயல்களிலும்,
எப்போதும், இருக்கிறான்.
16.பார்த்தனே! இறைவனால் நிறுவப்பட்ட வேள்வியின் சுழற்சியில், தங்களுடைய
பொறுப்புகளை ஏற்று நிறைவேற்றாதவர்கள் பாவம் செய்பவர்கள். அவர்கள் தங்கள் புலனின்பத்துக்காக
மட்டுமே வாழ்கிறார்கள். உண்மையில் அவர்களுடைய வாழ்க்கையே வீண் தான்.
17.ஆனால், தன்னுடைய ஆத்மாவிலேயே லயித்து மகிழ்ந்து, தன்னிலே திருப்திப்
படுபவர்களுக்குக் கடமை என்பதே கிடையாது.
18.அவ்வாறு, தன்னை முழுமையாக உணர்ந்த ஆத்மாக்கள் தங்கள் கடமைகளை நிறைவேற்றுவதாலோ
அல்லது, அவற்றைத் துறப்பதாலோ, அடையப்போவதோ, இழக்கப்போவதோ, எதுவும் இல்லை. தங்கள் விருப்பங்களை
நிறைவேற்றிக்கொள்ள அவர்கள் வேறு யாரையும் நம்ப வேண்டியதும் இல்லை.
19.ஆகவே, பற்றுதல் இல்லாமல், கடமை என்று கருதி, உன் செயல்களைச் செய்வாய்! ஏனெனில் விளைவுகளின் மேல்
பற்று வைக்காமல் செயல் புரிவதால், ஒருவன் பரம்பொருளையே அடைகிறான்.
20.தங்கள் கடமைகளைச் சரியாகச் செய்ததன் மூலம் ஜனக மன்னர் போன்றவர்கள்
மேல் நிலையை அடைந்தார்கள். நீயும் இந்த உலகத்தின் நன்மைக்காக, ஒரு நல்ல உதாரணமாக இருந்து,
உன் கடமைகளைச் சரியாகச் செய்ய வேண்டும்.
21.சிறந்த மனிதர்கள் செய்வதைத்தான் சாதாரண மனிதர்கள் பின்பற்றுகிறார்கள்.
அவர்கள் ஒரு தரத்தை ஏற்படுத்தி விட்டால், இந்த உலகம் அதையே தொடர்கிறது.
22.பார்த்தனே! இந்த மூன்று உலகங்களிலும், நான் செய்ய வேண்டிய கடமை
என்பது இல்லவே இல்லை. நான் பெற வேண்டியதோ, அடைய வேண்டியதோ எதுவுமே இல்லை. ஆனாலும்,
நான் சில கடமைகளை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறேன்.
23.பார்த்தனே! இவ்வாறு விதிக்கப்பட்ட கடமைகளை நான் கவனத்துடன் நிறைவேற்றவில்லை
என்றால், எல்லாரும் என்னையே பின் பற்றிக் கடமை செய்யாமல் விட்டுவிடுவார்கள்.
24.நான் கடமைகளை நிறைவேற்றாவிட்டால், இந்த உலகத்தின் செயல்பாடுகள்
அனைத்தும் தடுமாறி விடும். அதன் பின் ஏற்படும் குழப்பங்களுக்கும் நான் பொறுப்பாவேன்.
இந்த மனித குலமும் அமைதி இழந்து விடும்.
25.பரத வம்சத்தவனே! அறியாமை நிறைந்த மக்கள் பலனை எதிர்பார்த்து, அவற்றின்
மீது பற்று வைத்துச் செயல்களைச் செய்வதைப்போலவே, ஞானிகள் மக்களை நல்வழிப் படுத்துவதற்காக,
பற்றில்லாமல் செயலாற்ற வேண்டும்.
26.பலனை எதிர்பார்த்துச் செயல்களைச் செய்யும் அறியாத மக்களின் மனத்தில்,
‘செயல் புரிய வேண்டியதில்லை’ என்று சொல்லி, அறிஞர்கள் முரண்பாடுகளை விதைக்கக்கூடாது.
மாறாக, அறிவார்ந்த வகையில் தங்கள் கடமைகளை நிறைவேற்றுவதன் மூலம், அறியாதவர்களும் தங்கள்
கடமைகளை சரிவரச் செய்யுமாறு தூண்ட வேண்டும்.
27.அனைத்துச் செயல்களும், இயற்கையாக அமைந்துள்ள மூவகைக் குணங்களாலேயே
நடைபெறுகின்றன. ஆனால், இதை அறியாதவன், இந்த உடலையே, தான் என்று நினைத்துக்கொண்டு, தானே
செயல்களைச் செய்வதாக எண்ணிக் கொள்கிறான்.
28.வலிமை மிக்க தோள்களை உடையவனே! தெளிவு பெற்ற அறிஞர்கள் இந்த ஆத்மா
குணங்களில் இருந்தும், செயல்களில் இருந்தும் வேறு பட்டது என்பதை அறிந்திருக்கிறார்கள்.
புலன்கள், மனம், முதலியவைகள் தான், பொருட்களுடன் தொடர்பு கொள்ளுகின்றன என்பதை அவர்கள்
உணர்ந்திருக்கிறார்கள். ஆகவே அவர்கள் இந்த பந்தங்களில் சிக்கிக்கொள்வதில்லை.
29.ஆனால், உடல் வேறு, ஆன்மா வேறு என்று உணராதவர்கள், இந்த குணங்களால்
நடக்கும் செயல்கள் மீதும், அவற்றின் விளைவுகள் மீது பற்று வைக்கிறார்கள். ஆனால், உண்மை
நிலையை உணர்ந்த ஞானிகள் அந்த அறியாத மக்களைக்
குழப்பக்கூடாது.
30.செய்யும் செயல்களையெல்லாம் எனக்கு அளிக்கும்
நிவேதனமாகச் செய்து, என்னைப் பரம்பொருள் என்றுணர்ந்து தியானிப்பாயாக! ஆசையையும், சுயநலத்தையும்
துறந்து, உனது சோகம் நீங்கிப் போர்புரிவாயாக!
31.ஆழ்ந்த நம்பிக்கையுடனும், பொறாமையின்றியும்,
என்னுடைய உபதேசத்தின் படி நடப்பவர்கள், செயல்களால் உண்டாகும் பந்தங்களில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள்.
32.ஆனால், சுய அறிவும் பகுத்துணரும் திறமையும்
இல்லாமல், என் உபதேசங்களில் குற்றம் காண்பவர்கள், அவற்றை மதிக்காமல், தங்கள் அழிவைத்
தாங்களே தேடிக்கொள்கிறார்கள்.
33.ஞானிகளுமே அவர்களுடைய இயற்கையான குணங்களின்
படி தான் நடந்து கொள்கிறார்கள், ஏனென்றால், அனைத்து உயிர்களுமே அவரவர்களுடைய இயல்பின்படி
தான் செலுத்தப்படுகின்றன. ஒருவர் மற்றவரை அடக்குவதால் என்ன லாபம்?
34.புலன்கள் இயல்பாகவே பொருட்களின் மீது விருப்போ அல்லது வெறுப்போ
கொள்கின்றன. ஆயினும், அவைகளுக்கு அடங்கிப்போகாதே. அவைகள் உன்னைத் தாக்குவதற்காகக் காத்திருக்கும்
எதிரிகள்.
35.ஒருவன் தனக்காக விதிக்கப்பட்ட கடமையைச் செய்யும் போது ஒரு சில
குறைகள் இருந்த போதிலும், அது, பிறருக்குண்டான கடமைகளை மிகச் சிறப்பாகச் செய்வதைக்காட்டிலும்
சிறந்தது. பிறருக்குண்டான கடமைகளைச் செய்வதை விடத், தனது கடமைகளை நிறைவேற்றும் போது
இறக்க நேரிடினும், அது சிறந்ததே. பிறருக்குண்டான கடமைகள் ஆபத்துகள் நிறைந்தவை.”
36.அர்ஜுனன் கேட்டான்: “வ்ருஷ்ணி குலத்தில் உதித்தவனே ( கிருஷ்ணன்)
ஒரு மனிதன் ஏன் விருப்பமில்லாமலே, பலவந்தமாகப் பாவ காரியங்கள் செய்யும் படி உந்தப்படுகிறான்?”
37.ஸ்ரீ பகவான் கூறினார்: “ரஜோகுணத்தில் தோன்றிய காமமும் ( தீவிர விருப்பம்) கோபமும், எதையும் விழுங்கி
விடக்கூடிய, பாவமே வடிவான எதிரிகள் என்று அறிவாய்!
(நம் ஆசைகளை நிறைவேற்ற, நிறைவேற்ற, அது
இன்னும் வளர்கிறது. கோபமும் அப்படித்தான்.)
38.நெருப்பானது புகையாலும், கண்ணாடி தூசியாலும், கருவானது கருப்பையாலும்
மறைக்கப் படுவதைப் போன்றே, ஒருவனுடைய அறிவானது ஆசையால் மறைக்கப் படுகின்றது.
39. குந்தியின் புதல்வனே! சிறந்த ஞானிகளின் அறிவு கூட, ஒருபோதும்
திருப்தியடையாமல், நெருப்பைப்போல எரிந்து கொண்டிருக்கும் ஆசையால் மூடப்பட்டு விடுகிறது.
40.ஆசையானது ஒருவனுடைய புலன்கள், மனம், புத்தி ஆகியவற்றில் நிலைத்து வளர்கிறது. அவற்றின் வழியாகவே
அது ஒருவனது அறிவை மயக்குகிறது.
41.ஆகவே, பரத வம்சத்தவர்களுள் சிறந்தவனே! முதலில், உன்னுடைய புலன்களைக்
கட்டுக்குள் கொண்டு வந்து, பாவத்தின் உருவமான, அறிவை அழிக்கும் ஆசையைக் கொல்வாயாக!
42.இந்த உடலைக்காட்டிலும், புலன்கள் உயர்ந்தவை; புலன்களைக் காட்டிலும்
மனம் உயர்ந்தது; மனதைக் காட்டிலும் அறிவு உயர்ந்தது. அறிவையும் விட ஆத்மாவே உயர்ந்தது.
43.ஆகவே, வலிமை மிக்க தோள்களை உடைய அர்ஜுனா! அறிவைக்காட்டிலும் ஆத்மா
உயர்ந்தது என்பதை அறிந்து கொண்டு, உன்னுடைய உயர்ந்த ஆத்மாவின் வலிமையால் உன் புலன்கள்,
மனம், அறிவு ஆகியவற்றை அடக்கி, ஆசையென்னும் வலிமையுடைய எதிரியைக் கொல்வாயாக!
சுபம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக