திங்கள், 27 நவம்பர், 2023

 

ஸ்ரீமத் பகவத் கீதை

 

ஒன்பதாவது  அத்தியாயம்

ராஜ வித்யா யோகம்

( ராஜ வித்தை கற்றல்)

 

(இந்தப் பிரபஞ்சம் முழுவதும் இறைவனே ஊடுருவியிருக்கிறான் என்பதைப் புரிந்து கொண்டு, அவன் மேல் இடையறாமல் அன்பு செலுத்தித், தான் செய்யும் செயல்களனைத்தையும் அவனுக்கே அர்ப்பணிப்பவர்கள் இறைவனையே அடைகிறார்கள். அவர்களுடைய யோக க்ஷேமங்களின் பொறுப்பை இறைவனே ஏற்றுக் கொள்கிறான்.)

 

 

1.     அர்ஜுனா! பொறாமையற்றவனான உனக்கு, மிகவும் ரகசியமான இந்த ஞானத்தைப் புகட்டப் போகிறேன். இதைப்பெறுவதனால், உலக வாழ்க்கையின் துன்பங்களில் இருந்து நீ விடுதலை பெறுவாய்.

 

2.     ஸ்ரீ கிருஷ்ணர் கூறினார்: கல்விகளுக்கெல்லாம் அரசன் போன்ற கல்வி இது. மிகவும் ரகசியமானது; கேட்போரைப் புனிதப்படுத்துவது; நேரடியாகப்புரிந்து கொள்ளத்தக்கது; தர்மத்தின் வழியில், இதை அனுசரிப்பதும் எளிது; அதன் பலனோ எக்காலத்தும் இருக்கக்கூடியது.

 

3.     பரந்தபனே! தர்மத்தில் சிரத்தை இல்லாதவர்களால் என்னை அடைய முடியாது. அவர்கள் பிறப்பு-இறப்புச் சுழற்சிக்குட்பட்ட இந்த உலகத்தில் பிறக்கிறார்கள்.

 

4.     இந்தப் பிரபஞ்சம் முழுவதும், என்னை வெளிப்படுத்திக் கொள்ளாமல் நான் ஊடுருவியிருக்கிறேன். எல்லா உயிர்களும் என்னுள் இருக்கின்றன. ஆனால், நான் அவற்றுள் இருப்பதில்லை.

 

5.     என்னுடைய அற்புதமான தெய்வீக ஆற்றலைப்பார்! அனைத்து உயிர்களையும் படைப்பவனும், காப்பவனுமாக நான் இருந்தாலும், அவைகளின் இயல்பால் நான் எந்த வகையிலும் பாதிக்கப் படுவதில்லை.

 

6.     பலம் பொருந்திய காற்றானது எல்லா இடங்களிலும் வீசினாலும், ஆகாயத்திலேயே இருப்பது போல, அனைத்து உயிர்களும், எங்கெங்கோ இருந்தாலும், என்னுள் தான் இருக்கின்றன.

 

7.     குந்தியின் புதல்வனே! ஒரு கல்ப காலம் ( ஆயிரம் மஹாயுகங்கள் ; ஒரு மஹாயுகம் என்பது நான்கு யுகங்களின் சேர்க்கை) முடியும் போது , அனைத்து உயிர்களும், என்னுடைய மூலமான ஆற்றலில் ஒடுங்கி விடுகின்றன. அடுத்த படைப்பின் தொடக்கத்தில் அவைகளுக்கு மீண்டும் நான் உருவம் கொடுத்து, அவைகளை வெளிப்படுத்துகிறேன்.

 

8.     என் இயல்பான தெய்வீக ஆற்றலால், எண்ணற்ற உயிர்களை, அவைகளின் இயல்பின் படி பிறக்க வைக்கிறேன். எங்கு எப்படி பிறக்கப் போகின்றன என்பது அவைகளின் வசத்தில் இல்லை.

 

9.     தனஞ்சயனே! இத்தனை செயல்களை நான் செய்தாலும், இவை எதுவும் என்னைக் கட்டுப்படுத்துவதில்லை. இந்தச் செயல்களில் இருந்து விலகி நின்று, இவையெல்லாம் எனக்குச் சம்பந்தமில்லாதவை போல இருக்கிறேன்.

 

10.குந்தியின் புதல்வனே! எனது ஆணைப்படி, இயற்கையின் ஆற்றல், உயிருள்ள மற்றும் உயிரற்ற பொருட்களை உருவாக்குகிறது. அதன்படி, இந்த உலகம், பலவிதமான மாற்றங்களுக்கு உட்படுகிறது.

 

11.நான் மனித உருவம் எடுத்து இந்தப்பூமியில் அவதாரம் எடுக்கும் போது, மூடர்கள் என்னை அறிந்து கொள்வதில்லை. எல்லா உயிர்களுக்கும் தலைவனாகிய எனது தெய்வீக ஆற்றலை அவர்களால் உணர முடிவதில்லை.

 

12.அவர்கள் இயற்கையின் சக்தியால் மோகத்துக்குட்பட்டுப், பயனற்ற ஆசைகள், பயனற்ற செயல்கள், பயனற்ற அறிவு ஆகியவற்றின் மூலம், அசுர குணங்களை அடைந்து, இறைவனே இல்லை என்று எண்ணத் தொடங்குகிறார்கள்.

 

13.பார்த்தனே! ஆனால், என்னுடைய தெய்வீக சக்தியில் புகலடைந்த மகாத்மாக்கள், கிருஷ்ணனாகிய நான் தான் இந்தப் படைப்புக்கெல்லாம் மூல காரணம் என்பதை அறிந்து, வேறு எந்தச் சிந்தனையும் இன்றி, என்னிடம் மட்டுமே மனதைச் செலுத்துகிறார்கள்.

 

14.அவர்கள் எப்பொழுதும் என் புகழையே பாடிக்கொண்டு, தீவிரமாகப் பயிற்சி செய்து, என்னைப் பணிந்து வணங்கி, என்னில் இணைந்து, என்னை அன்புடன், இடைவிடாமல் வழிபடுகிறார்கள்.

 

15.சிலர், அறிவை வளர்த்துக்கொள்ளும் ஞானவேள்வியில் ஈடுபட்டு என்னைப் பலவிதமாக வழிபடுகிறார்கள். வேறு சிலர் என்னைத் தாங்களாகவே கருதிக் கொள்கிறார்கள்; மற்றும் சிலர் என்னைத் தங்களிலிருந்து வேறானவன் என்று நினைக்கிறார்கள். இன்னும் சிலர் என் தெய்வீக வடிவை எண்ணற்ற உருவங்கள் மூலம் வழிபடுகிறார்கள்.

 

16.வைதிகச் சடங்கும் நானே, வேள்வியும் நானே, வேள்வியில் இடும் ஆஹுதியும் நானே. மருந்தாகும் மூலிகையும் நானே,வேத மந்திரமும் நானே. நானே நெய், நானே நெருப்பு, நானே ஆஹுதி இடும் செயலும் ஆகிறேன்.

 

17.இந்தப் பிரபஞ்சத்துக்கு, நானே தந்தை, நானே தாய், நானே பாதுகாப்பவன், நானே மூல பிதாமகன். நானே தூய்மைப்படுத்துபவன், நானே அறியத்தக்கவன், நானே புனிதமான ‘ஓம்’ என்னும் மந்திரம். நானே ரிக்வேதம், நானே சாமவேதம், நானே யஜுர்வேதம்.

 

18. அனைத்து உயிர்களும் அடைய விரும்பும் குறிக்கோள் நானே. நானே அவைகளைப் பாதுகாப்பவன், அவைகள் செய்யும் செயல்களுக்கெல்லாம் சாட்சி. நானே, அவையனைத்துக்கும், இருப்பிடமும், புகலிடமும், உற்ற நண்பனும் ஆகிறேன். நானே அனைத்துக்கும் மூலம், நானே அனைத்துக்கும் முடிவு, என்னில் தான் இந்தப்படைப்பு நிலை பெற்றிருக்கிறது. நானே அனைத்தையும் வைத்திருக்கும் களஞ்சியம். நானே, அனைத்துக்கும் நிரந்தரமான விதையாகவும் இருக்கிறேன்.

 

19.நானே, சூரியனாய்க் கொளுத்துகிறேன். நானே மழையைக் கொடுக்கிறேன்; அதைப் பெய்யாமல் நிறுத்தியும் வைக்கிறேன். நானே மரணமில்லாத நிலை; நானே மரணத்தின் உருவமும் கூட. அர்ஜுனா! நானே பொருளாகவும் இருக்கிறேன்; அதனுள்ளிருக்கும் ஆத்மாகவும் இருக்கிறேன்.

 

20.பலன்களை விரும்பி, வேதங்களில் கூறப்பட்டுள்ள சடங்குகளைச் செய்பவர்கள், அவை மூலம் என்னை வழிபடுகிறார்கள். வேள்வியின் பிரசாதமாக சோமபானத்தை அருந்தித் தூய்மையடைந்த அவர்கள் தங்கள்  நற்செயல்களால் தேவேந்திரன் வசிக்கும் சுவர்க்கத்துக்குச் சென்று அங்கே தேவர்களுக்குரிய இன்பங்களை அனுபவிக்கிறார்கள்.

 

21.அங்கே , தங்களுடைய புண்ணிய பலன் தீரும் வரை அந்த சுகங்களை அனுபவித்த பின்னர், மீண்டும், பூமியில் பிறக்கிறார்கள்.  இவ்வாறு, உலக இன்பங்களை விரும்பி, வைதிக சடங்குகளைச் செய்பவர்கள், மீண்டும், மீண்டும், இந்த உலகத்திற்கு வந்து போகிறார்கள்.

 

22. இடைவிடாமல், என்னையே நினைத்துக்கொண்டு, என்னிடம் பிரத்தியேக பக்தி செய்பவர்களுடைய யோக க்ஷேமங்களுக்கு  நான் பொறுப்பெடுத்துக்கொள்கிறேன். ( யோகம் - இனி வரவேண்டிய நன்மை. க்ஷேமம்- ஏற்கனவே இருக்கும் நல்ல நிலைமை. அதாவது, இனி வர வேண்டிய நன்மை சரியான நேரத்துக்கு வரும் படியும், ஏற்கனவே இருக்கும் நல்ல நிலைமை கெடாமல் காத்தும் ரக்ஷிக்கிறேன்)

 

23.குந்தியின் புதல்வனே! வேறு தெய்வங்களை சிரத்தையுடன் வழிபடுவோரும், என்னையே தான் வழிபடுகிறார்கள். ஆனால், அவர்கள் தவறான வழியில் வழிபடுகிறார்கள்.

 

24.அனைத்து வேள்விகளையும் அனுபவிப்பவனும் நான் தான். அவையனைத்துக்கும் தலைவனும் நான் தான். இதை அறியத் தவறியவர்கள், மீண்டும் பிறந்து தான் ஆக வேண்டும்.

 

25.தேவதைகளை வழிபடுபவர்கள் தேவதைகளிடையேயும், முன்னோர்களை வழிபடுபவர்கள் முன்னோர்களிடையேயும், பேய், பூதங்கள், போன்றவைகளை வழிபடுபவர்கள், அவைகளிடையேயும் பிறப்பு எடுக்கிறார்கள். ஆனால், என்னை வழிபடுபவர்கள், என்னிடமே வந்து சேர்கிறார்கள்.

 

26.தூய உள்ளத்துடனும், பக்தியுடனும், எனக்கு ஒரு இலையையோ, ஒரு புஷ்பத்தையோ, ஒரு பழத்தையோ, கொஞ்சம் நீரையோ அர்ப்பித்தால் கூட, அவற்றை, நான் மிகவும் மகிழ்வுடன் ஏற்றுக்கொள்கிறேன்.

 

27.குந்தியின் புதல்வனே! நீ எதைச் செய்தாலும், எதைச் சாப்பிட்டாலும் எதை வேள்வியில் ஆஹுதியாய் அளித்தாலும், எதைத் தானமாகக் கொடுத்தாலும், என்ன விதமான தவத்தில் ஈடுபட்டாலும், அவையனைத்தையும் எனக்கு அர்ப்பணித்து விடு.

 

28.இவ்வாறு, உன் செயல்களையெல்லாம் எனக்கு அர்ப்பணிப்பதன் மூலம், செயல்களினால் உண்டாகும் நல்ல அல்லது தீய விளைவுகளில் இருந்து  நீ விடுவிக்கப்படுவாய். மற்ற எதன் மேலும் பற்றின்றி, என் மீதே பற்று வைத்துள்ளதால், நீ இந்த பந்தங்களில் இருந்து விடுதலை பெற்று, என்னை அடைவாய்.

 

29.எனக்கு எல்லா உயிர்களும் சமம் தான்.  நான் யாரையும் விரும்புவதும் இல்லை; வெறுப்பதும் இல்லை. ஆனால், அன்புடன் என்னை வழிபடும் பக்தர்கள் என்னுள் இருக்கிறார்கள்; நான் அவர்களுள் இருக்கிறேன்.

 

30.கொடிய பாவம் செய்தவர்கள் கூட, மனம் திருந்தி, என்மேல் தீவிர பக்தி கொண்டு, என்னை வழிபடுவார்களேயானால், அவர்களும் நல்லவர்கள் என்றே கருதப்படுவார்கள்.

 

31.குந்தியின் புதல்வனே! அவர்கள் விரைவிலேயே தர்மாத்மாக்களாக ஆகி, நிலையான அமைதியை அடைகிறார்கள். என் பக்தர்களுக்கு எப்போதும் அழிவில்லை என்பதைத் தைரியமாக இந்த உலகுக்கு அறிவிப்பாயாக!

 

32.என்னைச் சரணடைபவர்கள், கீழான பிறப்பு எடுத்திருந்தாலும், அவர்கள் பெண்களாக இருந்தாலும், வைஸ்யரோ அல்லது உடலுழைப்பு செய்பவரோ ஆனாலும், மகோன்னதமான பதத்தை அடைவார்கள்.

 

33.அப்படி இருக்கும் போது, அரசர்கள், ராஜரிஷிகள், மற்றும் உயர் குலத்தோரைப்பற்றிக் கூறவும் வேண்டுமா? ஆகவே, நிலையற்றதும், இன்பமில்லாததும் ஆன இந்த உலகத்துக்கு வந்த பின்னர், என் மேல் பக்தி செலுத்துவாயாக!

 

34.எப்போதும் என்னையே நினை! என்னையே பக்தியுடன் வணங்கு. உன் உடலையும் உள்ளத்தையும் எனக்கு அர்ப்பணித்து விடுவதால், நீ நிச்சயம் என்னிடம் வந்து விடுவாய்.

 

சுபம்

 

https://www.blogger.com/.../830193911.../2451952985088122531

https://www.blogger.com/blog/posts/8301939112718011873

 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக