சனி, 25 நவம்பர், 2023

 

 ஸ்ரீமத் பகவத்கீதை

அத்தியாயம் 1

அர்ஜுனனின் துயரம் (அர்ஜுன விஷாத யோகம்)

( மகாபாரதப் போர் தொடங்குவதற்கு முன், திருதராஷ்டிரர் போர்க்களத்தில் நடக்கும் அனைத்து நடவடிக்கைகளையும் தெரிந்து கொள்ள விரும்புகிறார். அதற்காக, அவருடைய நம்பிக்கைக்குப் பாத்திரரான ஸஞ்சயனுக்கு, வியாசர் திவ்ய த்ருஷ்டியை வழங்குகிறார். அதன் மூலம் போர்க்களத்தின் எந்தப் பகுதியில் எது நடந்தாலும் அதை நேரில் பார்ப்பது போல் ஸஞ்சயனால் மனக் கண்ணில் பார்க்க முடிகிறது. இருந்த இடத்திலிருந்தே, அங்கு நடந்தவைகளை அவர் த்ருதராஷ்டிரருக்கு வர்ணிக்கிறார்.

பகவத்கீதையின் முதல் ஸ்லோகத்தில் மட்டும் தான் த்ருதராஷ்டிரர் பேசுகிறார். மற்ற அனைத்து ஸ்லோகங்களும் ஸஞ்சயனின் வாய் மூலமான வர்ணனை தான். நடு நடுவில், அர்ஜுனன், க்ருஷ்ணன் ஆகியோர் பேசுவதை, அவர்களுடைய சொற்கள் மூலமாகவே  ஸஞ்சயன் விவரிக்கிறார்.

தர்மக்ஷேத்திரமாகிய குருக்ஷேத்திரத்தில் என் புதல்வர்களும், பாண்டவர்களும் என்ன செய்தார்கள் என்று த்ருதராஷ்டிரன் கேட்கவும், ஸஞ்சயன் பேசத் தொடங்குகிறார். துர்யோதனன் பீஷ்மரிடம் பேசியதையும், தனக்குத் தேரோட்டியாக இருந்த க்ருஷ்ணனிடம் அர்ஜுனன் தேரை இரண்டு சேனைகளுக்கும் இடையே நிறுத்தச் சொன்னதையும், க்ருஷ்ணர் அவ்வாறே செய்ததையும், இரண்டு அணிகளிலும், தனது நண்பர்களும் உறவினர்களுமே இருப்பதைக் கண்ட அர்ஜுனன் இவர்களையெல்லாம் கொன்று, அதனால் கிடைக்கும் ஆட்சி ரத்தக் கறை படிந்ததாக இருக்கும் என்று எண்ணுவதையும், தாங்க முடியாத மனக் கலக்கம் அடைந்த அவன் க்ருஷ்ணரிடம், தன்னால் போர் புரிய இயலாது என்று கூறுவதையும் விவரிக்கிறார்.)


1. திருதராஷ்டிரர் கேட்டார்: “சஞ்சயனே! போரிட விரும்பி, புனிதமான

குருக்ஷேத்திரத்தில் கூடிய என் மகன்களும், பாண்டுவின் மகன்களும்

என்ன செய்தார்கள்?

2. சஞ்சயன் கூறினார்: “அணிவகுத்து நின்றிருந்த பாண்டவர்கள்

சேனையைப் பார்த்த துரியோதனன் தன் குருவான

துரோணாச்சாரியரை நெருங்கிப் பேசத்தொடங்கினான்.

3. “மரியாதைக்குரிய குருவே! தங்களுடைய திறமை மிக்க சீடனான

த்ருபதனின் மகனால் (த்ருஷ்டத்யும்னன்) மிகச்சிறந்த முறையில்

அணிவகுக்கப்பட்டுள்ள பாண்டவர்களின் சேனையைப்பாருங்கள்!


4, 5, 6. அவர்களுடைய அணியில் பீமனுக்கும் அர்ஜுனனுக்கும் நிகரான

போர்த்திறமையுள்ள யுயுதானன், விராடன், த்ருபதன் போன்ற வலிமை

மிக்க போர்வீரர்களைப் பாருங்கள்! மேலும், த்ருஷ்டகேது, சேகிதானன்,

காசியின் அரசன், புருஜித், குந்திபோஜன், சைப்யன் போன்ற மிகவும்

திறமை வாய்ந்த வீரர்களும் இருக்கிறார்கள். இவர்கள் மட்டுமன்றி,

தைரியசாலியான யுதாமன்யு, வீரம் நிறைந்த உத்தமௌஜன்,

சுபத்திரையின் மகன், திரௌபதியின் மகன்கள் முதலிய சிறந்த

வீரத்தலைவர்களும் இருக்கிறார்கள்.


7. அந்தணர்களுள் சிறந்தவரே! நம் அணியில் உள்ள,

படையைத்தலைமை ஏற்று நடத்துவதில் திறமை மிக்க, முக்கிய

படைத்தலைவர்களைப்பற்றியும் கேளுங்கள்! நான் அவர்களைப்பற்றி

உங்களுக்குக்கூறுகிறேன்.


8. எப்போதும் போரில் வெற்றியே காணும், தங்களைப் போன்ற

பீஷ்மரும், கர்ணனும், க்ருபரும், அஸ்வத்தாமாவும், விகர்ணனும்,

பூரிஸ்ரவாவும் உள்ளனர்.

9. எனக்காக உயிரையே கொடுக்கக்கூடியவர்களும், போர்க்கலையில்

சிறந்தவர்களும், பலவிதமான ஆயுதங்களை உடையவர்களுமான

வீரர்கள் இருக்கிறார்கள்.

10. பீஷ்ம பிதாமகரால் தலைமை தாங்கி வழி நடத்தப்படும் நமது

சேனையின் வலிமை அளவிடற்கரியது. ஆனால், பீமனால் வழி

நடத்தப்படும் பாண்டவர்களது சேனையோ அளவுக்கடங்கியது தான்.

11. ஆகவே கௌரவர்களின் சேனைத்தலைவர்கள் தங்கள் முக்கிய

நிலைகளைப் பாதுகாப்பதுடன், பாட்டனார் பீஷ்மபிதாமகருக்கு முழு

ஆதரவு கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.”

12. அதையடுத்து, துரியோதனனை மகிழ்விக்கும் பொருட்டு, குரு

வம்சத்தின் மூத்த தலைமகனான பீஷ்ம பிதாமகர், சிங்கத்தைப்போல

கர்ஜனை செய்து, தன் சங்கை எடுத்து உரக்க முழங்கினார்.

13. பிறகு, சங்குகளும், முழவுகளும், கொம்புகளும் ஒரே நேரத்தில்

ஒலிக்கவே, அவைகளின் ஒட்டு மொத்தப் பேரொலி அங்கே எழுந்தது.

14. பின்னர், பாண்டவர் அணியில் இருந்து, வெண்புரவிகள் பூட்டிய

தங்கள் தேரில் அமர்ந்து கொண்டு, மாதவனும், அர்ஜுனனும் தங்கள்

தெய்வீகமான சங்குகளை முழங்கினர்.

15. ஹ்ருஷீகேசன் தன்னுடைய ‘பாஞ்சஜன்யம்’ என்னும் சங்கையும்,

அர்ஜுனன் ‘தேவதத்தம்’ என்னும் சங்கையும் முழங்கினர். உண்பதில்

பேரார்வம் கொண்டவனும், பராக்கிரமம் மிக்க செய்ல்களைச் செய்யக்

கூடியவனுமான பீமன் ‘பௌண்ட்ரம்’ என்னும் தனது மகத்தான சங்கை

முழங்கினான்.

(16-18) அரசே! குந்தியின் மகனான மன்னர் யுதிஷ்டிரர் ‘அனந்தவிஜயம்’

என்ற சங்கையும், நகுலனும், சகாதேவனும் முறையே, ‘சுகோஷம்’,


‘மணிபுஷ்பகம்’ ஆகிய சங்குகளையும் முழங்கினர். மிகச்சிறந்த வில்

வீரனான, காசியின் அரசன், சிறந்த போர் வீரனான சிகண்டி,

த்ருஷ்டத்யும்னன், விராடன், எவராலும் வெல்ல முடியாத சாத்யகி,

த்ருபதன், திரௌபதியின் ஐந்து புதல்வர்கள், வலிமை பொருந்திய

ஆயுதங்களை ஏந்திய சுபத்திரையின் மகன் அபிமன்யு ஆகியோரும்

தங்கள் தங்கள் சங்குகளைத் தனித்தனியே முழங்கினார்கள்.

19. அந்தப் பேரொலியானது விண்ணிலும் மண்ணிலும், பேரிடி போல்

ஒலித்துத் தங்கள் புதல்வர்களின் நெஞ்சங்களச் சுக்கு நூறாக்கியது.

20. அரசே! அப்போது, தன்னுடைய தேரின் கொடியில் அனுமனை

வைத்துக்கொண்டுள்ள, பாண்டுவின் புதல்வனான அர்ஜுனன், தங்கள்

புதல்வர்களின் சேனை அணிவகுத்து நிற்பதைப்பார்த்துத், தன் வில்லை

எடுத்து, ஸ்ரீ க்ருஷ்ணரிடம் இவ்வாறு கூறினான்.”

(21-22).

“தன் நிலையில் இருந்து வழுவாத அச்யுதனே! இந்தப்பெரும் போரில்

நான் யாருடன் எல்லாம் போரிட வேண்டும் என்று தெரிந்து கொள்ள

உதவியாக, என்னுடைய தேரை இரண்டு சேனைகளுக்கும் இடையில்

கொண்டு செல்வாயாக!


23. திருதராஷ்டிரனின் மகனாகிய, தீய எண்ணங்கொண்ட

துரியோதனனை மகிழ்விக்க வேண்டி, யாரெல்லாம் அவனுக்காகப்

போரிட வந்துள்ளார்கள் என்று பார்க்க விரும்புகிறேன்.”

24. ஸஞ்சயன் கூறினான்: “ திருதராஷ்டிரரே! உறக்கத்தை வென்ற

அர்ஜுனன் இவ்வாறு கூறியதும், ஸ்ரீ கிருஷ்ணர் அந்த இரண்டு

சேனைகளுக்கு நடுவில் தன் மகத்தான தேரைச் செலுத்தி நிறுத்தினார்.

25. பீஷ்மர், துரோணாச்சாரியர் மற்றும் பிற அரசர்களின் முன்னிலையில்,

ஸ்ரீ கிருஷ்ணர் கூறினார்: “பார்த்தனே! இங்கு கூடியுள்ள குருவம்சத்தைச்

சேர்ந்தவர்களைப் பார்!”

26. அங்கே, அர்ஜுனன், இரண்டு சேனைகளிலும் இருந்த தன்

தந்தையரையும், பாட்டன்மாரையும், ஆசிரியர்களையும்,

அம்மான்மாரையும், சகோதரர்களையும், பங்காளிகளையும்,


புதல்வர்களையும், சகோதர சகோதரியரின் புதல்வர்களையும்,

பேரன்மாரையும், நண்பர்களையும், மாமனார்மாரையும், நலம்

விரும்பிகளையும் பார்த்தான்.

27. அங்கே இருந்த அனைத்து உறவினர்களையும் பார்த்த குந்தியின்

புதல்வனான அர்ஜுனன், இரக்கமும், ஆழ்ந்த வருத்தமும் மேலிட,

கீழ்க்கண்ட வார்த்தைகளைக் கூறினான்.

28. “ ஓ கிருஷ்ணனே! போருக்காக அணிவகுத்து, ஒருவரையொருவர்

கொல்வதற்குத் தயாராய் இருக்கும் என் உறவினர்களைப் பார்த்து என்

கை கால்கள் செயலிழக்கின்றன; என் வாய் உலர்ந்து போகிறது.

(29 – 31). என் உடல் முழுவதும் நடுங்குகிறது. என் முடி குத்திட்டு

நிற்கிறது. என் வில்லான காண்டீவம் என் பிடியில் இருந்து நழுவுகிறது.

என் தோல் முழுவதும் எரிகிறது. என் மனம் குழப்பத்தில் ஆழ்ந்திருக்கிறது.

என் தலை சுற்றுகிறது. என்னால் நிலையாக நிற்க முடியவில்லை.

ஓ கிருஷ்ணனே! கேசி என்னும் அசுரனைக்கொன்ற கேசவனே! கெடுதல்

வரப்போவதற்கான நிமித்தங்களையே காண்கிறேன். என் சொந்த

உறவினர்களை இந்தப்போரில் கொல்வதால் என்ன நன்மை விளைந்து

விடும் என்று என்னால் கணிக்க முடியவில்லை.

(32-33) ஓ கிருஷ்ணனே! எனக்கு வெற்றியோ, அரசோ, அல்லது அதனால்

கிடைக்கப்போகும் இன்பமோ, வேண்டாம். நாம் யாருக்காக இந்த

அரசையும், இன்பங்களையும், இந்த வாழ்க்கையையுமே

விரும்புகிறோமோ, அவர்களே நமக்கு எதிராகப் போர் புரிய நிற்கும்

போது, அவற்றால் என்ன பயன்?

(34-35) என் ஆசிரியர்கள், தந்தையர், மகன்கள், பாட்டன்மார்,

அம்மான்மார், பேரன்மார், மாமனார்மார், சகோதர சகோதரியரின்

மகன்கள், மைத்துனர்கள், யாவரும் தங்கள் உயிரையும்

உடைமைகளையும் பணயம் வைத்து இங்கே நிற்கிறார்கள். ஓ மதுசூதனா!

அவர்கள் என்னைத் தாக்கினாலும், நான் அவர்களைக்கொல்ல

விரும்பவில்லை. திருதராஷ்டிரரின் புதல்வர்களைக் கொன்று இந்த

மூவுலகத்தின் அதிகாரத்தையும் பெற்றாலும், என்ன திருப்தியை அடைந்து

விட முடியும்? பின் இந்தப்பூவுலகு எம்மாத்திரம்?


(36-37) உயிர்களனைத்தையும் பராமரிப்பவனே! திருதராஷ்டிரரின்

புதல்வர்களைக் கொல்வதனால் நமக்கு என்ன இன்பம் கிடைக்கும்?

அவர்கள் ஆக்கிரமிப்பாளர்களாக இருந்த போதிலும், அவர்களைக்

கொல்வதால் நமக்குப் பாவம் தான் வரும். ஆகவே, நம் பங்காளிகளான

திருதராஷ்டிரரின் புதல்வர்ளையும், பிற நண்பர்களையும் கொல்வது

நமக்கு உகந்ததல்ல. ஓ மாதவா! நம் உறவினர்களைக் கொன்று விட்டு

நாம் எவ்வாறு மகிழ்ச்சியாக இருக்க முடியும்?

(38-39) பேராசை வசப்பட்ட அவர்களுக்குத் தன் உறவினர்களை

அழிப்பதோ, நண்பர்களுக்கு துரோகம் செய்வதோ தவறாகப்படவில்லை.

ஆனாலும், ஓ ஜனார்த்தனா! நம் உறவினர்களைக் கொல்வது பெரிய

குற்றம் என்று உணர்ந்த நாம் ஏன் இந்தப்பாவத்தில் இருந்து

விலகக்கூடாது?

40. ஒரு வம்சம் அழிக்கப்படும் போது, அதன் பாரம்பரியங்கள்

அழிக்கப்படும். மீதியுள்ள குடும்பம் தர்மத்திலிருந்து விலகிப்போகும்.

41. தீமை முன்னுரிமை பெறும் போது, பெண்கள் ஒழுக்கம் கெடுவார்கள்.

வ்ருஷ்ணி வம்சத்தவனே! பெண்கள் ஒழுக்கம் கெட்டால் விரும்பத்தகாத

குழந்தைகள் பிறப்பார்கள்.

42. விரும்பத்தகாத குழந்தைகளால், அந்தக்குடும்பமும்,

அந்தக்குடும்பத்தை அழித்தவர்களுடைய குடும்பமும் நரகத்தைப்போன்ற

வாழ்க்கை வாழவேண்டி வரும். தங்களுக்குக் கிடைக்க வேண்டிய

பிண்டம், தண்ணீர் முதலியன கிடைக்காமல், அந்த வீழ்ச்சியடைந்த

குடும்பத்தின் முன்னோர்களும் வீழ்வார்கள்.

43. குடும்ப பாரம்பரியத்தை அழிப்பவர்களின் தீய செயல்களால்,

வேண்டாத குழந்தைகள் உருவாவது மட்டுமன்றிச் சமூகத்துக்கும்,

குடும்பத்துக்கும் நன்மை பயக்கும் பலவிதமான செயல்பாடுகளும் அழிந்து

போகும்.

44. ஓ ஜனார்த்தனா! குடும்ப பாரம்பரியத்தை அழிப்பவர்கள் எல்லையற்ற

காலத்துக்கு நரகத்தில் உழல்வார்கள் என்று கற்றவர்கள் சொல்ல நான்

கேட்டிருக்கிறேன்.


(45-46). ஐயகோ! இப்படிப்பட்ட கொடூரமான

பின்விளைவுகளைக்கொண்ட பெரிய பாவத்தை நாம் செய்யத் துணிந்தது

என்ன விந்தை! அரச இன்பங்களுக்காக, நம் உறவினர்களைக் கொல்லத்

துணிந்து விட்டோம். இதை விட ஆயுதம் இன்றி, எந்த எதிர்ப்பும் இன்றி,

திருதராஷ்டிரரின் புதல்வர்கள் மூலம் நான் ஆயுதங்களால்

கொல்லப்படுவதே சிறந்ததாக இருக்கும். “

47. சஞ்சயன் கூறினார்:

“ இவ்வாறு சொல்லிக்கொண்டே, அர்ஜுனன் தன் வில்லையும்

அம்புகளையும் தூர வைத்து விட்டு, மிகுந்த மனவேதனையுடனும், தாங்க

முடியாத துயரத்துடனும், தன் தேரில் சரிந்தான்.


சுபம் 



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக