ஸ்ரீமத் பகவத் கீதை
பத்தாவது அத்தியாயம்
(அர்ஜுனன்
ஸ்ரீ கிருஷ்ணருடைய தெய்வீகமான செல்வச்செழிப்பைத்
தனக்கு முழுமையாக விளக்கும்படி வேண்டிக் கொள்கிறான். ‘எந்த ஒரு பொருளாயிருந்தாலும்,
விலங்காக இருந்தாலும், மனிதனாக இருந்தாலும், பருவங்களாக இருந்தாலும், அவற்றுள் மிகச்
சிறப்பு வாய்ந்தவனாக இருப்பவன் நானே’ என்று கிருஷ்ணர் தெரிவிக்கிறார்.
இந்த அத்தியாயத்தில்,
மிகவும் அழகாகவும், சுருக்கமாகவும், தன்னுடைய தெய்வீகமான சிறப்புகளை, அர்ஜுனனுக்கு
விளக்குகிறார், ஸ்ரீ கிருஷ்ணர்.)
1.
ஸ்ரீ கிருஷ்ணர் கூறினார்: “ வலிமையுடைய
தோள்களை உடைய அர்ஜுனா! என்னுடைய தெய்வீகமான வார்த்தைகளை மீண்டும் கேள்! நீ என்னுடைய
பிரியமான நண்பன் ஆகையால், உனது நன்மைக்காகத் திரும்பவும் கூறுகிறேன்.
2.
தேவர்களும், மகரிஷிகளும் கூட என்னுடைய
மூலத்தை அறிய மாட்டார்கள். அந்தத் தேவர்களுக்கும், மகரிஷிகளுக்கும், மூலமே நான் தான்.
3.
எனக்குப் பிறப்பும் இல்லை; தொடக்கமும்
இல்லை. நான் தான் இந்தப் பிரபஞ்சத்தின் தலைவன். இந்த உண்மையை அறிந்தவர்கள் மோகத்தில்
இருந்தும், அனைத்து விதமான தீமைகளில் இருந்தும் விடுதலை அடைகிறார்கள்.
4.
புத்தி, அறிவு, எண்ணங்களில் தெளிவு, மன்னிக்கும் குணம், வாய்மை, புலன்களின் மீதும்,
மனத்தின் மீதும் கட்டுப்பாடு, இன்பம், துன்பம், பிறப்பு, இறப்பு, பயம், தைரியம்,
5.
அஹிம்சை, சமபாவம், திருப்தி, தவம், தானம்,
புகழ்ச்சி, இகழ்ச்சி ஆகிய மனிதர்களுடைய பல விதமான குணங்களும் என்னில் இருந்து தான்
தோன்றுகின்றன.
6.
சப்தரிஷிகளும், சனகர், சனந்தனர், , சனாதனர்,
சனத்குமாரர் என்ற நான்கு பிரம்ம குமாரர்களும், பதினான்கு மனுக்களும், என் மனதில்
இருந்து தான் தோன்றினார்கள். அவர்களில் இருந்து இவ்வுலகில் உள்ள பிற மனிதர்கள் தோன்றினார்கள்.
7.
என்னுடைய இத்தகைய சிறப்புகளை உள்ளது உள்ள
படி அறிந்தவர்கள், நிலையான பக்தியுடன், என்னுடன் இணைகிறார்கள். இதில் யாதொரு ஐயமும்
இல்லை.
8.
இந்தப் படைப்புக்கெல்லாம் மூலபுருஷன்
நான் தான். எல்லாம், என்னில் இருந்து தான் புறப்படுகின்றன. இதையுணர்ந்த ஞானிகள் தீவிர
நம்பிக்கையுடனும், பக்தியுடனும் என்னை வழிபடுகிறார்கள்.
9.
என்னுடைய பக்தர்கள், தங்கள் மனத்தை என்
மேல் செலுத்தித் தங்கள் வாழ்வையே எனக்கு அர்ப்பணித்து, ஒருவர் மற்றவரிடம் என்னுடைய
மகிமைகளைப் பற்றிப் பேசிக்கொண்டு, மிகுந்த திருப்தியும் மகிழ்ச்சியும் அடைகிறார்கள்.
10.என்னில்
அன்பும் பக்தியும் வைத்துத் தங்கள் மனதால் எப்போதும் என்னுடன் இணைந்திருப்பவர்களுக்கு,
என்னை அடைவதற்கான தெய்வீக அறிவை நான் வழங்குகிறேன்.
11.அவர்களுடைய
உள்ளத்துள் உறையும் நான், அவர்கள்
மீது தயை கூர்ந்து, ஞானமென்னும் திருவிளக்கால், அவர்களுடைய அறியாமை
என்னும் இருளைப் போக்குகிறேன்.”
12.அர்ஜுனன்
கூறினான்: “நீயே உயர்ந்த பரம்பொருள்; நீயே அடைவதற்குச் சிறந்த இடம்; நீயே புனிதப்படுத்துபவன்;
நீயே எப்போதும் இருக்கின்ற, பிறப்பற்ற, மூலாதாரமான தலைவன்.
13.தேவரிஷி
நாரதர், அஸிதர், தேவளர், வியாஸர் போன்ற ரிஷிகள் இதை உலகுக்கு அறிவித்திருக்கிறார்கள்.
இப்போது, நீயே அதை எனக்கு அறிவிக்கிறாய்.
14.கேசவா!
நீ உண்மையென்று எனக்குக் கூறிய அனைத்தையும் நான் அப்படியே ஏற்றுக் கொள்கிறேன். பகவானே!
உன்னுடைய உண்மையான ஸ்வரூபத்தை, தேவர்களாலும், அசுரர்களாலும் கூட அறியமுடியாது.
15.ஓ
புருஷோத்தமா! அனைத்து உயிர்களையும் பிறப்பித்தவனே! அனைத்து உயிர்களின் தலைவனே! தேவதேவனே!
இந்தப் பிரபஞ்சத்தின் அதிபதியே! உன்னால் மட்டுமே உன் ஸ்வரூபத்தை அறிந்து கொள்ள முடியும்.
16.அனைத்து
உலகிலும் ஊடுருவியிருக்கும் உன்னுடைய தெய்வீக
மான செல்வச்செழிப்பை எனக்கு முழுமையாக விளக்குவாயாக!
17.பகவானே!
யோகத்தின் தலையாய தலைவனே! உன்னை நான் எவ்வாறு அறிய முடியும் என்பதையும், உன்னை எந்த
எந்த வடிவங்களில் நினைத்து தியானிக்க முடியும்
என்பதையும் எனக்கு விளக்குவாயாக!
18.ஓ
ஜனார்த்தனா! பலவிதமாக வெளிப்படுகின்ற உனது மகோன்னதமான சிறப்புகளையும், செல்வங்களையும்
பற்றித் திரும்பவும் விளக்கமாகக் கூறுவாயாக! கேட்பதற்கு அமுதம் போல் இருக்கும் உன்
சிறப்புகளை எத்தனை முறை கேட்டாலும் அலுப்பதேயில்லை.”
19.ஸ்ரீ
கிருஷ்ணர் கூறினார்: “குரு வம்சத்துள் சிறந்தவனே! என்னுடைய தெய்வீகமான சிறப்புகளை உனக்குச்
சுருக்கமாகக் கூறுகிறேன். ஏனெனில், அவற்றை விவரித்துச் சொல்லிக்கொண்டிருந்தால் அதற்கு
முடிவே இல்லை.
20.அர்ஜுனா!
உறக்கத்தை வென்றவனே! அனைத்து உயிர்களில் உள்ளங்களுக்குள்ளும் நான் அமர்ந்திருக்கிறேன்.
அனைத்து உயிர்களுக்கும், நானே முதலும், நடுவும், முடிவும் ஆகிறேன்.
21.அதிதியின்
பன்னிரண்டு புதல்வர்களுள் நான் விஷ்ணு. ஒளி வீசும் பொருட்களுள் நான் சூரியன். மருதர்களுள்
( காற்றின் வகைகள்) நான் மரீசி. நட்சத்திரங்களுள் நான் சந்திரன்.
22.வேதங்களுள்
நான் சாமவேதம். தேவர்களுள் நான் இந்திரன். புலன்களுள் நான் மனம். உயிர்களுள் நான் அவைகளின்
உணர்வு.
23.ருத்திரர்களுள்
நான் சங்கரன். யக்ஷர்களுள்ளும், ராக்ஷஸர்களுள்ளும் நான் செல்வத்தின் அதிபதியான குபேரன்.
வசுக்களுள் நான் அக்னி; மலைகளுள் நான் மேருமலை.
24.பார்த்தனே!
புரோகிதர்களுள் நான் ப்ருஹஸ்பதி. சேனைத் தலைவர்களுள் நான் ஸ்கந்தன். நீர் நிலைகளுள்
நான் சமுத்திரம்.
25.மகரிஷிகளுள்
நான் ப்ருகுமகரிஷி. ஒலிகளுள் நான் ‘ௐம்’என்னும் ஒலி. வேள்விகளுள் நான் ஜபம். மலைகளுள்
நான் இமயமலை.
26.மரங்களுள்
நான் அரசமரம். தேவரிஷிகளுள் நான் நாரதன். கந்தர்வர்களுள் நான் சித்ரரதன். சித்தர்களுள்
நான் கபிலன்.
27.குதிரைகளுள்
நான் ‘உச்சைஸ்ரவஸ்’ என்னும் குதிரை. (இது பாற்கடலை அமுதத்துக்காகக் கடைந்த போது வெளிவந்தது.)
கம்பீரமான யானைகளுள் நான் ‘ஐராவதம்’. மனிதர்களுள் நான் அரசன்.
28.ஆயுதங்களுள்
நான் வஜ்ராயுதம். பசுக்களுள் நான் காமதேனு. பிறப்பின் காரணங்களுள் நான் மன்மதன். சர்ப்பங்களுள்
நான் வாசுகி.
29.நாகங்களுள்
நான் அனந்தன். நீர்களுக்குள் நான் சமுத்திரத்தின் தலைவனாகிய வருணன். பித்ருக்களுள்
நான் அவர்களின் தலைவனாகிய அர்யமா. நீதி வழங்குபவர்களுள் நான் யம தர்மராஜன்.
30.அசுரர்களுள்
நான் ப்ரஹலாதன். கட்டுப்படுத்தும் பொருட்களுள்
நான் காலம். விலங்குகளுள் நான் சிங்கம். பறவைகளுள் நான் கருடன்.
31.தூய்மைப்படுத்துபவர்களுள்
நான் காற்று. ஆயுதம் ஏந்தியவர்களுள் நான் ராமன். நீரில் வாழும் உயிர்களுள் நான் முதலை.
பாய்ந்தோடும் நதிகளுள் நான் கங்கை.
32.அர்ஜுனா!
படைப்பின் முதலும், நடுவும், முடிவும் நான் தான். கல்விகளுள் நான் ஆன்மாவைப்பற்றிய
கல்வி. வாதங்களுள் நான் தர்க்கம்.
33.எழுத்துகளுள்
அகாரம் நான். இலக்கணத் தொகைகளுள் நான் ‘த்வந்த்வம்’ ( உம்மைத்தொகை). முடிவற்ற காலம்
நான். படைப்பாளிகளுள் நான் பிரம்மா.
34.அனைத்தையும்
கவர்ந்து செல்லும் மரணம் நான். இனி வரப்போகும்
எதிர்காலத்தின் மூலம் நான். புகழில், அதற்குக் காரணமாகிய இனிய சொல் நான். பெண்களின்
குணங்களுள் நினைவாற்றல், புத்தி, தைரியம், மன்னிப்பு ஆகிய குணங்கள் நான் தான்.
35.சாம
வேதப்பாடல்களுள் நான் ப்ருஹத்சாமம். கவிதையின் சந்தங்களுள் நான் காயத்ரி. மாதங்களுள்
நான் மார்கழி, பருவங்களுள் நான் வசந்தகாலம்.
36.ஏமாற்றுபவைகளுள்
நான் சூதாட்டம். பிரகாசமானவற்றின் பிரகாசம் நான். வெற்றியாளர்களின் வெற்றி நான். உறுதியுடையவர்களின்
தீர்மானமும், நல்லவர்களின் நற்குணங்களும் நான் தான்.
37.விருஷ்ணி
குலத்தவர்களுள் நான் கிருஷ்ணன். பாண்டவர்களுள் நான் அர்ஜுனன். முனிவர்களுள் நான் வேதவ்யாஸன்.
மதி நுட்பம் நிறைந்தவர்களுள் நான் சுக்ராச்சாரியன்.
38.ஒழுங்கை
நிலை நாட்டுவதில் நான் தண்டனை ஆக இருக்கிறேன். வெற்றி வேண்டுவோருக்குள் நன்னடத்தையாக
இருக்கிறேன். ரகசியங்களுள் நான் மௌனமாகவும், ஞானிகளுள் அவர்களுடைய ஞானமாகவும் இருக்கிறேன்.
39.
அனைத்து உயிர்களுக்கும் நான் விதையாக இருக்கிறேன், அர்ஜுனா! உயிருள்ள பொருளோ, உயிரற்ற
பொருளோ, நான் இல்லாமல் இருக்க முடியாது.
40.பரந்தபனே!
என்னுடைய மகிமைகளுக்கு முடிவே இல்லை. நான் இப்போது உனக்குக்கூறியதெல்லாம் என்னுடைய
அளவிடமுடியாத மகிமைகளின் ஒரு சிறு பகுதி தான்.
41.நீ,
அழகான, சிறந்த, வலிமையுள்ள எந்தப்பொருளைப் பார்த்தாலும், அது என் மகிமைகளில் இருந்து வந்த ஒரு சிறிய சுடர் என்பதை அறிவாய்.
42.இவை
அனைத்தையும் தெரிந்து கொள்வதற்கு என்ன அவசியம்
இருக்கிறது? என்னில் ஒரு மிகச்சிறிய பகுதியின் மூலம் இந்தப் படைப்பனைத்திலும், பரந்து
இருந்து, அதை நான் காப்பாற்றுகிறேன். (இதைத் தெரிந்து கொண்டாலே போதும்.)
சுபம்
https://www.blogger.com/blog/post/edit/8301939112718011873/3776267746676466787
https://www.blogger.com/blog/posts/8301939112718011873