புதன், 31 ஜனவரி, 2024

                                                             ஸ்ரீமத் பகவத் கீதை

 பதினெட்டாவது அத்தியாயம்

 மோக்ஷ ஸந்நியாஸ யோகம்

 துறத்தல் மற்றும் சரணாகதி


(எந்த நிலையிலும், நமக்கென்று விதிக்கப்பட்ட கடமைகளை, அவற்றின் பலனை எதிர்பார்க்காமல் செய்ய வேண்டும் என்பதும்,  இறைவனை முழுமையாகச் சரணடைந்து விட்டால், அவன் நம்மை எல்லா பாவங்களில் இருந்தும் விடுவிப்பான் என்பதும் இந்த அத்தியாயத்தின் சாரமான கருத்துக்கள்.)

 1. அர்ஜுனன் கேட்டான்: ”வலிமையான தோள்களுடைய க்ருஷ்ணா! ‘ஸந்நியாசம்’ என்றால் என்ன என்பதையும், ‘தியாகம்’ என்றால் என்ன என்பதையும் புரிந்து கொள்ள விரும்புகிறேன். புலன்களுக்குத் தலைவனான ஹ்ருஷீகேசா! அவையிரண்டிற்கும் உள்ள வித்தியாசத்தையும் அறிய விரும்புகிறேன்.”

 2.  ஸ்ரீ பகவான் கூறினார்: “ பலனை எதிர்பார்த்துச் செய்யும் செயல்களைத் துறப்பதை ‘ஸந்நியாசம்’ என்றும், செய்யும் செயல்களின் பலன்களைத் துறப்பதைத் ‘தியாகம்’ என்றும் கற்றறிந்த அறிஞர்கள் கூறுகிறார்கள்.

 3.  கற்றறிந்த சிலர், அனைத்து வகையான செயல்களையுமே, தீமை என எண்ணித் துறந்து விட வேண்டும் என்கிறார்கள். வேறு சில அறிஞர்கள், வேள்விகள், தானம், தவம் ஆகியவற்றை ஒரு போதும் விட்டு விடக்கூடாது என்று கூறுகிறார்கள்.

 4.  பரத வம்சத்தவருள் சிறந்தவனே! மனிதருக்குள் புலியைப் போன்றவனே! இப்போது என்னுடைய முடிவான கருத்தைக் கேள்! தியாகம் மூன்று வகைப்பட்டது.

 5.  வேள்விகள், தானம், தவம் ஆகியவற்றை ஒரு பொழுதும் விட்டு விடக்கூடாது. உண்மையில், கற்றுணர்ந்த சான்றோரைக்கூட இந்தச் செயல்கள் புனிதப் படுத்தக்கூடியவை.

 6.  இந்த செயல்கள், பற்று இல்லாமல், பலனை எதிர்பார்க்காமல் செய்யப்பட வேண்டும். இது தான் என்னுடைய, இறுதியான, சிறந்த தீர்ப்பு.

 7.  அவரவருக்கு விதிக்கப்பட்ட செயல்களை ஒரு போதும் செய்யாமல் விடக்கூடாது. தவறான புரிதலால், இந்தச் செயல்களைத் துறப்பது தமோ குணத்தவர்கள் செய்வது. அது அறியாமை.

 8.  அதிக சிரமப் பட வேண்டியிருக்கிறது என்பதாலோ, உடலுக்குத் துன்பம் உண்டாகிறது என்பதாலோ, தனது கடமைகளைச் செய்யாமல் விடுபவர் ரஜோகுணம் மேலோங்கியவர். அத்தகைய துறத்தல், நன்மையும் பயக்காது; மேல் நிலைக்கும் இட்டுச்செல்லாது.

 9.  தங்களுக்கு விதிக்கப்பட்ட கடமை என்பதற்காகச் செயல்களைச் செய்து, அவை கொடுக்கப்போகும் பலன்களின் மேல்  பற்றில்லாமல், இருப்பது தான், அர்ஜுனா! ‘தியாகம்’ எனப்படும்.

 10.              பிடிக்காத செயல்களைத் தவிர்க்காமலும், பிடித்த செயல்களைத் தேடிப்போய்ச் செய்யாமலும் இருப்பது தான் உண்மையான தியாகம். அப்படிச் செய்யும் ஸத்வ குணம் நிறைந்த புத்திசாலிகளுக்குச் சந்தேகமே கிடையாது.

 11.              எந்த உயிருமே செயல் செய்வதை நிறுத்தவே முடியாது. ஆயினும், தங்கள் செயல்களின் பலன்களைத் துறந்தவர்கள், உண்மையில் துறவிகள் என்று கருதப் படுகிறார்கள்.

 12.              பலன்களை விரும்பிச் செயல்களைச் செய்பவர்களுக்கு, விரும்பத்தக்க பலன்கள், விரும்பத்தகாத பலன்கள் மற்றும் இரண்டும் கலந்த பலன்கள், என்ற மூன்று வித பலன்கள் மரணத்துக்குப் பின் கூட வந்து சேரும். ஆனால், செயல்களின் பலன்களைத் துறந்தவர்களுக்கு, இந்தப் பிறப்பிலோ, இனி வரும் பிறப்புகளிலோ, எந்தப் பலனும் வந்து சேர்வதில்லை.

 13.              வலிமையான தோள்களை உடைய அர்ஜுனா! ஸாங்கியத்தின் படி, எந்த ஒரு செயலையும் நல்ல விதமாகச் செய்து முடிப்பதற்கு, ஐந்து காரணிகள் வேண்டும். அவற்றைப்பற்றிக் கூறுகிறேன், கேள்!

 14.              இந்த உடல், செயலைச் செய்பவன், அவனுடைய புலன்கள், அவன் மேற்கொள்ளும் முயற்சி மற்றும் இறைவனின் அருள், ஆகியவை தான் அந்த ஐந்து காரணிகள்.

 15.              உடல், மொழி, மற்றும் மனத்தால் செய்யப்படும் எந்த ஒரு செயலையும், அது சரியானதாக இருந்தாலும், தவறானதாக இருந்தாலும், மேற்கூறிய ஐந்து காரணிகளே செய்கின்றன.

 16.              அறிவுத்தூய்மை இல்லாத மூடர்கள், எல்லாச் செயல்களையும் ஆத்மா மட்டுமே செய்கிறது என்று கருதுகின்றனர்.

 17.              எல்லாவற்றையும் செய்பவன் நான் தான்,  என்னும் அகங்காரத்தை ஒழித்தவர்களும், எதிலும் பற்றில்லாத அறிவாளிகளும், ஏதாவது உயிரைக்கொன்றால் கூட, அவர்கள் கொன்றவர் ஆகமாட்டார்கள்; அவர்களை, அவர்களுடைய செயல்கள் கட்டுப்படுத்த மாட்டா.

 18.              அறிவு, அறியப்படும் பொருள், அறிபவன் ஆகிய மூன்று காரணிகள் தாம்,  ஒரு செயலைச் செய்யத்தூண்டுபவை.  அந்தச் செயலைச் செய்யத் தேவையான உபகரணம், அந்தச் செயல், அதைச் செய்பவன் ஆகிய மூன்றும், அந்தச் செயலைச் செய்விக்கின்றன.

 19.              அறிவு, செயல், அதைச் செய்பவன் ஆகிய இம்மூன்று காரணிகளும், சாங்கிய தத்துவத்தின் படி, அவரவர்களின் மூன்று விதமான இயல்பைப் பொருத்து, மூவகைப்படும். அவற்றின் வேறுபாடுகளை விளக்குகிறேன், கேள்!

 20.              பிரிவற்ற, அழிவற்ற, ஒரே பரம்பொருள் தான் அனைத்து உயிர்களிலும் காணப்படுகிறது என்பதைப் புரிந்து கொள்பவனின் அறிவு ஸாத்விகமானது.

 21.              பலவேறு உடல்களில் உள்ள உயிர்கள் எல்லாம், வேறு வேறு என்றும், அவைகளுக்குள் எந்தத் தொடர்பும் இல்லை என்றும் எண்ணுபவர்களுடைய அறிவு ரஜோ குணத்தைச் சேர்ந்தது.

 22.              அறிவுக்குப் புறம்பாகவும், உண்மையின் அடிப்படையில் இல்லாமலும், பிரிவினை வாதத்தில் ஆழ்ந்து, எல்லாமே பிரிந்து கிடப்பது போல் எண்ணிக்கொண்டிருப்பவரின் அறிவு தாமஸ வகையைச் சேர்ந்தது.

 23.              சாஸ்திரங்களில் சொல்லப்பட்டுள்ள படி, விருப்பு, வெறுப்பு இன்றிப், பலன்கள் மீது ஆசையின்றிச் செய்யப்படும் செயல் ஸாத்விகமானது.

 24.              சுய நலத்தினால் உந்தப்பட்டு, கர்வத்துடனும், நிறைய சிரமத்துடனும் செய்யப்படும் செயல் ரஜோ குணத்தவர்கள் செய்வது.

 25.              தன்னால் அது முடியுமா என்று யோசிக்காமல், அதன் விளைவுகளைப்பற்றியோ, அதனால் ஏற்படக்கூடும் இழப்பைப் பற்றியோ அல்லது பிறருக்கு உண்டாகும் தீங்கைப் பற்றியோ கவலைப்படாமல், தவறான அபிப்பிராயத்தால் உந்தப்பட்டு, செய்யப்படும் செயல் தமோ குணத்தவர்கள் செய்வது.

 26.              தன் முனைப்போ, பற்றோ இன்றி, மிகுந்த உற்சாகத்துடனும், திடமான தீர்மானத்துடனும், வெற்றியிலும், தோல்வியிலும் ஒரே மாதிரி மன நிலையுடன் செய்யப்படும் செயல்கள் ஸாத்வீகமானவை.

 27.              தன் செயலுக்கான பலனை ஏக்கத்துடன் எதிர் பார்த்துக்கொண்டு, பேராசையுடனும், வன்முறையில் இறங்கும் இயல்புடனும், தூய்மை இல்லாமலும், இன்ப துன்பங்களினால் அலைக்கழிக்கப்பட்டு செய்யப்படும் செயல்கள், ரஜோ குணமுடையர்கள் செய்வது.

 28.              கட்டுப்பாடற்ற, கீழ்த்தரமான, பிடிவாதம் மிகுந்த, ஏமாற்றும் எண்ணம் கொண்ட, மிகவும் மெதுவாகச் செய்யக்கூடிய, நம்பிக்கையற்ற, தள்ளிப் போடும் இயல்பு கொண்ட  செயல்கள் தமோ குணத்தினர் செய்வது.

 29.              தனஞ்சயா! மூன்று விதமான குணங்களின் படி புத்தியும், தீர்மானமும் எப்படி வேறுபடுகின்றன என்பதை விவரமாகக் கூறுகிறேன், கேள்!

 30.              பார்த்தனே! எது சரியான செயல், எது தவறான செயல் என்பதைப் புரிந்து கொண்டு, எது கடமை, எது கடமையில்லை என்பதைத் தெரிந்து கொண்டு, எதைக்கண்டு, பயப்பட வேண்டும், எதைக்கண்டு பயப்பட வேண்டியதில்லை என்ற தெளிவுடன், எது நம்மைக் கட்டுப்படுத்தும், எது நம்மை விடுவிக்கும் என்ற புரிதலுடன், செயல்படும் புத்தி, ஸாத்வீகமானது.

 31.              பார்த்தனே! எவை அறத்துக்குட்பட்ட செயல்கள், எவை அறமற்ற செயல்கள் என்று புரிந்து கொள்ளாமல், எது சரியான நடத்தை, எது தவறான நடத்தை என்பதை அறியாத குழப்பத்துடன் செயல்படும் போது புத்தி ரஜோ குணத்துக்குட்பட்டிருக்கிறது.

 32.              பார்த்தனே! அறியாமையால் மூடப்பட்டிருப்பதால், அதர்மத்தை தர்மமென்றும், பொய்யை மெய்யென்றும் குழப்பிக் கொள்ளும் புத்தி, தமோ குணத்தைச் சார்ந்தது.

  33.              யோகப்பயிற்சியினால் பெற்ற, அலைபாயாத மன உறுதி தான்,  மனம், உயிர்க்காற்று மற்றும் புலன்களின் செயல்பாடுகளைத் தாங்குகிறது. அத்தகைய மனோபலமே, ஸாத்வீகமான உறுதி எனப்படுகிறது.

 34.              அதே நிலையான மன உறுதியுடன் ஒருவன் பலன்கள் மேல் பற்று வைத்துத், தன் கடமையாற்றும் போதோ, இன்பம் துய்க்கும் போதோ, செல்வம் ஈட்டும் போதோ, அவனுடைய உறுதி ரஜோ குணத்தைச் சார்ந்ததாகிறது.

 35.              பார்த்தனே! கனவில் ஆழ்ந்து, பயம், சோகம், ஏமாற்றம், அகந்தை ஆகியவற்றை விடாமல் பிடித்துக்கொண்டு, அறிவற்ற நிலையில் இருக்கும் உறுதி, தமோ குணத்தைச் சார்ந்ததாகி விடுகிறது.

 36.              அர்ஜுனா! உயிர்கள் அனைத்தும் மூன்று விதமான சுகங்களை அனுபவித்து, இறுதியில், துன்பங்களெல்லாம் முடிந்த நிலையை அடைகின்றன. அந்த மூன்று விதமான சுகங்களைப் பற்றிக் கூறுகிறேன், கேள்!

 37.              தொடக்கத்தில் விஷம் போலக் கசப்பானதாகவும், போகப்போக, அமுதம் போல இனிமையானதாகவும் இருக்கும் அனுபவம் ஸாத்வீக சுகம் எனப்படுகிறது. அது , தனது ஆத்மா பற்றிய உணர்வில் ஆழ்ந்திருக்கும் தூய அறிவால் உருவாகிறது. 

 38.              புலன்களால் அனுபவிக்கப்படும் இன்பம் ரஜோகுணத்தைச் சார்ந்தது. அது தொடக்கத்தில் அமுதம் போல் இனிக்கும், ஆனால் போகப்போக விஷம் போலக் கசக்கும்.

 39.              தூக்கம், சோம்பல், அலட்சியம் ஆகியவற்றால், தொடக்கத்திலிருந்து முடிவு வரை, ஆத்மாவை மறைத்திருக்கும் இன்பம் தமோகுணத்தைச் சார்ந்தது.

 40.              இயற்கையில் உண்டாகும் இந்த மூன்று வகையான குணங்களின் பாதிப்பில் இருந்து இந்தப்பூமியில் உள்ள உயிர்களோ, அல்லது தேவலோகத்தில் உள்ளவர்களோ, தப்பிக்க முடியாது.

 41.              பரந்தபனே! அந்தணர்கள், க்ஷத்திரியர்கள், வைஸ்யர்கள், சூத்திரர்கள் ஆகியோருக்கான கடமைகள், மூவகை குணங்களுக்குட்பட்ட அவரவர் இயல்பைப் பொருத்து வகுக்கப்பட்டுள்ளன. ( அவர்களுடைய பிறப்பைப் பொருத்து அல்ல.)

 42.              சலனமற்ற அமைதி, கட்டுப்பாடு, தவம், தூய்மை, பொறுமை, நேர்மை, அறிவு, ஞானம், இனிவரப்போகும் பிறவிகள் பற்றிய நம்பிக்கை ஆகியவை அந்தணர்களுக்கு இயல்பாக அமைந்த குணங்கள்.

 43.              வீரம், வலிமை, கஷ்டத்தைத் தாங்கும் பொறுமை, ஆயுதங்களைப் பயன்படுத்தும் திறமை, போர்க்களத்தில் இருந்து பின்வாங்காத உறுதி, தானம் செய்வதில் தாராளம், தலைமைப் பண்புகள் ஆகியவை க்ஷத்திரியர்களுக்கு இயல்பாய் அமைந்த குணங்கள்.

 44.               விவசாயம், பசுக்களைப் பேணுதல், வியாபாரம் ஆகியவை வைஸ்யர்களுக்கான இயல்பான தொழில்கள். உடல் உழைப்பு மூலம் சேவை செய்வது , சூத்திரர்களுக்கான குணங்களை உடையவர்களுக்கு இயல்பாக அமைந்ததாகும்.

 45.              அவரவர் இயல்புக்கேற்றபடி அமைந்த கடமைகளை நிறைவேற்றுவதால், மனிதர்கள் முழுமை பெறுகிறார்கள். தன் கடமையைச் சரியாக நிறைவேற்றுவதால் ஒருவன் எவ்வாறு முழுமையடைகிறான் என்று கூறுகிறேன், கேள்!

 46.              தனக்கு இயல்பாய் அமைந்த கடமைகளைச் சரிவரச் செய்வதால், ஒருவன்  எல்லா உயிர்களின் இருப்புக்குக் காரணமானவரும், இந்தப் பிரபஞ்சம் முழுதும் வியாபித்திருப்பவருமான இறைவனையே வழிபடுகிறான். இப்படிப்பட்ட செயல் புரிவதனால் ஒருவன் எளிதில் முழுமை அடைந்து விடுகிறான்.

 47.              பிறருடைய தர்மத்தின் படி அமைந்த செயல்களைச் சிறப்பாகச் செய்வதை விடத் தனக்கு இயற்கையாக அமைந்த தர்மத்தின் படி அமைந்த செயல்களைச் சுமாராகச் செய்வதே சிறந்தது.  அவரவர் கடமையைச் செய்வதால் ஒருவனுக்கு எப்போதும் பாவம் உண்டாவதில்லை.

 48.              ஒருவன் தனக்கென்று இயல்பாக அமைந்த செயல்களை, அவற்றில் சில குறைகள் இருந்தால் கூட, விட்டுவிடக் கூடாது. குந்தியின் புதல்வனே! உண்மையில், புகையானது நெருப்பைச் சூழ்ந்திருப்பதைப் போல, எல்லாச் செயல்களையும், எதாவது ஒரு தீமை சூழ்ந்திருக்கிறது.

 49.                எதிலும் பற்றில்லாமல், தன் மனதைக் கட்டுக்குள் வைத்து, ஆசையை வென்றவர்கள், துறவு நிலையில் இருப்பதால், செயல் செய்தாக வேண்டிய நிலையில் இருந்து விடுதலை பெறுகிறார்கள்.

 50.              குந்தியின் புதல்வனே! ஆன்மீக ஞானத்தில் உறுதியாக நிலை பெற்றிருப்பவன், எவ்வாறு சித்தி அடைவதுடன், பரம்பொருளையும் அடைகிறான் என்பதைச் சுருக்கமாகக் கூறுகிறேன், கேள்!

 51.              ஒருவன் தூய்மையான புத்தியுடன், தன் புலன்களை உறுதியாகக் கட்டுப்படுத்தி, புலன்களால்  அனுபவிக்கும் ஓசை முதலியவற்றில் கவனத்தைச் சிதற விடாமல், விருப்பு, வெறுப்பு ஆகியவற்றைத் தூர எறிந்து விட்டானானால், அவன் பிரம்மத்தை அடைவதற்குத் தகுதி படைத்தவனாகிறான்.

 52.              அப்படிப்பட்ட ஒருவன் தனிமையில் ஆனந்திக்கிறான், குறைவாக உண்கிறான், உடலைக்கட்டுப்படுத்துகிறான், யார் மேலும் பாரபட்சமின்றி இருக்கிறான்.

 53.              தான் என்ற அகங்காரம், வன்முறையில் ஈடுபாடு, அகந்தை, ஆசை, பொருட்களின் மேல் பற்று, சுய நலம் ஆகியவை இல்லாமல், அமைதியில் ஆழ்ந்திருப்பவன் பிரம்மத்துடன் இணையத் தகுதி பெற்றவனாகிறான்.

 54.              பிரம்மத்தை உணர்ந்த உன்னத நிலையில் இருக்கும் யோகியானவன், மனதளவில் அமைதி பெற்று, எதற்கும் வருந்தாமல், எதையும் விரும்பாமல், எல்லா உயிர்களையும் சமமாகக்கருதி, என் மேல் மகத்தான அன்பு கொள்கிறான்.

 55.              என் மேல் அன்பும், பக்தியும் உடையவன் நான் யார் என்பதை உள்ளபடி அறிகிறான். என்னை அறிந்த பின், என்னுடைய பக்தன் என் உணர்வில் புகுந்து விடுகிறான்.

 56.              எல்லாவிதமான செயல்களையும் செய்து கொண்டிருந்தாலும், என் பக்தர்கள், என்னில் சரணடைகிறார்கள். என் அருளால், அவர்கள் நிரந்தரமான, அழிவற்ற இடத்தை அடைகிறார்கள்.

 57.              என்னையே உனது மகத்தான லட்சியமாக ஆக்கி, உன்னுடைய எல்லாச் செயல்களையும் உணர்வு பூர்வமாக, எனக்கு அர்ப்பணித்து விடு. புத்தி யோகத்தின் உதவியால், உனது உணர்வை என்னில் எப்போதும் அமிழ்ந்திருக்கச் செய்.

 58.              உன் மனத்தை என்னில் எப்போதும் வைத்தால், என் அருளால், நீ எல்லா விதமான தடைகளையும், சிரமங்களையும் கடந்து விடுவாய். ஆனால், அகங்காரத்தினால், என் அறிவுரைகளைக் கேட்க வில்லையென்றால், நீ அழிந்து போவாய்.

 59.              ஒரு வேளை, அகந்தையினால், ‘நான் போரிட மாட்டேன்’ என்று நீ நினைத்தாயானால், அந்த முடிவு வீணானது தான். ஏனென்றால், உன்னுடைய இயல்பே உன்னைப் போரிடும் படி கட்டாயப் படுத்தும்.

 60.              குந்தியின் புதல்வனே! மோகத்தின் பால் பட்டு, நீ செய்ய விரும்பாத அந்தச் செயலைச் செய்வதற்கு, உன் இயற்கையான குணங்களே உன்னை உந்தித் தள்ளும்.

 61.              அர்ஜுனா! பரமாத்மா தான் எல்லா உயிர்களின் உள்ளத்துள்ளும் உறைகிறான். மாயை என்னும் இயந்திரத்தின் மேல் அமர்ந்திருக்கும் மனிதர்களை,  அவரவருடைய வினைப்பயனின் படி, அலைக்கழிக்கிறான்.

 62.              பரத வம்சத்தோன்றலே! அந்தப் பரம்பொருளிடம் உன்னை முழுமையாக ஒப்படைத்து, அவனிடம் சரணடைந்து விடு. அவனருளால், நீ முழுமையான அமைதியையும், நிரந்தரமான இடத்தையும் பெறுவாய்.

 63.              இவ்வாறாக, மிக மிக ரகசியமான இந்த ஞானத்தை விரிவாக உனக்கு விளக்கியிருக்கிறேன். இதைப் பற்றி ஆழ்ந்து சிந்தித்து, அதன் பின்னர், உன் விருப்பம் போலச் செய்.

 64.              மிகவும் ரகசியமான, என்னுடைய இந்த மேலான உபதேசத்தை, மீண்டும் கேள். நீ எனக்கு மிகவும் பிரியமானவன் என்பதால் உன் நன்மைக்காக வேண்டி, உனக்கு இதைச் சொல்கிறேன்.  

 65.              எப்போதும் என்னையே நினை; என்னிடம் பக்தியுடன் இருந்து என்னை வணங்கு. அவ்வாறு செய்வதால், நீ நிச்சயம் என்னிடம் வந்து சேர்வாய். நீ எனக்கு மிகவும் பிரியமானவன் ஆகையால், உனக்கு இந்த சத்தியம் செய்து கொடுக்கிறேன்.

 66.              எல்லா தர்மங்களையும் விட்டு விட்டு, என்னை மட்டும் சரணடைவாய். உன்னை எல்லா பாவங்களில் இருந்தும் நான் விடுவிப்பேன்; பயப்படாதே!

 67.              தவ நெறியற்றவர்களுக்கும், பக்தியில்லாதவர்களுக்கும் இந்த உபதேசங்களை ஒரு போதும் கூறக்கூடாது. ஆன்மீக விஷயங்களைக் கேட்க விருப்பம் இல்லாதவர்களுக்கும், என் மேல் பொறாமை கொண்டவர்களுக்கும் இதைச் சொல்லவே கூடாது.

 68.              என் பக்தர்களுக்குள்ளே, இந்த ரகசியமான ஞானத்தைப் பிறருக்குக் கற்பிப்பவர்கள் தான் என் மேல்  மிகுந்த பக்தி செலுத்துபவர்கள் ஆகிறார்கள். சந்தேகமில்லாமல், அவர்கள் என்னிடம் வந்து விடுவார்கள்.

 69.              அவர்களைக் காட்டிலும் எனக்கு அன்பான சேவை செய்பவர் யாரும் இல்லை. இந்த உலகில் அவர்களை விட எனக்குப் பிரியமானவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள்.

 70.              யாரெல்லாம் நம் இருவரிடையே நடந்த இந்தப் புனிதமான உரையாடலைப் படிக்கிறார்களோ, அவர்கள், ஞான வேள்வி மூலம் என்னை வழிபடுகிறார்கள் என்பது என் கருத்து.

 71.              சிரத்தையுடனும், பொறாமையில்லாமலும், இந்த ஞானத்தைக் காதால் மட்டும் கேட்பவர்கள் கூட, அவரவர்கள் செய்த பாவங்களில் இருந்து விடுபட்டு, பக்தர்கள் வசிக்கும் மங்களகரமான இடங்களை அடைகிறார்கள்.

 72.              அர்ஜுனா! நான் சொன்னதை எல்லாம் முழு கவனத்துடன் கேட்டாயா? பார்த்தனே! உன்னுடைய அறியாமையும், மோகமும் அழிந்தனவா?”

 73.              அர்ஜுனன் கூறினான்: “அச்சுதனே! உன் அருளால், என் மோகம் விலகி விட்டது. அறிவு வந்து விட்டது. எல்லா சந்தேகங்களில் இருந்தும் விடுபட்டு விட்டேன். இனி, உன் சொற்படி நடக்கிறேன்.”

 74.              ஸஞ்சயன் கூறினார்: “இவ்வாறு, வாசுதேவருக்கும் (க்ருஷ்ணன்), உன்னதமான மனம் கொண்ட பார்த்தனுக்கும் இடையில் நடந்த அற்புதமான,  மயிர்க்கூச்செறியச் செய்யும் உரையாடலைக் கேட்டேன்.

 75.              வேதவ்யாஸரின் அருளால், இந்த உயரிய, பரம ரகசியமான யோகத்தைப் பற்றி, யோகேஸ்வரனான ஸ்ரீ க்ருஷ்ணனே, விளக்கியதை, நேரடியாக் கேட்டேன்.

 76.              அரசே! இந்த கேசவனுக்கும், அர்ஜுனனுக்கும் இடையில் நடந்த இந்த அற்புதமான உரையாடலை நினைத்து நினைத்து, மீண்டும் மீண்டும் ஆனந்தப்படுகிறேன்.

 77.              அரசே! மேலும், ஹரியின் அந்த வியப்பூட்டக்கூடிய அற்புதமான விஸ்வரூபத்தை நினைத்து நினைத்து, மீண்டும் மீண்டும், மகிழ்கிறேன்.

 78.              எங்கெல்லாம் யோகேஸ்வரரான ஸ்ரீக்ருஷ்ணரும், வில்லை ஏந்திய பார்த்தனும் இருக்கிறார்களோ, அங்கெல்லாம், செழிப்பும், வெற்றியும், செல்வமும், மாறாத தர்மமும் நிச்சயம் இருக்கும் என்பது என் கருத்து.

 

சுபம்

 

https://www.blogger.com/blog/post/edit/8301939112718011873/1919827326721274176

https://www.blogger.com/blog/posts/8301939112718011873

 

 

 

 ஸ்ரீமத் பகவத் கீதை

பதினேழாவது அத்தியாயம்

 ஸ்ரத்தா த்ரய விபாக யோகம்

 ஸ்ரத்தையின் மூன்று வகைகள்


(இந்த அத்தியாயத்தில், மூன்று வகையான சிரத்தைகளைப் பற்றியும், அவற்றின் இயல்பைப் பற்றியும், கூறுவது மட்டும் அன்றி, மூன்று வகையான உணவுப் பழக்கங்களைப் பற்றியும், மூன்று வகையான வேள்விகளைப் பற்றியும், உடலினால் செய்யும் தவம், வாக்கினால் செய்யும் தவம், மனத்தினால் செய்யும் தவம் ஆகியவை பற்றியும், மூன்று விதமான தானங்கள் பற்றியும், ஸ்ரீ க்ருஷ்ணர் விளக்குகிறார்.)

1. அர்ஜுனன் கேட்டான்: “க்ருஷ்ணா! சாஸ்திரங்களில் சொல்லப்பட்டுள்ள விதிமுறைகளைப் பின்பற்றாமல், அதே சமயம் மிகவும் சிரத்தையுடன் வழிபடுவோரின் நிலை யாது? அவர்களின் சிரத்தை எந்த குணத்தின் பாற்பட்டது –– ஸத்வ குணத்தையா, ரஜோ குணத்தையா அல்லது தமோ குணத்தையா?”

 

2.     ஸ்ரீ பகவான் கூறினார்: “எல்லா மனிதர்களுமே, இயற்கையாகவே, சிரத்தையுடன் தான் பிறக்கிறார்கள். அது, ஸத்வ குணத்தைச் சார்ந்ததாக இருக்கலாம், ரஜோ குணத்தைச் சார்ந்ததாக இருக்கலாம்,  அல்லது தமோ குணத்தைச் சார்ந்ததாக இருக்கலாம். இந்த மூன்று வகையான சிரத்தைகளைப் பற்றிக் கூறுகிறேன், கேள்.

 

3.      எல்லா மனிதர்களின் சிரத்தையும் அவர்களுடைய மன இயல்பைப் பொருத்தது தான். எல்லாருக்குள்ளும் சிரத்தை இருக்கிறது. ஒரு மனிதனின் சிரத்தை எப்படிப்பட்டதோ, அவன்  அப்படிப்பட்ட மனிதனாகத்தான் இருப்பான்.

 

4.     ஸத்வ குணமுடையவர்கள்  தெய்வங்களை வழிபடுவார்கள். ரஜோ குணமுடையவர்கள், செல்வத்துக்கும் வலிமைக்கும் அதிபதிகளான யக்ஷர்களையும், ராக்ஷஸர்களையும் வழிபடுவார்கள். தமோ குணமுடையவர்கள், பேய், பூதங்களை வழிபடுவார்கள்.

 

5.     ஆசையாலும், அதிகப் பற்றினாலும், தூண்டப்பட்டு, பெருமைக்காகவும், தன் முனைப்பினாலும், சிலர் சாஸ்திரங்களில் சொல்லப்படாத, கடுமையான தவம் செய்வார்கள். 

 

6.     அப்படிச் செய்பவர்கள் தங்கள் புலன்களைத் துன்புறுத்துவது மட்டும் அல்லாமல், அவர்களுக்குள் இருக்கும் பரமாத்மாவான எனக்கும், துன்பம் விளைவிக்கிறார்கள். இவ்வாறான அறிவற்ற செயலைச் செய்பவர்கள் அசுர இயல்பினர் என்று அறிந்து கொள்.

 

7.     மனிதர்கள் விரும்பி உண்ணும் உணவிலும் இப்படிப்பட்ட வேறுபாடுகள் உண்டு. இதே போல் தான், அவர்கள் செய்யும் வேள்விகள், தவம், தானம் ஆகியவையும் பல தரப்பட்டவை. அந்த வேறுபாடுகளைப்பற்றிக் கூறுகிறேன், கேள்.

 

8.     ஸாத்வீக வழியில் செல்பவர்கள், நீண்ட ஆயுளைத்தரக்கூடிய, நற்குணங்களை வளர்க்கக்கூடிய,  ஆரோக்கியம், மகிழ்ச்சி, திருப்தி ஆகியவைகளைத் தரக்கூடிய உணவு வகைகளை விரும்பி உண்கிறார்கள்.  அத்தகைய உணவு வகைகள், சாறு நிரம்பியும், சதைப்பற்று உள்ளவையாகவும், ஊட்டச்சத்து மிக்கவையாகவும், இதயத்துக்கு நன்மை பயப்பனவாகவும், அமைந்திருக்கும்.

 

9.     கசப்பு, புளிப்பு, உப்பு, சூடு, காரம் ஆகியவை அதிகம் உள்ள, மிளகாய் அதிகம் கலந்த, உலர்ந்த உணவு வகைகளை ராஜஸ குணமுடையவர்கள் விரும்பி உண்கிறார்கள். இத்தகைய உணவு வகைகள், வலி, துன்பம், நோய் ஆகியவற்றை உண்டாக்கும்.

 

10.அதிகமாக வேக வைத்த, பழைய, கெட்டுப்போன, மாசுபட்ட, சுத்தமற்ற மற்றும் மீந்து விட்ட உணவு வகைகளைத் தாமஸ குணமுடையோர் விரும்பி உண்கிறார்கள்.

 

11.ஸத்வ குணமுடையவர்கள் வேள்விகள் செய்யும் போது, எந்தப் பலனையும் எதிர்பார்க்காமல், சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ள விதிமுறைகளின் படி, அதைத் தனது கடமையாக நினைத்துச் செய்வார்கள்.

 

12.பரத வம்சத்தோன்றலே! ரஜோ குணமுடையவர்கள், பொருட்களை அடைய வேண்டியும், பெருமைக்காகவும் வேள்விகள் செய்வார்கள்.

 

13.தமோ குணமுடையவர்கள் சிரத்தையில்லாமல், சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ள விதி முறைகளைப் பின்பற்றாமல், நிவேதனம் எதுவும் செய்யாமல், மந்திரங்கள் சொல்லாமல், தானம் கொடுக்காமல், வேள்விகள் செய்வார்கள்.

 

14.இறைவன், அந்தணர்கள், ஆன்மீக குரு, ஞானிகள், பெரியோர் ஆகியோரைத்  தூய்மை, எளிமை, பிரம்மச்சரியம், அஹிம்சை ஆகியவற்றுடன் வழிபடுதல், உடலினால் செய்யப்படும் தவம் எனப்படும்.

 

15.பிறருக்குத் துன்பம் தராதவையாகவும், உண்மையானவையாகவும், பிறருக்கு பாதிப்பு ஏற்படுத்தாதவையாகவும், நன்மை பயப்பனவாகவும் உள்ள சொற்களைப் பேசுவதும், வேத சாஸ்திரங்களை ஓதுவதும், வாய் வழியே செய்யும் தவமாகும்.

 

16.மனத்தினால் செய்யப்படும் தவம் என்பதாவது, ஆழ்ந்த அமைதியுடன் கூடிய சிந்தனை, மென்மை, சத்தமில்லாத அமைதி, சுய கட்டுப்பாடு, நோக்கத்தில் தூய்மை ஆகியவை ஆகும்.

 

17.எந்த விதப் பலனையும் எதிர்பார்க்காமல், இப்படிப்பட்ட மூன்று வகையான தவத்தில் ஈடுபடுபவர்கள், ஸத்வ குணம் கொண்டவர்கள் எனப்படுகிறார்கள்.

 

18.கௌரவம், மரியாதை, அன்பு ஆகியவற்றைப் பெறுவதற்காக, ஆடம்பரமாகச் செய்யும் தவம் ரஜோகுணத்தவர்கள் செய்வது. அதனால் கிடைக்கும் நன்மைகள் தாற்காலிகமானவை; மாறக்கூடியவை.

 

19.தமோ குணத்தவர்கள், குழப்பமான எண்ணங்களுடன்,   தங்களைத் தாங்களே துன்புறுத்திக் கொள்வதல்லாமல், பிறருக்கும் தீங்கு செய்யும் வண்ணம் தவம் செய்கிறார்கள்.

 

20.தானம் செய்வது நல்லது என்ற ஒரே காரணத்திற்காக, எந்தவிதமான பிரதிபலனையும் எதிர்பார்க்காமல், உரிய நேரத்தில், உரிய இடத்தில், தகுதியுள்ள மனிதருக்குக் கொடுக்கப்படும் தானம் ஸாத்விகமான தானம்.

 

21.விருப்பமில்லாமலும், பிரதிபலன் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பிலும், செய்யப்படும் தானம் ரஜோ குணத்தைச் சார்ந்தது.

 

22.தவறான நேரத்தில், தவறான இடத்தில், தகுதி யில்லாதவர்களுக்கு, மரியாதை இல்லாமல், அவமதிப்புடன் கொடுக்கப்படும் தானம் தமோ குணத்தவருக்கானது.

 

23.படைப்பின் தொடக்கத்தில் இருந்தே, ‘ஓம் தத் ஸத்’ என்னும் வார்த்தைகள் அறுதியான உண்மைப்பொருளைக் குறிக்கும் குறியீடுகள் என்று சொல்லப்பட்டு வந்திருக்கின்றன. முதன் முதலில், அவற்றில் இருந்து தான் வேதங்களும், வேதம் ஓதும் அந்தணர்களும், வேள்விகளும் வந்தன.

 

24.ஆகவே தான், பிரம்மவாதிகள்(பிரம்மத்தை அறிவதையும், அதில் ஐக்கியமாவதையும் குறிக்களாகக் கொண்டவர்கள்) வேள்வியைத் தொடங்கும் போதோ, தானம் கொடுக்கும் போதோ, தவத்தைத் தொடங்கும் போதோ, வேதங்களில் விதித்துள்ள படி, ‘ஓம்’ என்ற ஒலியுடன் தொடங்குகிறார்கள். 

 

25.மோக்ஷத்தை விரும்புவோர், உலகப்பொருட்கள் தொடர்பான ஒரு பலனையும் எதிர் பார்க்காவிட்டாலும், தவம், வேள்வி, தானம் ஆகியவை செய்யும் முன் ‘தத்’ என்ற ஒலியுடன் தொடங்குகிறார்கள்.

 

26.‘ஸத்’ என்ற வார்த்தைக்கு, ‘ நிரந்தர வாழ்வு’ மற்றும், ‘நல்லது’ என்ற பொருள் உண்டு. அர்ஜுனா! மங்களமானவற்றைக் குறிப்பதற்கும், இந்த வார்த்தை உபயோகப் படுத்தப்படுகிறது.

 

27.வேள்விகள், தவம், தானம் ஆகியவற்றில் நிலைத்திருப்பதால், ‘ஸத்’ என்ற வார்த்தை இவைகளையும் குறிக்கிறது.  ஆகவே, இந்த விஷயங்களுக்காகச் செய்யப்படும் செயல்கள், ‘ஸத்’ என்று சொல்லப்படுகின்றன.

 

28.பார்த்தனே! சிரத்தையில்லாமல் செய்யப்படும் வேள்வியோ, தவமோ, தானமோ, ‘அஸத்’ எனப்படுகிறது. அப்படிப்பட்ட செயல்களால், இந்த உலகத்திலும் பயன் இல்லை; அடுத்த உலகத்திலும் பயன் இல்லை.

 

சுபம்

 

https://www.blogger.com/blog/post/edit/8301939112718011873/8710789251708691116

https://www.blogger.com/blog/posts/8301939112718011873